கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள கந்திக்குப்பம் தனியார் பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. கடந்த ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மாணவர்களுக்கான என்.சி.சி. பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த மாணவிகள் அனைவருமே, அதே பள்ளியிலுள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். ஆகஸ்டு 9 -ஆம் தேதி கலையரங்கில் உறங்கிக்கொண்டிருந்த 12 வயது மாணவியை அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த என்.சி.சி. பயிற்றுநர் எனச் சொல்லிக்கொண்ட காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
யார் இந்த சிவராமன்?
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர். கிருஷ்ணகிரியில் மாயோன் குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பிட்காயின் போன்ற நிதிமோசடியில் ஈடுபடுவர்களுக்கு உடந்தையாக இருந்துவந்தவர். கிருஷ்ணகிரி அருகேயுள்ள கொண்டேபள்ளியில், தீர்த்தகிரி என்பவரின் குடும்பத்திலுள்ள நிலப்பிரச்சனையைச் சரிசெய்வதாகக் கூறி 37 லட்சம் ரூபாய் பெற்று சிவராமன் ஏமாற்றியிருக்கிறார். வழக்கறிஞர் படிப்பே படிக்காத சிவராமன், தன்னை வழக்கறிஞர் என்று விசிட்டிங் கார்டு போட்டுக்கொண்டு பலரையும் ஏமாற்றிவந்துள்ளார். தீர்த்தகிரி விவகாரத்திலும் பிரச்சனையை நீதிமன்றத்தில் சாதகமாக முடித்துத்தருவதாகக் கூறி 37 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். சொன்னதுபோல் நீதிமன்ற ஆணையையும் பெற்றுக்கொடுத்தார். பிறகுதான் அந்த ஆணை, பணம் கொடுத்ததற்காக அவர் கொடுத்த வங்கி ஆவணங்கள் அனைத்தும் போலி எனத் தெரியவந்தது.
இதையடுத்து அவர்மீது தீர்த்தகிரி குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரங்களில் உள்ள கிரானைட் அதிபர்களிடம் மிரட்டி பணம் வசூலிப்பது, அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப் பஞ்சாயத்து செய்துவந்திருக்கிறார். என்.சி.சி. நடைபெறாத பள்ளிகளைத் தேர்வுசெய்து, அங்குள்ள ஆசிரியர்களை அறிமுகம் செய்துகொண்டு பிறகு அந்தப் பள்ளிகளை அணுகி மாணவர்களுக்கு என்.சி.சி. பயிற்சியளித்து சான்றிதழ் தருவதாக அணுகுவார் சிவக்குமார். இதற்காக சுப்பிரமணியன் என்ற ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவரைத் தன் டீமில் சிவராமன் வைத்திருந்தார். இதுபோக சத்யா, சிந்து, உள்ளிட்ட வேறு சிலரையும் என்.சி.சி. பயிற்சியாளர்கள் என்ற போர்வையில் தன் டீமில் வைத்திருந்திருக்கிறார். இதற்காக பள்ளிகளில் ஒரு தொகை வசூலித்துக் கொள்வதோடு, மாணவிகளிடமும் கைவரிசையைக் காட்டி வந்திருக்கிறார்.
என்னதான் நடந்தது?
பாதிக்கப்பட்ட மாணவியின் சொந்த ஊர் கொத்தூர். அவரது பாட்டியின் ஊர் கிடப்பநாயனப்பள்ளி. கிங்ஸ்லி பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த பாதிக்கப்பட்ட மாணவி, தனது பாட்டி வீட்டிலிருந்து பள்ளிக்கு வந்துசென்றுள்ளார். ஆகஸ்டு 5-ஆம் தேதி கிங்ஸ்லி கார்டன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஏற்பாடு செய்திருந்த 5 நாள் என்.சி.சி. முகாமில் இந்த மாணவியும் இடம்பெற்றிருந்தார். மொத்தம் 17 மாணவிகள் கலந்துகொண்டனர். என்.சி.சி. முகாமுக்கு வந்த மாணவ- மாணவிகள், கிங்ஸ்லி பள்ளியின் ஆடிட்டோரியத்தில் இரவு தங்கவைக்கப்பட்டனர். ஆகஸ்ட் 8-ஆம் அதிகாலை மூன்று மணிக்கு என்.சி.சி. ட்ரைனர் சத்யா எழுப்பி, மாஸ்டர் சிவா கூப்பிடுகிறார் என அனுப்பிவைத்திருக்கிறார். அந்த மாணவியை ஆடிட்டோரியத்தின் படிக்கட்டு அருகே அழைத்துச்சென்று கீழே அமரச் சொல்லியிருக்கிறார் சிவராமன்.
தோளின் மேல் கைபோட்டபடி பேசியிருக்கிறார். அதை அசெளகரியமாக உணர்ந்து அந்த மாணவி கையைத் தட்டிவிடவும், "நான் ஆரம்பத்துலே சொன்னேன்ல... என்.சி.சி.ல அச்சம், கூச்சம் இருக்கக்கூடாதுனு. அதற்கான பயிற்சிதான் இது" என்றபடி தவறானபடி கையை வைத்திருக்கிறார். பிறகு பெண்ணிடம் வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார். பின் அந்த மாணவி தன் இடத்திலேயே போய் படுத்துக் கொண்டிருக்கிறார். காலையில் நான்கு மணிக்கு மற்ற மாணவர்கள் கிரவுண்டுக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது இந்த மாணவி செல்லாததைக் கண்டு ட்ரைனர் சத்யா, "நீ போகலையா?" என கேட்க, மாணவியோ எனக்கு அடிவயிறு வலிக்குது" எனச் சொல்லிவிட்டுச் செல்லவில்லை. ஏழு மணிக்கு தேநீர் இடைவேளை விடுவார்கள். அப்போது தனது சீனியர் மாணவிகளிடம் தனக்கு நடந்ததைச் சொல்லியிருக்கிறார். சீனியர் மாணவி ஒருத்தி, “இதே ஸ்கூல்லதான் என் அம்மா டீச்சரா இருக்காங்க. அவங்ககிட்ட சொல்றேன்” என்று ஆறுதல்படுத்தியிருக்கிறார்.
பின் முகாம் முடிந்ததும் மாணவிகள் எல்லோரும் சென்று பிரின்ஸிபால் சதீஷ்குமாரிடம் நடந்ததைச் சொல்லியுள்ளனர். அதற்கு பிரின்ஸிபால், "இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதீங்க. உங்களுக்குத்தான் கெட்ட பேரு. நான் பார்த்துக்கிறேன்" என சமாதானப்படுத்தியிருக்கிறார். மறுநாள் முகாம் நிறைவு விழாவில், மதியம் இரண்டரை மணிக்கு ஆடிட்டோரியத்துக்கு வந்து என்.சி.சி மாணவர்களுக்குப் பரிசளித்திருக்கிறார் பிரின்ஸிபால். அப்போதும் அந்த மாணவியிடம் “இந்த விஷயத்தைப் பெரிசுபடுத்தாத" என ஆலோசனை சொல்லியிருக்கிறார். பின்பு அனைவரும் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியும் வீடு திரும்பிவிட்டார். சில நாட்களுக்குப் பின் (ஆகஸ்ட் 16-ஆம் தேதி) பாட்டி வீட்டில் தங்கியிருந்த அந்த மாணவி இரவில் அடிவயிறு வலிப்பதாக அழுதிருக்கிறார். பாட்டி விவரம் சொல்ல, அந்தப் பெண்ணின் அம்மா வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் அம்மா ஒரு செவிலியர்.
அம்மா என்ன விவரமெனக் கேட்டபோது, எப்படிச் சொல்வதென தயங்கி மறைக்க, செவிலியரான அவளது தாய் சந்தேகப்பட்டு அழுத்திக் கேட்டதும், விவரத்தைச் சொல்லிவிடுகிறாள். இதையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மகளை அனுமதித்திருக்கிறார். மருத்துவமனை மாணவியைப் பரிசோதித்துவிட்டு பாலியல் வன்கொடுமை என்பதைத் தெரிந்து விவரங்களைக் காவல்துறைக்குத் தெரிவிக்க, பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வந்து விசாரித்து வழக்குப் பதிந்திருக்கின்றனர். இதையடுத்துதான் சிவராமன் மீது ஆகஸ்ட் 17-ஆம் தேதி வழக்குப் பதிவாகியிருக்கிறது.
சொந்தக் கட்சிக்காரரிடமே கைவரிசை!
குடியாத்தத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளாரன சுதாகர் என்பவர் இப்படி பிட்காயின் விவகாரத்தில் சிவராமனிடம் ஏமாந்திருக்கிறார். அதனால் பணத்தை திரும்பக் கேட்டு, மாயோன் குரூப் ஆப் கம்பெனியில் போய் பணம் தந்தால்தான் கிளம்புவேன் என படுத்தேவிட்டாராம். அவரைச் சமாதானப்படுத்த, சுதாகரை ஓய்வுபெற்ற சி.ஆர்.பி. வீரர் எனச் சொல்லி பள்ளியொன்றுக்கு அழைத்துச்சென்று கெளரவித்திருக்கிறாராம். ‘இது அரசியல்’, கருமலை கல்விக் குழுமம் என்ற பெயரில் 8 முதல் 10 படிப்பவர்களுக்கு சிவராமன் இலவச பாடப் பயிற்சி அளித்திருக்கிறார். அங்கே எதுவும் சில்மிஷம் நடந்ததா எனவும் காவல்துறை விசாரிக்கவேண்டும்.
