விடிஞ்சா... "அன்னக்கிளி' படத்தோட பூஜை... ஸாங் ரெக்கார்டிங்கோட நடக்கப்போகுது. நாங்க பட்ட பாட்டுக்கெல்லாம் பாட்டாவே பலன் கிடைக்கப்போற நாள் அது. "பாவலர் பிரதர்ஸ்'ஸான எங்களுக்குள்ள பரபரப்பும், பதட்டமும் பரவிக் கிடந்துச்சு. அன்னக்கி ராத்திரி... நாங்க தூங்கவே இல்ல. நாங்க தூங்கலேங்கிறதுக்காக விடியாம இருக்குமா? விடிஞ்சது. சாந்தோம்ல இருக்கிற கனோஜராயமலையப்ப நாயக்கன் தெரு... சுருக்கமா சொல்லணும்னா கே.எம்.என். தெருவுலதான் நாங்க குடியிருந்தோம். அதிகாலைல நாலரை மணிக்கே எழுந்து, குளிச்சு மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு நான், பாஸ்கரண்ணன், ராஜாண்ணன் மூணு பேரும் போனோம்.
அம்மாவ மனமுருக வேண்டிக்கிட்டு, அங்கிருந்து கிளம்பி ஆறரை மணிக்கெல்லாம் ஏவி.எம்.ல இருக்க ஆர்.ஆர்.தியேட்டருக்கு வந்திட்டோம். யப்பா... எத்தன எத்தன மியூஸிக் டைரக்டர்கள் மியூஸிக் பண்ணின எடம் அது. நாங்க கூட பல மியூஸிக் டைரக்டர்கள்கிட்ட, நெறைய பாட்டுக்கு வாத்தியக் கலைஞர்களா வேலை செஞ்ச ஒரு தெய்வீக எடமாச்சே. எங்க மூணு பேருக்குமே அடி மனசுல ஒரு பயம். ஏன்னா... ஒரு பெரிய ஆளு எடுக்கிற படத்துக்கு, இசையமைப்பாளரா ஒரு புது ஆளு. பயம் வரத்தானே செய்யும்?
பந்தல்போட்டு, சாமி படங்களுக்கு அலங்காரம் பண்ணி, குருக்கள் வந்து மந்திரம் சொல்லி, பூஜை போட்டதும் படத்தோட ஸ்கிரிப்ட் ஃபைலை, டைரக்டர்கிட்டயும், பாட்டுப் பேப்பர்களை மியூஸிக் டைரக்டர்கிட்டயும் குடுப்பாங்க. இது வழக்கமான நடைமுறை. ராஜாண்ணன்கிட்ட பாட்டு பேப்பர்களை கொடுத்தப்போ... பதட்டமா வாங்கிக்கிட்டாரு. எங்க கூட இத்தனை வருஷமா ஒண்ணா டிராவலாகிக்கிட்டிருந்த வாத்தியக்காரர்கள்ல சில பேருக்கு நெஜமாவே சந்தோஷம். கொஞ்சம் பெரியவங்களுக்கு... "இவனுங்க என்ன சாதாரண வாத்தியக்காரனுங்கதான... என்னத்த பெருசா பண்ணிடப் போறாங்க'ன்னு ஒரு எளக்காரப்பார்வ.
"அன்னக்கிளி'’ படத்துக்காக ரெக்கார்டிங் வரை வந்தாச்சு. இதுக்கெல்லாம் என்னென்ன பாடுபட்டிருப்போம் இந்த சின்னாத்தாயி பெத்த மக்க. கதாசிரியர் ஆர்.செல்வராஜ்... இந்தப் பேரு ஒங்களுக்கெல்லாம் ரொம்பத் தெரிஞ்ச பேரா இருக்கும். 'அன்னக்கிளி', 'பதினாறு வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்'னு ஏகப்பட்ட படங்களுக்கு கதை எழுதியவர், வசனம் எழுதியவர். நாங்க மதுரையில இருக்கும் போதே செல்வராஜ் எங்களுக்கு பழக்கம். அதுவும் ராஜாண்ணனும், அவரும் ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட்டு. இந்தப் பழக்கம் எப்படி வந்துச்சுன்னா... எங்க அண்ணன் பாவலர் வரதராஜன், கம்யூனிஸ்ட் கட்சிக்காக பிரச்சார பாடகரா இருந்தாரு. மதுரையில் மண்டையன் ஆசாரி சந்துல, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் ஹால்ல நாங்க தங்கியிருந்தபடி கட்சி கச்சேரி செய்வோம்.
