![கசத](http://image.nakkheeran.in/cdn/farfuture/78fK5AmisB5MtxOMjgMwhA-IALk-sZRny5xOuZHrY8E/1668271376/sites/default/files/inline-images/hjkl_30.jpg)
கடந்த 30 வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்து வந்தவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் அவர்களின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றன. காலம் தாழ்த்தி இந்த தீர்ப்பு கிடைத்திருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
ராஜீவ்காந்தி வழக்கில் சிறையிலிருந்த அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட பிறகு நளினி, ரவிச்சந்திரன் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதிமன்றம் அந்த அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்குத்தான் இருக்கிறது என்று கூறவே தற்போது அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு ஆறு பேருமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இவர்களின் விடுதலையைத் தமிழக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு அரசியல் சாசன உரிமைகள் மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் காரணமாக இருந்துள்ளது. இந்த விடுதலை காலதாமதம் ஆனதற்கும் நிறைய அரசியல் இருக்கும். அதனை நாம் மறைக்க வேண்டிய தேவையில்லை. இவர்கள் விடுதலையைக் கோரி தமிழகச் சட்டமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அது எவ்வித காரணங்களும் இன்றி கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது.
மேலும் இதில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்று சொல்லப்பட்டு காலதாமதம் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் விடுதலையில் அதிக முன்னெடுப்புகளை அரசு செய்தது. இதன் காரணமாகப் பேரறிவாளன் போட்ட வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக அரசியல் சாசன பிரிவு 142 ஐ உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது. இந்த சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் மத்திய மாநில அரசுகள் எந்த முடிவையும் எடுக்காத பட்சத்தில் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்துக்கு இந்த சட்டப்பிரிவு உதவுகிறது. அதன்படி தற்போது இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காத ஆளுநர் தன்னுடைய அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டு வருகிறார். இந்த விடுதலையில் அமைதியாக இருந்த அவர், இந்த காலதாமதத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆளுநர் என்பவர் ஒரு அம்பு தான். அவரை பரிந்துரைத்தது ஒன்றிய அரசுதான். ஆளுநர்கள் காலங்காலமாக மத்திய அரசுக்கு சேவகம் செய்பவர்களே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். இது காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மாதிரியும், பாஜக ஆட்சியில் மற்றொரு மாதிரியும் இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில், மாநில பதவியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், வயதான சீனியர்கள் என்ற அடிப்படையில் அவர்களை ஆளுநராக நியமிப்பதைக் காங்கிரஸ் கட்சி வழக்கமாக வைத்திருந்தது. பாஜகவை பொறுத்தவரையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு நெருக்கமாக இருப்பவர்கள் அல்லது அவர்கள் பரிந்துரையின் படி ஆளுநர்கள் இதுவரை நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த அடிப்படியிலேயே தற்போது தமிழகத்திலும் ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதுவும் பாஜக ஆட்சியில் இல்லாத கேரளா, புதுவை, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் செயல்பாட்டை நீங்கள் பார்த்தால் புரியும். திடீரென மக்கள் நலன் பேசுவார்கள், அரசியல் சட்டம் பேசுவார்கள், மனு வாங்குவார்கள். அவர்கள் ஆளும் மாநிலங்களில் செய்யாததை எல்லாம் பிறர் ஆளும் மாநிலங்களில் செய்வார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட ஆளுநர்கள் உயர்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கான அதிகாரங்களும் அதிகம் இல்லை. மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் அவர்கள் வேலை. அதைச் செய்யத் தவறினால் மாநிலங்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கும்.