தமிழக அரசு தொல்லியல்துறை பொற்பனைக்கோட்டையில் தொலைநிலை உணர்திறன் முறையான கண்டறிதல் மற்றும் வரம்பு (LIDAR) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் 44.88 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடம் இருந்ததைக் கண்டறிந்து தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அகழாய்வு பணியினை மே மாதம் 20 ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள்.
பொற்பனைக்கோட்டை அகழாய்வானது 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை திடல் வாழ்விட பகுதியில் இதுவரை 5 மீட்டர் நீள அகலத்தில் 8 குழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. சுந்தரராஜன் என்பவர் நிலத்தில் 4 குழிகளும் மாரிமுத்து, கருப்பையா, பழனியப்பன், ரங்கசாமி ஆகியோரின் நிலத்தில் தலா 1 குழிகளும் தோண்டப்பட்டு வருகிறது. அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையில் ஆய்வு மாணவர்கள் சுதாகர், முனுசாமி, பாரத் ஆகியோருடன் அகழாய்வு பணிகளானது நடைபெற்று வருகிறது அகழாய்வு பணிக்கு 35 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே A1 எனும் குழியில் 19 செ.மீ ஆழத்திற்குள்ளாகவே ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இதுவரை வட்டச்சில்லுகள் (Hopscotch)- 49, கென்டி மூக்குகள்(Spout)- 2, கண்ணாடி வளையல்கள்(Glass Bangle)- 4, கண்ணாடி மணிகள் (Beads)- 95, சுடுமண் விளக்கு (TC Lamp)- 1, தக்களிகள் (spindle whorl)- 2, காசு (Coin)- 1, சூதுபவளமணி (carnelian Bead)- 1 மெருகேற்றும் கற்கள் (rubbing Stone)- 2 என 159 தொல்பொருட்களும், கீறல் குறியீடு (Graffiti )2ம் கிடைத்துள்ளது.
மேலும், மெருகேற்றப்பட்ட பீங்கான் பானை ஓடுகள் (Glazed Ware), கருப்பு நிற பானை ஓடுகள் (Black Ware ), கருப்பு- சிவப்பு நிற பானை ஓடுகள் (Black and Red Ware), மேற்கூரை ஓடுகள் (roof tile), துளையிடப்பட்ட பானை ஓடுகள் (perforated Ware)-2 என பல்வேறு வகையான பானை ஓடுகளும் கிடைத்துள்ளது.அதை தொடர்ந்து பல்வேறு தொல்பொருட்கள் கிடைத்து வரும் நிலையில் இன்று பொற்பனைக்கோட்டை அகழாய்வில் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
H2 எனும் குழியில் 133.cm ஆழத்தில் ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி / தோடு Nose Stud / ear studs ஒன்றும், B1 எனும் குழியில் 140.cm முதல் 145.cm ஆழத்தில் எலும்பு முனை கருவி (Bone point) மற்றும் வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய 150.cm முதல்160.cm ஆழத்தில் கார்னீலியன் (carnelian bead) பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளது.
எலும்பு முனை கருவி நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. கார்னீலியன் கற்கள் வட இந்தியாவில் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைக்ககூடியவை. தற்போது இங்கு கிடைத்துள்ள வட்ட வடிவிலான சூதுபவள மணியானது கார்னீலியன் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்திருக்கும் சூதுபவள மணியானது வரலாற்று தொடக்க காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆறு இதழ் கொண்ட 0.26 கிராம் எடையுடைய தண்டு உடைந்த தங்க மூக்குத்தி / தோடு கிடைத்திருப்பது சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது.
மேலும் அகழாய்வுக் குழிகள் ஆழப்படுத்தும் போது ஏராளமான தொல் பொருட்கள் கிடைப்பதுடன் பண்டை தமிழர்களின் நாகரீகம் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது.