Skip to main content

இங்கிலாந்து வரலாற்றை முறியடித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்ற தமிழன்... ஜிஷோ நிதி Exclusive

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் ஃபென்சிங் (வாள் வீச்சில்) விளையாட்டில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து தங்கம் வென்ற ஜிஷோ நிதி முதல் முறையாக நக்கீரனுக்கு அளித்த பேட்டி. "மார்த்தாண்டம், ஆத்தூர் அருகே இருக்கும் ஒரு சிறியக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். பள்ளிப்படிப்பு முழுக்க எங்கள் ஊரிலேதான் முடித்தேன். ஆஸ்திரேலியாவில் கேனப்ரா சீனியர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. என் முதல் அண்ணன் ஜிஜோ நிதி, சென்னையில் நடந்த ஜூனியர் காமன்வெல்த் போட்டியில் பங்குபெற்றார் அதன் மூலமாகத்தான் எனக்கு ஃபென்சிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. எட்டாம் வகுப்பு முதலே நான் ஃபென்சிங் பயிற்சி பெற்றுவருகிறேன். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அசாம், குவாஹாத்தியில் நடந்த தேசிய அளவில் நடந்த 'அண்டர் 17' போட்டியில் முதல்முறையாக கலந்துகொண்டேன். எங்கள் பள்ளி விளையாட்டு ஆசிரியரும், கன்னியகுமாரி ஃபென்சிங் பயிற்சி மையத்தின் பயிற்சியாளருமான அமிர்தராஜ் என்பவர்தான் எனது பள்ளிப்பருவ ஃபென்சிங் ஆசிரியராக இருந்தார். இதுவரை மொத்தம் 27 சர்வதேச விளையாட்டுகளில் பங்குபெற்றுள்ளேன், அதில் எட்டு போட்டிகளுக்கு என் அப்பாவும், அம்மாவும்தான் செலவு செய்து அனுப்பினார்கள். நான் எப்போதெல்லாம் சர்வதேசப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்கிறேனோ, அப்போதெல்லாம் என் அப்பா எப்படியாவது பணத்தைப் புரட்டி என்னை அனுப்பிவைப்பார்.
அவர்கள்தான் எனக்கு உறுதுணை.

 

 

gg

 


சத்தீஷ்கரில் 2007-ல் நடந்தப் போட்டியில் முதல்முறையாக எங்கள் அணியில் பதக்கத்தை பெற்றேன். ஆனால், அந்தப் போட்டியில் தனிப்பட்ட முறையில் ஐந்தாவது இடத்தில் இருந்தேன். இந்தியாவில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிட்டியூட்-ல் மிக சிறந்த இன்ஸ்டிட்டியூட்டான ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிட்டியூட்-ல் இருந்து பயற்சியாளர்கள் சத்தீஷ்கர் போட்டிக்கு வந்திருந்தனர். அங்கு எனது பர்ஃபார்மன்ஸை பார்த்துவிட்டு அவர்களாக என்னை, அவர்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தனர். அதன் பின் 2009 ஏப்ரல் மாதம் நான் அந்தப் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அங்கு சேர்ந்த சில மாதங்களில் அண்டர் 17 மற்றும் ஜூனியர் போட்டிகள் நடைபெற்றது அதில் எதிலும் என்னால் பதக்கம் வெல்ல முடியவில்லை. அதனால் இன்னும் கடின உழைப்பை மேற்கொண்டேன். பிறகு அதே வருடம் சேலத்தில் தேசிய அளவில் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது அதில் வெண்கலம் வென்றேன். 2009 டிசம்பர் மாதம் இந்தியன் கேம்ப் ஆரம்பமானது அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஆசிய ஜூனியர் கேடட் போட்டி நடைபெற்றது அதில் கால் இறுதி சுற்றுவரை சென்றேன். இதுவெல்லாம் நடக்கும்போது எனக்கு 16 வயது. அதன் பின் தாய்லாந்தில் நடந்த தாய்லாந்து ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிப்பட்டமுறையில் வெள்ளியும் அணியில் வெண்கலமும் வென்றேன். 2010-ல் ஆஸ்திரேலியா, மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் எங்கள் அணி, அரை இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றுது. அதன் பின் அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் நடந்தப் போட்டியில் 43 : 45 எனும் கணக்கில் தோல்வியுற்றோம் அதனால் அதில் வெண்கலமும் கிடைக்காமல் திரும்பினோம். 

