மத்திய உள்துறை அமைச்சர் சென்னை வருகையின் போது ஏன் சந்தித்துப் பேசவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர்கள் வரும்போதெல்லாம் அவர்களைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணனிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
தமிழகத்திற்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டவர்கள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். இதில் பிரதமரை எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் சந்தித்தார்கள். மோடிக்குப் பிறகு தமிழகம் வந்த அமித்ஷாவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பன்னீர்செல்வம் மட்டும் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில் இதுதொடர்பாக பேசிய எடப்பாடி, தமிழகம் வரும்போதெல்லாம் அமித்ஷாவைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவை ஏற்பட்டால் பேசுவது தனி, அடிக்கடி பேச வேண்டும் என்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள் என்று காட்டமாகக் கேட்டிருந்தார். இவரின் இந்தப் பேச்சை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?
இந்த சம்பவத்தை வைத்து எடப்பாடி பாஜகவை எதிர்க்கத் துணிந்துவிட்டார், எதிர்த்துவிட்டார் என்று அவருக்கு வேண்டப்பட்டவர்கள் தொடர்ந்து செய்தி பரப்பி வருகிறார்கள். அதில் சிறிதும் உண்மையில்லை. மோடி திண்டுக்கல் வந்தபோது அங்கு சென்ற எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பினர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். இரண்டு தரப்பையும் மோடி தனியாகச் சந்தித்துப் பேசவில்லை. அதைப்போல அமித்ஷா அடுத்த நாள் சென்னை வருவது உறுதியான நிலையில் பிரதமரை அனுப்பிவிட்டு அன்று இரவே அவசர அவசரமாக எடப்பாடி சென்னை வந்தார்.
அவர் சென்னை வந்தது கூட பெரிய விஷயமில்லை, நாம் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம், அவரைச் சந்திக்க மூத்த நிர்வாகிகள் 5 பேரை கையோடு அழைத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பன்னீர்செல்வம் கூட அமித்ஷாவுக்குக் கைகொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எடப்பாடி அவரை பார்க்கக் கூட முடியவில்லை. அமித்ஷாவைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று எடப்பாடியால் கூற முடியுமா?
இந்நிலையில், நாங்கள் அமித்ஷாவை வரும்போதெல்லாம் சந்திக்க வேண்டும் என்று அவசியம் இல்லை; எங்களுக்குத் தேவை ஏற்பட்டால்தான் பார்ப்போம் என்று கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தார்மீக கோபம் யாருக்கு இருக்க வேண்டும் என்றால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இருந்திருக்க வேண்டும். அவர் எங்களிடம் சந்திப்புக்கு அனுமதி கேட்டார். நாங்கள்தான் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்திருக்க வேண்டும்.
இந்த உண்மை அண்ணாமலைக்குத்தான் தெரியும்.தங்கள் தலைவர் அமித்ஷா மீது அவதூறு வந்தால் கூட ஏன் இவர் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. எடப்பாடி கூறிய இந்த ஒரு வார்த்தையால் அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் வரும் போதெல்லாம் ஏன் சந்திக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்படி என்றால் ஏன் சந்திக்க அனுமதி கேட்டீர்கள், அதை ஏன் பொதுவெளியில் மறைக்கிறீர்கள்.
தமிழக மக்களைத் தாண்டி அதிமுக தொண்டர்களிடமும் இந்த விஷயங்களை எடப்பாடி பழனிசாமி மறைக்கிறார். இதை வெளிப்படையாகக் கூற அவருக்கு என்ன தயக்கம் வரப்போகிறது. அனுமதி கேட்டோம்; கிடைக்கவில்லை. இல்லை அடுத்த முறை பார்ப்பதாகக் கூறியுள்ளார் என்று கூறியிருக்கலாம். ஆனால் முற்றிலும் உண்மையை மாற்றிக் கூறுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். எடப்பாடி சொல்லும் பொய்யை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது.
இல்லை என்றால் இந்த விஷயத்தில் எதற்காக பாஜகவை தொடர்பு படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் இதைப் பற்றிய எந்த அக்கறையும் அவர்களுக்கு இல்லை.தங்கள் தலைவரை ஒருவர் விமர்சித்துப் பேசினாலும் மயான அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலையை எதற்காக பாஜகவினர் எடுத்துள்ளனர் என்று தெரியவில்லை. அதிமுகவை பாஜக பின்னால் இருந்து இயக்குகிறது என்று சொல்வதற்கு நேர் எதிரான பார்வையாக இதனை மக்கள் பார்த்து வருகிறார்கள்.