Skip to main content

விவசாயிகள் உதவித்தொகை முடக்கம்; பிரதமரின் திட்டத்தில் 2 லட்சம் கோடி மெகா ஊழல்

Published on 28/11/2022 | Edited on 30/11/2022

- தெ.சு.கவுதமன்

 

Farmers subsidy freeze! 2 lakh crore mega corruption in Prime Minister's plan!

 

பாராளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் வாக்குகளைக் கவர்வதற்காக, 2018 டிசம்பர் மாதத்தில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 5 ஏக்கருக்கும் குறைவாக நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாயை தலா 2,000 ரூபாய் என்று மூன்று தவணைகளாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுக்க சுமார் 12 கோடி விவசாயிகள் (11.84 கோடி) பயனாளர்களாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதல் தவணையாக 2,000 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
 

இந்தத் திட்டத்தை அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய விளம்பரமாகக் காட்டினார்கள். அதற்காகவே இத்திட்டத்தின் தொடக்க விழாவை 2019 மார்ச் மாதத்தில் நடத்தினார்கள். பின்னர் அத்திட்டப்படி நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தில் ஒவ்வொரு தவணையிலும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததுதான் சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கியது. இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் தங்களுக்கான உதவித் தொகையைப் பெறுவதற்காகக் காத்திருந்தால் உதவித்தொகை நிறுத்தப்படுவது தொடர்ந்தது. ஒவ்வொரு தவணையாக விவசாயிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் 12வது தவணைத் தொகை வெறும் 3.87 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது, முதல் தவணையில் இருந்த விவசாயிகள் எண்ணிக்கையைவிட 67% குறைவாகும்.

 

தமிழ்நாட்டில் முதல் தவணை ஊக்கத்தொகை 46.8 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 12 வது தவணை ஊக்கத்தொகை அதில் பாதியாக 23.04 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவே கேரளத்தில் 2019ஆம் ஆண்டு 36.99 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது 2022ஆம் ஆண்டில் 24.23 லட்சமாகக் குறைந்துள்ளது. தெலுங்கானாவில் 39.10 லட்சம் விவசாயிகள் 24.32 லட்சம் விவசாயிகளாகக் குறைந்துள்ளனர். இப்படியாக இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் பயனாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

Farmers subsidy freeze! 2 lakh crore mega corruption in Prime Minister's plan!

 

இதில் என்னவொரு வேடிக்கையென்றால் இப்படி விவசாயிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த அக்டோபரில் 12வது தவணையை வழங்க ஆணையிட்ட பிரதமர், இதன்மூலம் 11 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்றும் அவர்களுக்காக 16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதுவரை இத்திட்டத்துக்காக ஒன்றிய அரசு 2.16 லட்சம் கோடியை செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உண்மையில் 3.87 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே தொகையைச் செலுத்துகிறார்கள் என்றால் 7 கோடிக்கு மேலான விவசாயிகளின் கணக்கு என்னவானது என்பது பெருத்த கேள்விக்குறியாக உள்ளது. அப்படியானால் இதற்காகச் செலவிடப்பட்டுள்ள தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் பலன்பெற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் யார் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

 

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சபையைச் சார்ந்த விவசாயி ஒருவர், "மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி குறைக்கப்பட்டிருப்பதற்கு ஒன்றிய அரசின் சார்பாக எந்தவொரு சரியான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதன் போக்கைக் கவனித்தால் கூடிய விரைவில் இந்த ஊக்கத்தொகை முற்றிலுமாக நிறுத்தப்படுமென்றே தெரிகிறது" என்று குறிப்பிட்டார். கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாகக்கூறி கொஞ்சங் கொஞ்சமாக அந்த மானியத்தை காலி செய்ததுபோல் விவசாயிகளையும் நம்ப வைத்து மோசம் செய்யப்போகிறதோ ஒன்றிய அரசு?

 

 

Next Story

'தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்'-மோடி ஆரூடம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'The election results of Tamil Nadu will surprise everyone'-Modi Arudam

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போதே தேர்தல் பரப்புரைகளுக்கான தீவிர முயற்சிகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று சேலத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பாமக, பாஜக கூட்டணியில் சேர்ந்திருக்கும் நிலையில், இன்று நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ், ஏனைய கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகிறது. எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை. கோயம்புத்தூரில் இருந்து மேலும் சில காட்சிகள் இங்கே' என கோயம்புத்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி குறித்த காட்சிகளை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

Next Story

கோவையில் இன்று பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
PM Modi's 'Road Show' in Coimbatore today

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் (16-03-24) பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக நடைபெறும், இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை வரும் ஜுன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். ஏற்கனவே கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதையும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதையும் மேற்கோள்காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘பாதுகாப்பு காரணங்கள், பொது நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடு ஷோ மூலம் பாதிப்பு ஏதும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், “இதுபோன்று அனுமதி கேட்கும் எந்த கட்சிக்கும், அமைப்புக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன்  4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இது தொடர்பான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வரவிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 5:30 மணிக்கு கோவை வருகிறார்.

அதன் பின்னர், அங்கிருந்து கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார். கோவை - மேட்டுபாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, மாலை 5:45 மணியளவில் ரோடு ஷோவை தொடங்கும் பிரதமர் மோடி, ஆர்.எஸ். புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார். பிரதமர் மோடியின் வருகையொட்டி, கோவையில் 5,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.