Skip to main content

கலைஞரை நினைத்த நேரத்தில் சந்தித்தேன்; ஸ்டாலினுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கிறேன் - ‘கலைஞரும் நானும்’ எஸ்ஏசி நெகிழ்ச்சி!

Published on 07/10/2021 | Edited on 08/10/2021

 

ீ

 

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர், புரட்சி கரு்துக்களை தன்னுடைய திரைப்படம் வாயிலாக தெரிவித்தவர், நடிகர் விஜய்யின் தந்தை என்ற பன்முக அடையாளத்தைக் கொண்டிருப்பவர் எஸ்.ஏ. சந்திரசேகர். எம்ஜிஆர் ஆட்சியில் கலைஞருடன் இருந்து பல படங்களில் பணியாற்றியவர். கலைஞர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்ஜிஆர் அரசின் எதிர்ப்பை சம்பாதித்தவர். அதிமுக ஆட்சியில் ‘தலைவா’ படத்துக்கு விஜய் சந்தித்த எதிர்ப்பை, 40 ஆண்டுகளுக்கு முன்பே தன் படத்திற்கு எம்ஜிஆரிடம் இருந்து அந்த எதிர்ப்பை பார்த்தவர். இந்த நிலையில், கலைஞருக்கும் அவருக்கும் இடையேயான தொடர்பு, பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவரிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் தடாலடி பதில்கள் வருமாறு,

 

எம்ஜிஆர் இருந்த காலத்திலேயே திமுக முன்னாள் தலைவர் கலைஞருடன் மிக நெருக்கமாக இருந்தீர்கள். தற்போது திமுக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சி தலைமையுடன் அதே தொடர்பில் இருக்கிறீர்களா? 

 

கலைஞருடன் எனக்கு இருந்த நட்பு என்பது சினிமாவையும் தாண்டியது. வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்றாக எனக்கு மூன்று படங்களுக்கு அவர் வசனம் எழுதியிருக்கிறார். எங்கள் உறவு என்பது அரசியலையும் தாண்டியது. இத்தனை படங்களில் பணியாற்றினாலும் அவர் என்னிடம் ஒருமுறை கூட அரசியல் தொடர்பாக பேசியதில்லை. கலைஞரிடம் இருக்கும் மிக முக்கிய சிறப்பம்சம் என்றால், அவர் நட்புக்கு தருகின்ற முக்கியத்துவம். அவருடைய கடைசி காலம் வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரிடமும் நடப்பு பாராட்டினார். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்தார். அந்த வகையில் கலைஞருக்கு நிகரான ஒருவர் அரசியலில் இல்லை என்றே கூறலாம். 

 

எப்போது அவரை பார்க்க வேண்டும் என்றாலும் முன் அனுமதி பெறாமல் செல்லாம். ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என்றால், என்ன மாதிரியான முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு வாரத்திற்கு முன் அனுமதி கேட்க வேண்டும், அவர்கள் சொல்கிற நேரத்துக்குச் சென்று, அவர்கள் அழைக்கும்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு முற்றும் நேர் மாறான தன்மையுடைவர் கலைஞர். திடீர் என்று கலைஞரை பார்க்க வேண்டும் என்றால், சண்முகநாதனுக்கு ஒரு ஃபோன் போட்டு, கலைஞரை பார்க்க வேண்டும் என்று சொல்வேன். அவர், “என்னய்யா திடீர்னு இப்படி சொல்ற, நிறைய அப்பாயிண்மெண்ட் தலைவருக்கு இருக்கே” என்பார். நான், “அண்ணே வீட்டுக்கு வரேன், கலைஞரை முடிந்தால் பார்க்கிறேன், இல்லை என்றால் போகிறேன்” என்று சொல்வேன். கலைஞர் வீட்டிற்குச் சென்ற உடன் அவர், கலைஞரிடம் போய் சொல்வார். மிக சில நிமிடத்திலேயே அவர் என்னை அழைப்பார். என்ன உதவி என்றால் அந்த ஸ்பாட்டிலேயே செய்வார். 

