Skip to main content

"அபாரம்... அற்புதம்... அடடா.." - ரிலீஸுக்கு முன்பே 'ருத்ர தாண்டவம்' படத்துக்கு ஹெச். ராஜா விமர்சனம்!!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

hk

 

நாளை மாறுநாள் (01.10.2021) வெளியாக இருக்கிற ‘ருத்ர தாண்டவம்’ படத்தை சில குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அதன் தயாரிப்பு தரப்பு சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து, படம் பார்க்க வைத்துள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்த ஹெச். ராஜா, கிருஷ்ணசாமி, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டவர்கள் படத்தைப் பற்றிய தங்களின் கருத்தை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தனர். படம் தொடர்பாக ஹெச். ராஜா கூறும்போது, "இந்தப் படத்தில் மோகன் ஜி. அவர்கள் உண்மையான ருத்ர தாண்டவத்தை ஆடியிருக்கிறார். படத்தில் தமிழகத்தில் போதை பொருட்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அப்படியே காட்டியிருக்கிறார்கள். முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும் முக்கோண படம் போட்டிருப்பார்கள். தற்போது செயற்கை கருத்தரிப்பு நிலையங்கள் மூலைக்கு மூலை அமைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம், மது போதைதான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. 

 

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு இளைஞர்களை சீரழிக்கிறார்கள். அதை இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதையும் தாண்டி மதமாற்றம் தொடர்பாக தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மதமாற்றம் விருப்பப்பட்டு நடைபெற வேண்டும், கட்டாயத்தின் பேரில் நடைபெறக் கூடாது. ஆனால் அவ்வாறு நடைபெறுவதை மிக ஆழமாக இப்படம் காட்டியுள்ளது. சாதி, மத அரசியல் செய்பவர்கள் இந்தப் படத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளார்கள். சாதாரணமாக ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையைத் தன்னுடைய சரக்கு மிடுக்கு பேச்சின் மூலம் சாதி பிரச்சனையாக மாற்றியவர்களை இந்தப் படம் கோடிட்டுக் காட்டியுள்ளது. அவர்களைத்தான் இந்தப் படம் விமர்சனம் செய்துள்ளது. எனவே யாரையும் இந்தப் படம் விமர்சனம் செய்யவில்லை. நீங்கள் கூறுவதைப்போல் குறிப்பிட்ட மதத்தை அவமானப்படுத்தவில்லை, பெருமைப்படுத்தப்பட்ட சம்பவம்தான் படத்தில் நிறைய இருக்கிறது. எனவே முந்தைய படமான ‘திரௌபதி’யை விட மிகச் சிறப்பான படத்தை நண்பர் மோகன் ஜி. கொடுத்துள்ளார்" என்றார்.