 

 

2010-ல் சீனாவில் நடந்த ஆசியப் போட்டியில் பங்குபெற்றேன். அப்போது எனக்கு 17 வயது மட்டுமே. அந்த வருடம் மட்டும் நான் மொத்தம் 6 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தேன். அதன்பின் 2011-ல் இந்திய இராணுவத்தில் சேர்ந்தேன். அதன்மூலமாக உலக இராணுவ போட்டியில் பங்குபெற்றேன். அதில் பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அதில் பங்குபெற்றதே பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் போட்டிக்கு சென்று திரும்பியதும் அலக்ஸி எனும் உக்ரைன் நாட்டு பயிற்சியாளர்  பூனேவில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றேன். 2012, பிப்ரவரியில் இங்கிலாந்தில் நடந்த ஜூனியர் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிப்பட்ட முறையிலும் அணியாகவும் வெண்கலம் வென்றேன். அதன்பிறகு அலக்ஸி அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். அவர் இல்லாமல் எனது பர்ஃபார்மன்ஸ் கொஞ்சம் சரியத் தொடங்கியது. ஆனால், 2015-ல் நடந்த தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாட்டிற்காக தனிப்பட்ட முறையிலும் அணியிலும் தங்கம் வென்று கொடுத்தேன். அதன் பின் தற்போது கேனப்ரா, ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளேன். இதுவரை ஐந்து பதக்கங்கள் வென்றுள்ளேன். அதில் இப்போது வாங்கியிருக்கும் இந்தப் பதக்கம்தான் வெளிநாட்டில் முதல்முறையாக தேசியகீதம் இசைக்க இந்தியாவிற்காக வாங்கியது.  

 

 

gg

 

 

ஆஸ்திரேலியா, கேனப்ரா காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தனிப்பட்ட முறையிலான போட்டி காலை 9.30 மணிக்கு கேனப்ராவில் நடைபெற்றது. அதில் பதக்கம் ஏதும் என்னால் வெல்லமுடியவில்லை. கேனப்ரா காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிக்கு சரியான நேரத்தில் விசா கிடைக்காததனால் அங்குப்போய் சேருவதற்கே அதிகாலை 3.30 மணியானது அதனால் சரியான தூக்கம் இல்லாமல், வார்ம்-அப் இல்லாமல் விளையாட நேர்ந்தது. அதனால்கூட பதக்கம் வெல்லாமல் போயிருக்கலாம் என கருதுகிறேன். ஆனால், அந்தப் போட்டியில் 39 பேர்களில் 6-வது ரேங்க் எடுத்தேன். அதேசமயம் அணிக்கானப் போட்டியில் இங்கிலாந்து எதிராக தங்கம் வென்றோம். இதில் சிறப்பு என்னவென்றால் தொடர்ச்சியாக இங்கிலாந்துதான் தங்கம் வென்றுவருகிறது. ஆனால், இந்தமுறை நாங்கள் அவர்கள் சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளோம். 

 


ஃபென்சிங் பொறுத்தவரையில் பலத்தை உபயோகப்படுத்தி வெற்றி பெறமுடியாது. இதில் நுட்பமான தந்திரங்கள்தான் வெற்றியைத்தரும். அதற்கு ஃபென்சிங் வீரர்கள் அதிகமான போட்டிகளில் பங்குபெற்று அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு பத்து முதல் பதினைந்துப் போட்டிகள் நடைப்பெறுகிறது. அதில் குறைந்தது சில முக்கியப் போட்டிகளுக்காவது இந்திய அணியை அனுப்ப வேண்டும். உலகில் விலை உயர்ந்த விளையாட்டில் ஃபென்சிங் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதற்கு காரணம் இந்த விளையாட்டில் உபயோகப்படுத்தும் உபகரணங்கள் எல்லாம் மின்சாராத்தால் ஆனது. அதுவும்கூட அதிகமான போட்டியில் இந்தியா பங்கு பெறாததிற்கு காரணமாக இருக்கலாம். மாநில அரசும்கூட ஃபென்சிங் விளையாட்டு வீரர்களுக்கு உதவிகளை செய்துவருகிறது, இருந்தாலும் வெளிநாட்டு போட்டிகளுக்கு அழைத்துப்போவதும், வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெறுவதிலும் இந்திய வீரர்களுக்கு தேவைகள் அதிகமாக இருக்கிறது. நானுமேகூட பயிற்சி பெறுவதற்காக என் சொந்த செலவில், நான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு அமெரிக்காவிற்கு சென்று, இருபத்திஐந்து நாட்கள் இருந்தேன். ஆனால் என்னால் பண நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திரும்பிட்டேன். நமக்கும், வெளிநாட்டினருக்குமிடையே இருக்கும் வித்தியாசம் என்றால், வெளிநாட்டினருகளிடம் அதிகமான அனுபவும் உள்ளது. ஆனால், நம்மிடம் பயிற்சிகள்தான் அதிக அளவில் உள்ளது. அந்த அனுபவம் இல்லாததனால்தான் நாம் அவர்களிடம் தோற்று போவதற்கு காரணம். நாமும் அவர்களைப்போல் ஃபென்சிங்கில் அதிக அனுபவம் கொண்டால் நம்மிடம் இருக்கும் கடின உழைப்பால் அவர்களை எளிதில் வெல்ல முடியும்." 