 

அந்த விதத்தில் அவரை யாரும் ஓவர்டேக் செய்ய முடியாது. மிக அன்பாக நண்பர்களைப் பார்த்துக்கொள்வார். அந்த வகையில் என் வயதுக்கு கலைஞருடன் பேசுவது என்பது மிக எளிதாக இருந்தது. தற்போது ஸ்டாலின் சார் மிக நல்ல முறையில் ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். நண்பர்கள் மட்டத்தில் பேசும்போது அதே கருத்தைத்தான் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் உதயநிதிக்கு அடுத்த நாளே வாட்ஸ் ஆப்பில் வாழ்த்து தெரிவித்தேன். என்ன இருந்தாலும் முதல்வரை நேரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவரின் உதவியாளரிடம் அனுமதி கேட்டேன். கலைஞரை சந்திக்க வேண்டும் என்றால் ஒருமுறை அனுமதி கேட்டால், சில நாட்களிலேயே நம்முடைய தொலைபேசிக்கு கூப்பிட்டு இந்த நாளில் வர வேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் ஸ்டாலினை பார்க்க அனுமதி கேட்டு 6 மாதம் ஆகிறது. இதுவரை கிடைக்கவில்லை. 


அரசியல் தலைவருடன் நிறைய பழகியிருக்கிறீர்கள், உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? தீவிர அரசியலுக்கு வருவீர்களா, வாய்ப்பிருக்கிறதா? 

 

இந்த வயதில் நான் ஏன் இனி அரசியலுக்கு வரப் போகிறேன். அந்த மாதிரியான அரசியல் ஆசை தற்போது வரை இல்லை. நீங்கள் கூறியது போல் எம்ஜிஆரை எதிர்த்தே கலைஞருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தேன். ஒருமுறை கலைஞரை எம்ஜிஆர் ஆட்சியில் கைது செய்தபோது, அதைக் கண்டித்து 'நீதிக்கு தண்டனை' என்ற பெயரில் கலைஞர் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போன்று ஒருபக்க அளவில் செய்தித்தாளில் விளம்பரம் அளித்தேன். அப்போதே நான் யாருக்கும் பயப்படவில்லை. அந்த நேரத்தில் நான் இயக்கியிருந்த ‘நீதிக்கு தண்டனை’ படம் வெளியாகியிருந்தது. படம் நல்ல முறையில் போனதை அடுத்து, நான் காஷ்மீருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றேன். திடீரென காஷ்மீர் போகிற வழியில் டெல்லியில் தங்கிருந்தபோது சண்முகநாதனிடம் இருந்து ஃபோன் வருகிறது. “எங்கயா இருக்க,” என்றார். நான் “டெல்லியில் இருக்கேன்” என்றேன். “இங்கே பத்தி எரியுது, டெல்லியில இருக்கியா! கலைஞர் பார்க்கனும்னு சொல்றார், உடனே வா” என்றார். நான் வருவதற்குள் என் படத்தை தடை செய்ய மாநில அரசு முயன்றதும், அதற்குள் கலைஞர் கேவியட் மனு தாக்கல் செய்திருந்ததும் எனக்குத் தெரிந்தது. எனவே அப்போதே எல்லா அரசியலையும் நான் பார்த்திருக்கிறேன். 

 

 

Next Story

அப்பாவின் பேச்சை அப்பவே கேட்காத விஜய்

Published on 05/01/2023 | Edited on 06/01/2023

 

 “The criticism of Vijay; The unfulfilled dream of a doctor” - S.A. Chandrasekar

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் “விஜய்யின் சினிமா ஆசையை ஆரம்பத்தில் நிறைவேற்ற ஏன் தயக்கம் காட்டினீர்கள். அத்தோடு விஜய் நடிக்க ஆரம்பித்த பிறகு வந்த விமர்சனம் என்ன” என்ற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’ ஓடவில்லை. ஆனால் அந்த படப்பிடிப்பின் நாட்களில் விஜய்க்குள் ஒரு நடிகன் ஒரு கலைஞன் இருப்பதை நான் உணர்ந்தேன். அவனை வெளியே கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் அவரை வைத்து நான் பல படங்கள் எடுத்தேன். 