கட்சித்தலைவர்கள்ல ஒருத்தரான, ரொம்ப நல்ல மனுஷனான சங்கரய்யாவ ஒங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். அவரோட சகோதரரோட பையன்தான் ஆர்.செல்வராஜ். அப்பவே பல புத்தகக்கள்ல சிறுகதையெல்லாம் எழுதுவாரு. நாங்க மெட்ராஸுக்கு வந்த பின்னாடி, அவரும் பெட்டிபடுக்கையோட வந்து எங்ககூடவே தங்கி, அண்ணன் பஞ்சு அருணாசலம்கிட்ட உதவியாளரா சேர்ந்தாரு. கொஞ்ச நாள்லயே பஞ்சண்ணன்கிட்ட எங்களைப்பத்தி நல்லாச்சொல்லி ஏத்தி வச்சிருந்தாரு. "மியூஸிக் டைரக்டர் ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட எங்க ஊரைச் சேர்ந்த என்னோட ஃப்ரெண்டு ராஜாவும், ராஜாவோட அண்ணன் -தம்பியும் உதவியாளரா வேலை பார்த்துக்கிட்டிருக்காங்க. ‘"பாவலர்பிரதர்ஸ்'ங்கிற பேர்ல எஸ்.பி.பி.யோட கச்சேரிகள்லயும், டிராமாக்கள்லயும் வேலை செய்றாங்க. அவங்க போட்டு வச்சிருக்க பாட்டையெல்லாம் நீங்க கேட்டுப்பாருங்க... ரொம்ப நல்லாருக்கும்'னு சொன்னதோட, ராஜாண்ணனை கூட்டிட்டுப்போய் பஞ்சண்ணன்கிட்ட அறிமுகப்படுத்திவச்சாரு செல்வராஜ்.
நாங்க போட்டு வச்சிருந்த பாட்டையெல்லாம் டேபிள்ல தாளம் போட்டபடி பாடிக்காட்டினார் ராஜாண்ணன். "அன்னக்கிளி ஒன்னத் தேடுதே', "மச்சானப்பாத்தீங்களா?'’ பாட்டுகளைக் கேட்டுட்டு பாராட்டிய பஞ்சண்ணன், "சரியான நேரம் அமையுறபோது யூஸ் பண்ணிக்கிறேன்'னு சொல்லியனுப்பினார்.
கொஞ்ச நாளைக்கப்புறம்... தன்னோட தம்பி கே.என்.சுப்புபேரில் "அன்னக்கிளி'’படத்தைத் தயாரிக்கவும், எங்களை மியூஸிக் டைரக்டராகப் போடவும் முடிவு செஞ்சார் பஞ்சண்ணன். "பாவலர்பிரதர்ஸ்'’ என்கிறபேரு குழுவோடபேரா இருக்கு... என்பதால் "ராஜா'’ என்கிற பேரை பரிசீலனை பண்ணி... அப்புறமா... ஏற்கனவே மியூஸிக் டைரக்டர் ஏ.எம்.ராஜா பேரு பிரபலமாக இருந்ததால்... "இளையராஜா'வாக்கினார் பஞ்சண்ணன்.
பல சோதனய தாண்டித்தான்... தொடங்குச்சு "இளையராஜா'ங்கிற "பாவலர்பிரதர்ஸ்'ஸோட பயணம்.