அரசின் உடனடி நடவடிக்கை;
ஏற்கெனவே மேற்குவங்க விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாக இருப்பதால், இந்த விவகாரம் குறித்து அறிந்தவுடன் முதல்வர் உடனடியாக பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்திட உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழு ஒன்றை அமைத்திட ஆணையிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணையைத் துரிதமாக மேற்கொண்டு15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கவும், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து, குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் நிறுத்தி, கடும் தண்டனையைப் பெற்றுத்தர ஆணையிட்டுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையிலுள்ள என்.சி.சி. தலைமை இயக்குநரகம் அளித்த விளக்கத்தில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. கைதுசெய்யப்பட்ட சிவராமன் என்ற நபருக்கும் என்.சி.சி.க்கும் எந்த தொடர்புமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தபோது, “பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாகப் புகார் பெற்றவுடன் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தி தேவையான ஆலோசனை, உளவியல் உதவிகள் மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கைது;
இந்த விவகாரத்தில் சிவராமன், பாதிக்கப்பட்ட மாணவி படித்த பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியை உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவராமன் சத்யா சிந்து சுப்பிரமணியன் சக்திவேல், சதீஷ்குமார், பிரின்ஸிபால் சாம்சன் வெஸ்லி- ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் ஜெனிபர், கோமதி ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன் முரளி போலீஸ் விசாரணையில், இதுபோல் ஐந்து பள்ளிகளில் சிவராமன் என்.சி.சி. முகாம் நடத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. பி.சி.ஆர். ஸ்கூல், தர்மபுரி எஸ்.வி.வி. ஸ்கூல், அஞ்சூர், கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி டவுனிலுள்ள ஒரு பள்ளி கிங்ஸ்லி கார்டன் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் மத்தூர் பள்ளி போன்ற இடங்களிலும் என்.சி.சி. முகாம் நடத்தியிருக்கிறான் சிவராமன். அங்கு வேறெவரும் பாதிக்கப்பட்டார்களா என்பதையும் கண்டறிந்து அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் அளிக்கவேண்டும். இந்த நிலையில் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட சிவராமன் சேலம் மருத்துவமனையில் இறந்ததாகத் தெரியவந்துள்ளது.
காவல்துறையால் சிவராமன் ஆகஸ்ட் 19-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டபோதே, கைது நடவடிக்கையைத் தவிர்க்கும்விதமாக எலி பேஸ்ட்டை சாப்பிட்டிருந்திருக்கிறான். இதனால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் வைத்துதான் அவன் கைதுசெய்யப்பட்டிருக்கிறான். எலி பேஸ்ட் குடலில் ஒட்டிக்கொள்ளும் என்பதால், அங்கு மேல்சிகிக்சைக்கு வழியின்றி சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிவராமன் ஆகஸ்ட் 23-ஆம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரிக்கும்போது, அஞ்சூரைச் சேர்ந்த எஸ்.வி.வி. பள்ளியில் சில வாரங்களுக்கு முன் ஒரு மாணவியிடம் தவறாக நடந்து, அதைக் குறித்து சிவராமனின் மனைவிக்குத் தெரியவர சிவராமனின் கேள்வி கேட்டு சண்டையிட்டிருக்கிறார். அப்போதும் மனைவியை எமோஷனலாக மிரட்ட, மருந்தைக் குடித்துவிட்டார் சிவராமன். சிவராமன் பிரச்சனைகளில் சிக்கும் போதெல்லாம் அவரைக் காப்பாற்றும் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலச் செயலாளர் பிரபாகரன்தான், சிவராமனை மருத்துவமனையில் அனுமதித்துக் காப்பாற்றியுள்ளார். இம்முறை போலீஸ் நடவடிக்கைகளில் இருந்த தப்ப எலி பேஸ்ட் சாப்பிட்டாரா… இல்லை வசமாகச் சிக்கிவிட்டோம் தப்பமுடியாது என எலி பேஸ்ட் சாப்பிட்டாரா என்பது தெரியவில்லை.
ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் போலி என்.சி.சி. முகாம் நடத்திய மேலும் சில பள்ளிகளும் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.