தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரின் இந்த அமைச்சரவை நுழைவை எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் இதுதொடர்பாக இலங்கைத் தமிழர் உரிமை மீட்புக்குழுவின் உறுப்பினர் கோவி. லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " உதயநிதி சட்டமன்ற உறுப்பினர், அவரை அமைச்சராக்குவது என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது.
ஜெயலலிதா அமாவாசைக்கு அமாவாசை அமைச்சர்களை மாற்றினார். யாராவது ஒருத்தராவது ஏன் என்று கேட்டார்களா? திமுக என்றதுமே ஆயிரம் கேள்வி கேட்கிறீர்கள். ஜனநாயகத்துக்கு விரோதமாக ஜெயலலிதா செய்தால் இரும்பு பெண்மணி என்பார்கள். ஆனால் ஜனநாயகப்பூர்வமாக சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரை அமைச்சராக்கினால் அதில் குற்றம் சொல்வார்கள். அவர் துறையில் ஏதாவது குறை இருந்ததைக் கண்டுபிடித்து அவரை விமர்சனம் செய்தால் அதை அரசியல் ரீதியான செயல்பாடு என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் வருவதே தவறு என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதாகக் கூறுவதற்கு எந்த அளவுகோலை வைத்துள்ளீர்கள். ஆளாளுக்கு தினமும் எதையோ உருட்டிக்கொண்டு இருப்பதால் அவர்கள் தொலைக்காட்சிகளில் செய்திகள் வாயிலாக வருகிறார்கள். இதைத்தவிர அவர்கள் அதிகாரப்பூர்வமாக வாக்கு வங்கி உயர்ந்துள்ளது என்று எந்த ஆதாரமாவது உங்களிடம் இருந்தால் கொடுங்கள். நாங்கள் பாஜக வளர்கிறது என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், ஏதேனும் நிரூபிக்கப்பட்ட ஆதாரமும் தேவை. இவர்களிடம் அப்படி ஏதாவது இருக்கிறதா? தேர்தலில் நின்று தங்களின் பலத்தை இதுவரை சோதித்துள்ளார்களா? தேர்தலில் கூட கூட்டணி கிடைக்காமல் தனியாக நின்று பார்த்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்களா என்று பார்க்க வேண்டும். இவர் உருட்டல்களை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்" என்றார்.