அது என்ன சோதனை? அத சொல்றதுக்கு முன்னாடி... இப்போவாங்க... ஏ.வி.எம்.ஆர்.ஆர். தியேட்டருக்கு. ரெக்கார்டிங் ஹால்ல எல்லாரையும் வச்சு ரிகர்ஸல் பார்த்தாச்சு. எல்லாரும் பாராட்டினாங்க. சிலவாத்தியக்காரர்கள் நம்பிக்கையோடவும், சிலவாத்தியக்காரர்கள் "இதுநூத்துல ஒண்ணுதான்'னும் நினைச்சுவாசிச்சாங்க. எங்க குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ், பஞ்சண்ணன், படத்தின் இயக்குநர்களான தேவராஜ்-மோகன் ஆகியோர் ரொம்ப மனநிறைவோட காத்துக்கிட்டிருந்தாங்க. ஒலிப்பதிவுக்கூடத்துல ராஜாண்ணனுக்கு உதவியா, இசைக்குழு நடத்துனரா ஆர்.கோவர்தனம் இருந்தார். இவர் ரொம்ப பெருமைக்குரியவர். ஏவி.எம். படங்களுக்கு ஆர்.சுதர்ஸனம் இசையமைப்பார்.. அவருக்குத் துணையா இருந்தவர் கோவர்தனம். அதுக்குப்பிறகு அண்ணன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசைக்குழுவிலும் உதவி இசையமைப்பாளரா இருந்தார். கோவர்தனமும் பெரிய மியூஸிக்டைரக்டர்தான். "நாதஸ்வரஓசையிலே', "அன்புள்ள அத்தான் வணக்கம்', ‘"அந்த சிவகாமி மகனிடம்...' இதுபோல பல பாடல்களால் இசையமைப்பில் சாதனை படைச்சவர். அப்படிப்பட்டவர் எங்களோட முதல் படத்துல வேலை செஞ்சது பெரிய பாக்கியம்.
ரிகர்ஸல் நடக்கும்போதே ராஜாண்ணனுக்கு வயிறு சரியில்ல. பயத்துலயும், பதட்டத்துலயும் ரொம்ப கஷ்டப்பட்டாரு. ஆர்க்கெஸ்ட்ரா வாசிச்சு, வாசிச்சுப் பழகினதும், பதினோரு மணிவாக்குல எஸ்.ஜானகி வந்தாங்க. அவங்க பாடின முழுப் பாடலோட ஒத்திகை பார்த்தப்ப... இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
ஆர்க்கெஸ்ட்ராவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்ல, ஒருமைக்குக்கு நாலு தாளவாத்தியங்கள்... தபேலா... டோலக்... பேஸ் டோலக்... காங்கோடிரம்ஸ்... வயலின்ஸ், பேஸ், புளூட்... நான்- ரிதம் கிடார்... இப்படி தனித்தனியாக மைக் முன்னால வாசிக்கணும். ஒவ்வொரு மைக்கும் செக் பண்ணி, பிறகு ஜானகியம்மாவோட சேந்து ரெண்டு, மூணு ரிகர்ஸல் பேலன்ஸிங்கா நடக்கும். அது முடிஞ்சதும்தான் நேரடி டேக், ரெக்கார்டிங் பண்ணப்படும். ஒத்திகை முடிஞ்சு, "டேக்போலாம்'னு ரெக்கார்டிங் சம்பத் சொன்னவுடனே தியேட்டருக்கு வெளியில் சைலன்ஸுக்காக ஒருபெல் அடிக்கப்படும். ரெட்லைட்டும் எரியும். இந்த சிக்னல் ஸ்டாப் ஆகுறவரை தியேட்டருக்கு வெளியே கார்சத்தமோ, சைக்கிள் சத்தமோ எதுவுமே கேட்கக்கூடாது.
வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு புதுவாழ்க்கை ஓப்பனாகப்போகுது....
"சைலன்ஸ்...''
“"என்னராஜா... டேக்போலாமா?''”
"ம்... தேங்கா ஒடச்சாச்சா?''”
"ஓ... ஒடச்சாச்சு''”
"ம்... அப்போ டேக் போலாம்... அமர் நீ அனவுன்ஸ் பண்ணு...’“ம்...ரோலிங்...''”
"அம்மா... அம்மா... அம்மா...''’என சொல்லிவிட்டு “"எஸ்.பி.டி ஃபிலிம்ஸ் அன்னக்கிளி... ஸாங் 1, டேக் 1 ரன்னிங்''’ என நான் சொல்லி முடிச்சதுமே...
கோவர்தனம் மாஸ்டர் "ரெடி... டிக்... டிக்... டிக்...'' என சொடக்கிட்டுவிட்டு "ஒன்... ரெடி... ஒன்... டூ... த்ரி... ஃபோர்''’ சொல்ல...
ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிம்பிக்கிறதுக்கும், "டப்பு'னு கரண்ட் கட் ஆகிறதுக்கும் சரியா இருந்துச்சு.
அதிர்ச்சி... நிசப்தம். அந்த அமைதியைக் கிழிச்சுக்கிட்டு எங்கிருந்தோ ஒரு கமெண்ட் பறந்து வந்தது.
"ம்க்ஹும்... இதுவௌங்குனமாதிரிதான்...''”
ஏவி.எம்.மில் இருக்க ஆர்.ஆர். தியேட்டரில் "அன்னக்கிளி'’ படத்துக்கான பாடல் பதிவு. ஆர்க்கெஸ்ட்ரா கண்டக்டரா இருந்த கோவர்தனம் மாஸ்டர் "டேக்ரெடி... ஒன்... டூ... த்ரீ... ஃபோர்...''’னு சொல்ல... ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பிக்கிறதுக்கும், "டப்பு'னு கரண்ட் கட்டாகிறதுக்கும் சரியா இருந்துச்சு. அந்த எடமே அதிர்ச்சியில நிசப்தமாகிப் போச்சு.
"ம்க்ஹூம்... இதுவௌங்குனமாதிரிதான்...'’னுயாரோஅடித்த கமெண்ட் எங்க காதுகள்ல விழுந்ததும், எனக்கும், பாஸ்கரண்ணனுக்கும் ஒருவிதமான பயம்... நடுக்கம்... "இப்படி அபசகுனமாகிப்போச்சே'ங்கிற அழுகை. பஞ்சண்ணனின் தம்பிகளோ "இதுக்குத்தான் இவங்க வேணாம்னு சொன்னோம். ராசியில்லாத ஆளுங்க' என தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். "இளையராஜாவோட இசைவேணாம்'னு, முதலில் பஞ்சண்ணன்கிட்ட, அவரோட பிரதர்ஸ் வற்புறுத்தி சொன்னாங்களே.... அவங்க சொன்னதுக்கு ஏத்த மாதிரி இப்ப... சென்ட்டிமெண்ட்டா கரண்ட் கட்டாயிருச்சே'னு என்னோட நினைப்பு அங்க ஓடுச்சு. ராஜாண்ணன் மேஜையில போட்டுக்காட்டின தாளமும், பாட்டும் பஞ்சண்ணனுக்குப் பிடிச்சுத்தான் "இளையராஜா'னு பேர்மாத்தி "அன்னக்கிளி'க்கு ஓ.கே. பண்ணினார். ஆனா அவரோட தம்பிங்க விரும்பல. அந்தச் சமயத்துல பஞ்சண்ணன் கதையில வந்த படங்களுக்கெல்லாம் விஜயபாஸ்கர்தான் மியூஸிக். ‘"கனி முத்து பாப்பா', "எங்கம்மா சபதம்'னு பல படங்கள் ஹிட். அதனால் பஞ்சண்ணனோட தம்பிங்க சுப்பு, கே.என்.லட்சுமணன், கிட்டு... இவங்கள்லாம் எங்களோட இசைக்கு ஒத்துக்கல. "விஜயபாஸ்கரையே போடலாம். இல்லேன்னா... வி.குமாரைப்போடலாம்''னு சொன்னாங்க..
ஆனா பஞ்சண்ணனோ "இளையராஜாதான் மியூஸிக் பண்ணுவான்''னு சொல்லிவிட்டார். பஞ்சண்ணன்கிட்ட நாங்க உண்டாக்கின நம்பிக்கையை அவரோட தம்பிங்ககிட்டயும் ஏற்படுத்தணும்னு முடிவு செஞ்சோம். அதுக்கு முன்னாடி எந்த புது மியூஸிக்டைரக்டரும் அப்படிச் செஞ்சிருப்பாங்களா?னு தெரியல. ஆனா நாங்க அந்தக் காரியத்த செஞ்சோம். ஸாங் ரெக்கார்டிங்குக்கு ஒரு வாரம் முன்னாடி... தி.நகர்ல கண்ணதாசன் வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பாலாஜி கல்யாண மண்டபத்த பிடிச்சு, "அன்னக்கிளி'க்கு வாசிக்கப்போற மியூஸிஸியன்களையும், பின்னணிப் பாடகர்கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா, எஸ்.ஜானகி... ஆகியோரையும் வரவழைச்சோம். பஞ்சண்ணனோட பிரதர்ஸையும் வரவழைச்சு அவங்க முன்னால படத்துல இடம்பெறப்போற பாட்டுக்களை லைவ்வா பாடவச்சோம். பாவலர் பிரதர்ஸான எங்கமேல பஞ்சு பிரதர்ஸுக்கும் முழு நம்பிக்கை வந்துருக்கும்னு நினைச்சுக்கிட்டு வேலைகள ஆரம்பிச்சோம்.
