ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தைச்சேர்ந்த பவானிசாகர் ஒன்றிய அதிமுக மாணவர் அணி செயலளர் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன். இவருக்கும் கடத்தூரைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி ஆகியோரின் மகள் ஆர்.சந்தியா என்பவருக்கும் நிச்சயம் முடிந்து வரும் 12ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் ஆகியோர் தலைமையில் இவர்களது திருமணம் நடைபற இருந்தது. இதற்கான திருமண அழைப்பிதழ்களும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டது. திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மணப்பெண் சந்தியா திடீரென மாயமானர் என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து, எம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோபிச்செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மணப்பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில் மணப்பெண் சந்தியா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சந்தியாவை அழைத்துச்சென்று இன்று மாலை 6.30க்கு கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணப்பெண் சந்தியா நீதிபதி பாரதி பிரபாவிடம் கூறியதாவது,
எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை திருமணம் வேண்டாம் என கூறினேன். ஆனால், எம்.எல்.ஏ., என்று என் வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள். எனக்கும் நிச்சயக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கும் 20வயது வித்தியாசம் உள்ளது. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? இதனால் தான் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் நான் வீட்டை வீட்டு சென்றேன் என மணப்பெண் சந்தியா கூறினார்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி பாரதி பிரபா, சந்தியாவிடம்.. நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என கேட்டபோது, நான் பெற்றோரிடமே செல்கிறேன் என சந்தியா கூறியுள்ளார். இதன்பின் பெற்றோரை அழைத்த நீதிபதி, சந்தியாவை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என எச்சரித்தார்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏவான ஈஸ்வரனுக்கு வயது 43, ஆனால், மணப்பெண் சந்தியாவுக்கோ வயது 23 தான். திருமண பேச்சு தொடங்கியதில் இருந்து எனக்கு இவரை பிடிக்கவில்லை, மேலும் இவ்வளவு வயது வித்தியாசம் உள்ளவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சந்தியா பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
இதேபோல், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் சந்தியாவிடம் போனில் பேசும் போதெல்லாம்.. எனக்கு உங்களை பிடிக்கவில்லை. என்னை விட்டுவிடுங்கள் என கூறியுள்ளார். ஆனால் எம்.எல்.ஏ., ஈஸ்வரனோ.. திருமணம் உறுதியாகிவிட்டது. முதலமைச்சரே நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைக்க போகிறார். உனக்கு இந்த மரியாதை என் மூலமாக கிடைக்கப்போகிறது என சந்தியாவை மிரட்டும் தொணியில் பேசியதோடு திருமணம் நடந்தே தீரும் என கட்டாயப்படுத்தியுள்ளார். வேறு வழியே இல்லாமல் ஊரில் இருந்தால் திருமணம் நடந்தே தீரும்.. எப்படியாவது இதை தடுக்க வேண்டும் என விரும்பிய சந்தியா வீட்டை விட்டு கிளம்பி சென்றுள்ளார்.
சந்தியாவின் இந்த போராட்டம் அவரை ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் அதிகார மிரட்டலுக்கு சிக்காத பறவையாக விடுதலை பெற செய்துள்ளது.