 

நாளைய தீர்ப்பு ஓடவில்லை அதனால் விமர்சனம் எதுவும் வரல., அடுத்து செந்தூர பாண்டிக்கு வரவில்லை. அது விஜயகாந்த்திற்காக ஓடியது என்று விட்டுட்டாங்க போல. அடுத்தபடியாக ரசிகன், முழுக்க முழுக்க ரொமாண்டிக் கமர்சியல் படம் 150 நாட்கள் ஓடியது. அதற்கு தான் விமர்சனம் வந்தது.  

 

நான் விஜய்யை சினிமாவுக்கு போகக் கூடாது என்று சொல்லவில்லை. என்னோட பொண்ணு மூன்று வயதில் கேன்சர் நோயால் இறந்து போயிடுச்சு. அது என்னை ஆறு மாத காலம் இயங்கவிடாமல் செய்தது. அதனால் எனக்கு விஜய்யை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. அதுவும் கேன்சர் ஸ்பெசலிஸ்ட் டாக்டராக்கி இலவச மருத்துவமனை ஒன்றை உருவாக்கி முழுக்க முழுக்க கேன்சரை குணப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். இனியொரு குழந்தை கேன்சரால் இறந்துவிடக்கூடாது என்பது என் நோக்கமாக இருந்தது.

 

விஜய்க்கு நடிப்பின் மீதே ஆர்வம் இருந்ததால் அவரது அப்பாவின் கனவு லட்சியமான கேன்சர் ஸ்பெசலிஸ்ட் டாக்டர் கனவு நிறைவேறாமல் போனது. 

 


 

Next Story

“குடும்ப உறவுகள்தான் மிகவும் முக்கியம்" - நினைவுகளைப் பகிர்ந்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

“Family relations are the most important - Director S.A.Chandrasekar shared his memories 

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவரிடம் நாம், “உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும், நீங்கள் சமூக அக்கறை உள்ள படங்கள் எடுக்க காரணம் என்னவாக இருந்தது” போன்ற கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...

 

என்னதான் அப்படி இப்படின்னு போனாலும் சண்டை சச்சரவு ஆனாலும் குடும்ப உறவுதான் முக்கியம். பணமா? பாசமா? என்று பார்த்தால் பாசம்தான் முக்கியம். பணம் பெரிசில்லை வாழ்க்கையில். உறவுகளின் முக்கியத்துவம் இப்பெல்லாம் இல்லாமல் போய்விட்டது. இப்பெல்லாம் உறவுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. கணவன் மனைவிதான் எல்லாமே என்றாகிவிட்டது. அதிகபட்சம் போனால் கூட குழந்தைகள் இருக்கிறார்கள். அவ்வளவுதான் என்று ஆகிவிட்டது. 

 

ஸ்ரீதர், கே.சங்கர், கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் உணர்வுக்கும், உறவுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தந்து படமெடுத்த சமயத்தில், நான் சினிமாவில் நுழைந்தபோது சமூக அக்கறையை மையமிட்டு படங்கள் எடுத்தேன். அதுவே எனது பாணியும் ஆகிப் போனது.

 

சட்டம் எல்லாருக்குமே சமமாக இருக்கிறது. ஆனால் வேறுபாடு ஏன் ஏற்படுகிறது என்பதை மையமிட்டு படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அது எனக்குத் தனியான அடையாளத்தை தந்தது. சட்டம் சந்திரசேகர் என்பதுதான் என் பெயராகவே இருந்தது.