இதோ... எடுத்த எடுப்புலயே கரண்ட்டு கட்டாயிருச்சே.... "முதல்வாய்ப்பு. நல்லபடியா செஞ்சு முடிச்சிடணும்'னு ராஜாண்ணன் ஏற்கனவே பயமும், பதட்டமுமா இருந்தாரு. இப்ப... இன்னும் அதிகமா பாத்ரூமுக்கும், ஒலிப்பதிவு கூடத்துக்குமா அலஞ்சுக்கிட்டிருந்தாரு. அப்போ... டைரக்டர் பி.மாதவன் வந்தார். அண்ணன்கிட்ட ‘"இந்தா ராஜா... மாங்காடு கோயிலுக்கு போய்ட்டு வந்தேன்... பிரசாதம். டோண்ட் வொர்ரி ராஜா... எல்லாம் நல்லபடியா நடக்கும்''னு வாழ்த்தினார். கரண்ட் வந்தது. மறுபடி ரிகர்ஸல் பார்த்து டேக் போனோம். பாடல் பதிவானதும் போட்டுக் கேட்டோம். மொத மொதல்ல கேட்டவுடனே எங்களுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. முறைப்படி இசையை கத்துக்கிட்ட வாத்ய கலைஞர்களும், எங்களுக்கு முன்னால இருந்த சினிமா இசைத்துறையில் இருக்க கலைஞர்களும், வந்திருந்தவங்களும் ரொம்பவே பாராட்டினாங்க.
அந்த திருப்தியோட. வீட்டுக்குவந்தோம். அம்மா எங்களுக்கு ஆரத்தி எடுத்து, திருஷ்டி சுத்திப்போட்டு வீட்டுக்குள்ள அழைச்சாங்க. அப்பவெல்லாம் ஸ்பூல் டேப்ரெக்கார்டர்தான் இருக்கும். அதில் எங்கம்மா கேட்கிறதுக்காகவே ரெக்கார்ட் பண்ணியிருந்த பாட்டை போட்டுக்காட்டுனோம். பாட்டக் கேட்ட எங்கம்மா தாங்க முடியாத சந்தோஷத்துல... “"இதென்னப்பா ஏம்பாட்டப் போட்டுட்டீங்க?''னு கேட்டாங்க. "எல்லாமே நீங்க குடுத்தது தானம்மா... எல்லாமே ஒங்கபாட்டுத்தான்''னு நான் சொன்னேன். உச்சி குளிர அம்மாவோட மனசு வாழ்த்துச்சு. எக்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. "என்னோட பாட்டாருக்கே?'னு அம்மா கேட்டது முழுக்க உண்மை. முதன்முதலா நாங்க இசைங்கிற ராஜகோபுரம் கட்றதுக்கு அஸ்திவாரமே... எங்கம்மா எங்களுக்காக பாடின தாலாட்டுப் பாட்டுத்தான். அன்னக்கிளி ஒன்னத்தேடுதே...
ஆறுமாசம் ஒரு வருஷம்... ஆவரம்பூ மேனிவாடுதே....ங்கிற இந்தப் பாட்டு எங்க பக்க கிராமங்கள்ல பாடுற கிராமியப்பாட்டு. எங்கம்மா இந்தப் பாட்ட அப்படியே மெதுவா இழுத்து... "அன்னக்கிளி... ஒன்னத்தேடுதே...'னு ராகத்தோட பாடினா... தூங்காம இருக்க கண்ணெல்லாம் அப்படியே போய் சொறுகிக்கிரும்.