
பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
" கடந்த சில நாட்களாக ஊடகங்கள் சூர்யா விவகாரம் தொடர்பாகத்தான் காயத்ரி ச்ஸபெண்ட் செய்யப்பட்டதாக ஒரு தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.அவரின் நீக்கத்துக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவரின் கடந்த கால செயல்பாடு காரணமாகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக காசி தமிழ்ச் சங்கமம் தொடர்பாக அவர் வேண்டத்தகாத கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். தன்னை அங்கு அழைக்கவில்லை என்றும், தான் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் பொது வெளியில் கருத்து பதிவிட்டு இருந்தார். இது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவரின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் சூர்யா விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இரண்டும் ஒரே நாளில் நடைபெற்றதால் அதற்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இது மிகவும் தவறான தகவல் காயத்ரி நீக்கத்துக்கும் இந்த விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஊடகங்கள் இதை முதலில் தெளிவாகப் புரிந்துகொண்டு கருத்து தெரிவிக்க வேண்டும். அதையும் இதையும் முடிச்சி போட்டுப் பார்க்கக்கூடாது. இது இரண்டுமே ஒரே நாளில் நடந்ததால் மட்டுமே இவ்வளவு பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது. வேறொரு நாளில் இது நடந்திருந்தால் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்காது. தெரியாத நபர்கள் பதிலளிக்கும் போதும் இவர் அங்கே சென்று அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பதிவிடுகிறார். இது தேவையில்லாத ஒன்றாகக் கட்சி நினைத்திருக்கலாம். அதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்.
ஆகவே கட்சி எந்த அடிப்படையில் ஒருவரின் செயல்பாடு இருக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு வைத்திருக்கும். அதை மீறிச் செயல்படுகின்றபோது இத்தகைய நடவடிக்கையும் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதைத்தான் கட்சி இப்போது செய்துகொண்டுள்ளது. அதைத் தலைவர் அண்ணாமலையும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் இந்த மாதிரி கட்சி கட்டுப்பாட்டை மீறுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பொறுப்பில் இருப்பவர்களே அதனை மீறினால் அதைத் தலைமை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கும். அதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.