தனது மகனுக்கு எப்படியாவது மந்திரி பதவி வாங்கிடணும்னு டெல்லியிலேயே உட்கார்ந்திருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் பா.ஜ.க. ஒரு புதிய பார்முலாவைச் சொல்லி அனுப்பியது. அதன்படி டெல்லியிலிருந்து புறப்பட்டு வந்து எடப்பாடியை சந்தித்து பா.ஜ.க. சொன்ன விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். "தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகியுள்ளார். அவரை தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக்குங்கள். அவரை ராஜ்யசபா உறுப்பினராக்குவதோடு, பா.ஜ.க.வைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனையும் ராஜ்யசபா உறுப்பினராக்கினால் அ.தி.மு.க.விற்கு அமைச்சரவையில் இரண்டு இடம் தருவதாக அமித்ஷா சொன்னார்' என டெல்லியில் நடந்ததைச் சொன்னார் பன்னீர்.
பன்னீர் சொன்ன ஃபார்முலாப்படி வைத்திலிங்கத்திற்கும் ரவீந்திரநாத்துக்கும் மந்திரி பதவி அமைச்சரவையில் இடம் என்றாலும், பா.ஜ.க.விற்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர முடியுமா? அ.தி.மு.க.வில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் என ஏகப்பட்ட பேர் ராஜ்யசபா சீட் கேட்கிறார்கள். பா.ஜ.க.விற்கு இரண்டு சீட் கொடுத்து மத்திய அமைச்சர் பதவி பெற்றால் மற்றவர்களுக்கு சீட் தர முடியாது. அத்துடன் பா.ம.க.விற்கு ராஜ்யசபா சீட் ஒன்று தருவதாக கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளோம். இருப்பது மூன்று சீட். அதில் இரண்டு பா.ஜ.க.விற்கு, ஒன்று பா.ம.க.விற்கு என்றால் அ.தி.மு.க. என்கிற கட்சி எதற்கு என்கிற கேள்வி வரும்' என எடப்பாடி பதில் சொல்லத் தயங்கினார். எடப்பாடியின் தயக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட பா.ஜ.க. மேலிடத்தின் டென்ஷன் அதிகமானது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பா.ஜ.க.வின் சொத்து. அவரை நாங்கள் தமிழகத்திற்கு தாரைவார்க்க விரும்பவில்லை. கடந்த நரேந்திரமோடி ஆட்சியில் அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் தங்களது ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்த லில் போட்டியிட்டு அமைச்சர்களாகியுள்ளனர். அவர்களது இடத்தில் ஜெய்சங்கரை நிறுத்தலாம் என முடிவு செய்துவிட்டது. தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ராஜ்யசபா உறுப்பினராக்குவது பற்றி எடப்பாடி என்ன செய்கிறார் என பார்ப்போம் என்று விட்டு விட்டது'' என்கிறார்கள் பா.ஜ.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த பா.ம.க.விற்கும் தே.மு.தி.க.விற்கும் மாநில கட்சி என்கிற தகுதியும், அவர்களது சின்னங்களான மாம்பழமும் முரசும் சுயேட்சை சின்னங்களாகிவிடும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அ.தி.மு.க. மூலம் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை அடையவேண்டும் என்கிற கட்டாயம் பா.ம.க.விற்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக எடப்பாடியிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், "நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் சோளிங்கர், பாப்பி ரெட்டிபட்டி, அரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் அ.தி.மு.க. ஜெயிக்க பா.ம.க. ஓட்டுகள்தான் காரணம். எனவே நீங்கள் ஏற்கனவே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி பா.ம.க.விற்கு ராஜ்யசபா சீட் தரவேண்டும்' என கேட்டிருக்கிறார். தே.மு.தி.க.வும் அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும்கட்சித் தயவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும் என திட்டமிடுகிறது.
அதனால்தான் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் விஜயகாந்த்தை வைத்து அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக் குமார் மற்றும் பா.ம.க. தலைவர்கள் கலந்துகொண்ட இப்தார் விருந்தை நடத்தியுள்ளது. ராஜ்யசபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எதிர்காலத்தில் நடைபெறப்போகும் தேர்தல்களைக் காட்டி அ.தி.மு.க. கூட்டணிக் கட்சி களிடையே ஒரு தற்காலிக ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. மந்திரி பதவி எதிர்பார்ப்பில் சற்றும் தளராமல் முயற்சி செய்யும் ஓ.பி.எஸ். ஒருபக்கம், ஓ.பி.எஸ். மகனுக்கு மட்டும் மந்திரி பதவி என்றால் வேண்டாம் என்கிற இ.பி.எஸ். எதிர்ப்பு மறுபக்கம் என அ.தி.மு.க. இரண்டு முகாம்களாகி விட்டது. இப்படி உடைந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ராஜ்யசபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் போன்ற எதிர்பார்ப்புகள் ஒன்றாக நிற்க வைத்துள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் தோற்கும். எனவே அதை எடப்பாடி நடத்தமாட்டார் என அ.தி.மு.க. தலைவர்களே பேசி வருகிறார்கள். ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.க.விற்கு இடம் தராவிட்டால் அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடையாது என பா.ஜ.க. சொல்கிறது. மகனுக்கு அமைச்சர் பதவி இல்லை யென்றால் அ.தி.மு.க. உடையும் என்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள். இப்படி இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.க. எந்த நகர்வை மேற்கொண்டாலும் சேதமடைவது உறுதி. இந்தச் சூழ்நிலையை எடப்பாடி எப்படி சமாளிப்பார் என ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.