Skip to main content

பிரபாகரன்- பாஸ்கரன், வேதாரண்யம் - வீராரண்யம்... தமிழர்களை கொச்சைப்படுத்துகிறதா ஃபேமிலி மேன் 2? 

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

 

web

'ஈழத்தில் நடந்த இன விடுதலை போரையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்துகிறது, மோசமாக சித்தரிக்கிறது' என்ற வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்களின் எதிர்ப்பையும் 'தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வாய்ப்புள்ள இந்த வெப்சீரீஸ் வெளியாவதை தடை செய்யவேண்டுமெ'ன்று கோரிய தமிழக அரசின் கடிதத்தையும் மீறி ஜூன் 4- ஆம் தேதி வெளியாகிவிட்டது ஃபேமிலி மேன்2. தமிழியக்கங்கள், தலைவர்கள் இந்த வெப்சீரீஸை எதிர்த்தது சரியா?

 

1989- ஆம் ஆண்டில் நக்கீரன் இதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தனது மரணம் குறித்து வெளிவந்த ஒரு செய்தியை தானே படித்துக்கொண்டு இருப்பதுபோன்ற அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.அதை நினைவுபடுத்தும் ஒரு காட்சியுடன் வெப்சீரீஸ் தொடங்குகிறது. ஒரு இலங்கைத் தமிழ் போராளி இயக்கத்தின் தலைவரான பாஸ்கரன், தான் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தியை தானே வாசிக்கிறார்.போர் உச்சத்திற்கு சென்று அந்த இயக்கத்திற்குப் பின்னடைவு நேர, அந்த இயக்கத்தின் மிக முக்கியமான மூவரான பாஸ்கரன், சுப்பு, திலீபன் மூவரும் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.

 

இன்னொரு பக்கம் ஃபேமிலி மேன் தொடர்களின் நாயகனான ஸ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாயி), தனது டாஸ்க் (இந்திய உளவுத்துறையின் ரகசிய பிரிவு) சீக்ரட் ஏஜென்ட் வேலையை விட்டுவிட்டு தனது குடும்பத்துக்காக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் 9 டூ 5 வேலையில் அமர்ந்திருக்கிறார்.அவருக்கு அங்கு மனது ஒட்டவேயில்லை. அந்தத் தமிழ் இயக்கம், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் இன்னொரு இயக்கத்துடன் இணைந்து சென்னையில் வைத்து இந்திய பிரதமரை கொல்லத் திட்டமிடுகின்றது. ஸ்ரீகாந்த், தன் கார்ப்பரேட் வேலையிலிருந்து வெளியே வந்து மீண்டும் டாஸ்க் ஏஜெண்டாகி அந்தத் தாக்குதல் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதே ஒன்பது எபிசோடுகளாக சொல்லப்பட்டிருக்கும் ஃபேமிலி மேன் 2 தொடரின் கதை. 

 

இந்தத் தொடரின் ட்ரெயிலர் வெளிவந்தபோது உண்டான எதிர்ப்புக்குக் முக்கிய காரணங்களாக இருந்தவை சமந்தா நடித்த பாத்திரமும் ட்ரெயிலரில் இருந்த சில வசனங்களும். தமிழ் பேசும் பெண் கிளர்ச்சியாளராக நடித்திருந்த சமந்தா "நான் எல்லாரையும் சாகக்கொல்லுவேன்..." என்று ஆவேசமாகப் பேசினார். "ஒரு எதிர்பார்க்கப்படாத கூட்டணி இருக்கு...ஐ.எஸ்.ஐக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும்" என்று வந்த இன்னொரு வசனமும் கொஞ்சம் கூட சம்மந்தமில்லாமல் விடுதலைப் புலிகளையும் ஐ.எஸ்.ஐயையும் இணைத்து இல்லாத ஒன்றை நிறுவுகிறார்கள் என்ற கடுமையான விமர்சனத்தை பெற்றது. முழுமையாகப் பார்த்துவிட்டு கூறுங்கள் என்று சொல்லியிருந்தார்கள் வெப்சீரீஸ் குழுவினர். முழுதாகப் பார்த்தாயிற்று. தமிழியக்கத்துக்கும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அமைப்புக்கும் தொடர்பு ஏற்படுவதாகவும் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி ஒரு தாக்குதலை திட்டமிடுவதாகவும் கதை அமைந்திருக்கிறது.