 

 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மீண்டும் ஒரு ஐசிசி கோப்பை; தொடரும் மஞ்சள் படையின் ஆதிக்கம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
An ICC trophy again; The continued dominance of the yellow army!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலேயான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் வில்லோமூரே பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கொன்ஸ்டாஸ் ரன் ஏதும் எடுக்காமல் இந்திய அணியின் லிம்பானியின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த கேப்டன் வெய்ப்கென் உடன் சேர்ந்து டிக்சன் நிதானமாக ஆடத் தொடங்கினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் வெய்ப்கென் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். டிக்சனின் 42, ஹர்ஜாஸ் சிங்கின் 55, ஆலிவர் பீக்கின் 46 ரன்கள் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் லிம்பானி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும், சாவ்மி, முக்‌ஷீர் கான் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அர்ஷினை ஆரம்பத்திலேயே 3 ரன்னில் வெளியேற்றி ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி கொடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட் முஷீர் கானும் 22 ரன்களில் ஆட்டமிழந்து ஏமற்றினார். அடுத்து வந்த கேப்டன் சஹரனும் 8 ரன்களில் நடையைக் கட்டினார். அரையிறுதியில் சிறப்பாக ஆடிய சச்சின் தாஸ் 9 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த மோலிய 9 ரன்களுக்கும், அவனிஷ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுபக்கம் பொறுமையாக ஆடிய ஆதர்ஷ் சிங் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் அபிஷேக் மட்டும் 42 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸி.யின் பீடர்மேன், மேக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், விட்லர் 2 விக்கெட்டுகளும், ஆண்டர்சன் மற்றும் ஸ்ட்ரேக்கர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ஆவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றுள்ளது. பீடர்மேன் ஆட்டநாயகனாகவும், மாபகா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2021 முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள ஐசிசி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2022 டி20 உலகக்கோப்பையை இங்கிலந்து அணி வென்றது. அதைத் தவிர்த்து 2021 டி20 கோப்பை, 2022 மகளிர் டி20 கோப்பை, 2023 மகளிர் உலகக்கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஆண்கள் உலகக்கோப்பை தற்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை என 6 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 2023 இல் 3 ஐசிசி கோப்பைகள், 2024இல் தற்போது என தொடர்ச்சியாக 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி 1999 ஸ்டீவ் வாக் கேப்டன்சியில் இருந்து 2007 ரிக்கி பாண்டிங் கேப்டன்சி வரை தொடர்ச்சியாக 3 உலகக்கோப்பைகளை வென்றிருந்தது. ஒரு பத்தாண்டுகளுக்கும் மேல் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது. பின்னர் இந்திய அணியில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் ஆஸ்திரேலிய அணியின் சாம்ராஜ்யம் சற்றே ஆட்டம் கண்டது. அதன் முதல் படியாக 2007 இல் டி20 அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் அடி கொடுத்த்து. 2008இல் ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் நடந்த காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு தொடரின் மூன்று இறுதி ஆட்டங்களில் இரண்டை வென்று  ஆஸ்திரேலியாவின் வெற்றி சாம்ராஜ்யத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தது. 2011 உலகக்கோப்பை காலிறுதி என மூன்று முக்கிய ஐசிசி போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சாய்த்தது. 2019 உலகக்கோப்பையில் ஆஸி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்திய அணியின் கேப்டசியில் இருந்து தோனி விலகியதில் இருந்து ஆஸ்திரேலிய அணி மீண்டும் எழத் தொடங்கியது. இந்திய அணிக்கு கோலி, ரோஹித் என கேப்டன்களை மாற்றி மாற்றியும் ஐசிசி தொடர்களில் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது 4 ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி விஸ்வரூபம் எடுத்து வெற்றிகளைக் குவித்து தோற்கடிக்க முடியாத அணி எனும் அந்த பழைய பெயரை மீண்டும் பெற்றுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நேற்றைய மேற்கு இந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் மேக்ஸ்வெல் 5 ஆவது முறையாக சதமடித்து டி20 போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் எனும் ரோஹித்தின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வெ.அருண்குமார்