Skip to main content

கூகுளின் அடுத்த குறி கொசுக்கள்!!!

Published on 05/08/2017 | Edited on 05/08/2017

கூகுளின் அடுத்த குறி கொசுக்கள்!!!


போர்களில் மனிதர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் காலம்தோறும் மாறிவருகின்றன. அறிவியல் வளர்ச்சி அழிவுக்காக பயன்படுகிறது. கணினி சார்ந்த அறிவியலில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் கூகுளும் அறிவியல் வளர்ச்சியை ஒரு அழிவுக்காகப் பயன்படுத்துகிறது.  ஆச்சரியமாக  இருந்தாலும் அதுதான் உண்மை. அது தேர்ந்தெடுத்திற்கும் ஆயுதம் கொசு. ஆனால் இந்த அழிவு வேலை மனிதர்களின் நன்மைக்காக செய்யப்படுகிறது. இன்று பல நோய்களுக்கு காரணமாக உள்ள கொசுக்களைதான்  கூகுளின் தாய்  நிறுவனமான 'ஆல்பாபெட்' (alphabet) தனது உயிர்  அறிவியல் பிரிவான  'வெர்லி' (Verily Life Science) மூலம் தயாரித்து ஏவிவிட உள்ளது. இது நடக்க இருப்பது, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள  ஃபிரஸ்னோ நகரில்.  இதற்கு கெண்டஸ்கியின் 'மஸ்கிட்டோ மேட்' மற்றும்  ஃபிரஸ்னோ கொசு கட்டுப்பாட்டு வாரியம்  ஆகியவைகளும் இணைந்து பணியாற்றுகின்றன. கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் ஒரு மில்லியன் கொசுக்களை உற்பத்தி செய்வதே  திட்டமாகும். இதுவரை 20 மில்லியன் கொசுக்களை உருவாக்கியுள்ளது. 



  கொசுக்களை வைத்தே கொசுக்களை அழிக்கும் முயற்சியைதான் கூகுள் மேற்கொள்கிறது.  'வால்பேக்கியா' (Wolbachia) எனப்படும் பாக்டிரியாவை செலுத்தி  மலட்டுத்தன்மையுடைய ஆண் கொசுக்களை இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள். மேலும் இவை பெண் கொசுக்களோடு இணை சேரும்போது 'வால்பேக்கியா' (Wolbachia)  ஒருவித பாக்டிரியாவை பெண் கொசுக்களுக்குள் செலுத்திவிடுவதால் அந்தக்  கொசு மலட்டுத்தன்மை வாய்ந்த கொசுவாக மாறுகிறது. இதனால் அது முட்டையிட்டு தன் இனத்தை பெருக்க முடியாது. பொதுவாக ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லையென்பதால் இவற்றால் மனிதர்களுக்கு தொல்லையில்லை.  காலப்போக்கில்,  இதனால் வியத்தகு அளவில் கொசுக்களின் எண்ணிக்கை குறையும் என கூறப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கலிஃபோர்னியாவிலுள்ள ஃபிரஸ்னோ கவுண்டியில்  300 ஏக்கர் பரப்பளவில் 'மொபைல் மஸ்கிட்டோ வேன்' (mobile mosquito van) மூலம் கொசுக்கள் வெளியிடப்படும் பின்னர் இளம் கொசுக்கள் கணக்கிடப்பட்டு முடிவுகள் சாதகமாக இருப்பின் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளது. 



ஏற்கனவே சீனாவின் யாட்-சென் பல்கலைக்கழகமும், மிச்சிகன் பல்கலைக்கழகமும்  இதே முறையைப் பின்பற்றி  'கொசுக்கள்தொகையை' குறைத்து வருகின்றன.  இன்று  ஜிகா, டெங்கு, சிக்கன்குனியா போன்ற பல நோய்கள் கொசுக்களின் மூலமே பரவுவதால் இது போன்ற திட்டங்கள் உலகிற்கு அத்தியவசியமானதாகும். தமிழகத்திலும் தற்போது டெங்குக் காய்ச்சல் பரவிவருகிறது.  'டெங்கு'க் காய்ச்சலை  மர்மக்காய்ச்சலாய் மாற்றி, டெங்குக் காய்ச்சலை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது. 

- கமல் குமார்  



சார்ந்த செய்திகள்