Skip to main content

ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி??? இந்த வழிகளை பயன்படுத்தி ரகசிய கேமராக்களை கண்டறியலாம்...

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
hidden cameras



அண்மையில் பெண்களின் தங்கும் விடுதியின் ஃப்ளெக் பாயிண்ட், குளியலறை, விளக்கு, ஹேங்கர் போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி அந்த விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார். இப்படியான கீழ்த்தரமான செயல்களெல்லாம், கேவலமான ஆசைகளாலேயே நிகழ்கின்றன. சிலர் இதை வணிகமாகவும், மிரட்டவும் பயன்படுத்துகின்றனர் என்பதும் அதிர்ச்சிகரமான தகவல்.
 

பொதுவாக ரகசிய கேமராக்களை எந்தந்த இடங்களில் வைக்க சாத்தியக்கூறுகள் இருக்கின்றன...
 

கதவுகள், சுவரின் ஒரு மூலை, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், மின் விளக்கு, புகைப்பட ஃப்ரேம்கள், டிஷ்யூ பெட்டிகள், பூக்குவளை, பூச்செண்டு, புகை கண்டறியும் கருவிகள் இப்படி முன்புறம் ஒரு சிறுதுளை, அதன்பின்னால் ஒரு பேட்டரியோ அல்லது வயரோ செல்வதற்கான இடம் இவை இருக்கும் எந்த இடங்களிலும் ரகசிய கேமராக்களை வைக்கமுடியும். இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான். ஏனென்றால் இதுதான் அநேகமான கிட்டதட்ட அனைத்து இடங்களிலுமே இருக்கிறது. ட்ரெயல் ரூம்களிலுள்ள ஆளுயரக்கண்ணாடியை கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன்பின்னணியில் இருப்பவர்கள் நமது செயல்களை கவனிக்கமுடியும்.


 

hidden cameras


 

அதை எப்படி கண்டுபிடிப்பது என பலருக்கு கேள்வி இருக்கலாம். முதலில் கண்ணாடி... 
 

உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்னொன்று சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது. 
 

இதுதவிர இன்ஃப்ராரெட் கேமராக்களை நீங்கள் உங்கள் கைபேசி கேமராக்கள் வழியாகவே கண்டறியமுடியும். கேமராவை ஆன்செய்து ஒவ்வொரு இடமாக நகர்த்தினால் அங்கு கேமரா இருந்தால் சிவப்பு நிற விளக்கு எரியும். அதை வைத்து கண்டறியலாம். ரிமோட்டின் மேல் பகுதியிலுள்ள விளக்குபோன்ற பகுதிக்கு முன் செல்போன் கேமராவை வைத்து படமெடுத்தபடியே எந்த பட்டனையாவது அழுத்தினால் அதில் சிவப்பு நிற ஒளி எரியும். அவைதான் இன்ஃப்ராரெட். இது சாதரண கண்களுக்கு தெரியாது. 
 

தேவை இல்லாமல் எதாவது வயர் சென்றால் அந்த இடத்தை சோதித்து பாருங்கள். “ஹிட்டன் கேமரா டிடெக்டர்” (hidden camera detector) என்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம். இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம். நீங்கள் ஒருவேளை அதை உறுதிசெய்தால் உடனே அதை பதிவுசெய்யுங்கள், காவல்துறையை, சைபர் க்ரைமை அணுகுங்கள். நமது பாதுகாப்பு, நமது உரிமை. அதை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. அப்படி அத்துமீறுபவர்களுக்கு தண்டனை கொடுப்பது நமது கடமை.