 

எந்த இடத்திலாவது, 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று இயக்கத்தின் பெயரையோ அல்லது உண்மையாக வாழ்ந்த, வாழும் நபர்களின் பெயர்களையோ நேரடியாகக் குறிப்பிடுகிறார்களா? ஏன், அவர்கள் 'பொறுப்புத்துறப்பில்' போடுவது போல கற்பனை கதையாக இருக்கக்கூடாதா? இருக்கலாம். ஆனால் பாஸ்கரன் என்ற பெயருடன் தலைவர், திலீபன், செல்வராசன், ராஜி போன்ற பெயர்களில் இயக்கத்தினர், நாடு கடந்த அரசாங்கம் அமைக்கும் முயற்சி என பல விஷயங்களும் உண்மை வரலாற்றை நினைவுபடுத்தும்போது முழுமையான கற்பனைக்கதை என்று ஒதுக்க முடியவில்லை என்பதே உண்மை. ராணுவத்தின் தலைமை பதவியில் இருந்து இலங்கையின் அதிபராகும் ஒரு பாத்திரமும் இருக்கிறது. 'ரூபதுங்கா' என்ற அந்தப் பாத்திரம் 'கோத்தபய ராஜபக்சே'வை நினைவுபடுத்தாதா?

web series

வெப்சீரீஸில், அந்த இயக்கத்தின் தலைவரான 'பாஸ்கரன்', போர் உச்சத்தில் இருக்கும்போது தன் சகாக்களுடன் இலங்கையிலிருந்து தப்பி லண்டன் செல்கிறார். அவரது நெடுங்கால நண்பரும் இயக்கத்தின் முக்கியமானவருமான திலீபன் நாடு கடந்த அரசாங்கத்தை பாஸ்கரன் தலைமையில் அமைத்து அதற்கு இந்தியா, லண்டன், ஃபிரான்ஸ் உள்ளிட்ட அரசாங்கங்களின் அங்கீகாரத்தை பெறும் முயற்சியில் இருக்கிறார். அந்த நேரத்தில் பாஸ்கரனின் தம்பி சுப்பு, சென்னையில் கொல்லப்பட, கோபமடையும் பாஸ்கரன், அரசியல் ரீதியான முன்னெடுப்புகளில் நம்பிக்கையிழந்து மீண்டும் வன்முறை பாதையை தேர்ந்தெடுக்கிறார்.

 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், தலைமைப் பண்புக்கும், ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்றவர். இயக்கத்தில் இருந்தவர்களைத் தாண்டி, பல பத்திரிகையாளர்கள், வெளிநாட்டவர்கள் கூட இதை குறிப்பிட்டிருக்கின்றனர். அவரை நினைவுபடுத்தும் அந்தப் பாத்திரம், தப்பிச் செல்வதும், வெளிநாட்டிலிருந்துகொண்டு இயக்கத்தவர்களை ஆட்டிவைப்பதும்,தனது தம்பியின் இழப்புக்காக இந்திய பிரதமரின் மீது தாக்குதல் நடத்த முடிவெடுப்பதும், மது அருந்துதலும் என எதிர்மறையாகவும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உச்சகட்டமாக ஐ.எஸ்.ஐ தொடர்புடைய நபர்களின் உதவியை பெற்று இந்தியாவில் ஒரு தாக்குதல் நடத்தத் திட்டமிடுவது என்பது வரலாறு சொல்லாத பழியை சுமத்தும் செயலாகும்.

 

விடுதலை புலிகள் பின்பற்றிய ஒழுக்க விழுமியங்கள் வலிமையானவை. சமந்தா நடித்துள்ள ராஜி பாத்திரம், தனது நோக்கத்தை, இலட்சியத்தை அடைய எந்த எல்லைக்கும் செல்வார் என்பது போலக் காட்டும் பல இடங்கள் உள்ளன. கதையின் முக்கிய தரப்பாக இருப்பது அந்தத் தமிழ் இயக்கம். அவர்களது போராட்டத்தின் பின்புலம், காரணம் வெறும் ராணுவத்தின் அட்டூழியம் என்பதுபோல சுருக்கப்பட்டிருக்கிறது. சமந்தா, ஒரு இடத்தில் சொல்லும் சிறிய ஃப்ளாஷ்பேக் மட்டும்தான் அவர்கள் கொடுக்கும் அதிகபட்ச விளக்கம். ஒரு நெடிய வரலாற்றை மிகச் சிறியதாக, நியாயமற்றதாக மாற்றியிருக்கிறது இந்த அணுகுமுறை. முந்தைய பகுதியில் அப்பாவி இசுலாமியர்கள் எப்படி தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டு, சில நேரங்களில் கொல்லப்படுகிறார்கள் என்பதை சொல்லும் காட்சிகள் உண்டு. அந்த சமன்படுத்தும் முயற்சி கூட இந்தப் பகுதியில் நடந்தது போலத் தெரியவில்லை.

family man 2 web series

கதைப்படி தமிழ்நாட்டின் 'வீராரண்யம்' (வேதாரண்யம் ஞாபகம் வரலையா?) என்ற ஊரில் முழுக்க முழுக்க அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் நிறைந்துள்ளனர். விசாரணைக்கு செல்லும் அதிகாரிகளின் காரை பஞ்சராக்குகிறார்கள், காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சமந்தாவை துப்பாக்கியுடன் வந்து சண்டை போட்டு அழைத்துச் செல்ல உதவுகிறார்கள். கதை நடக்கும் காலகட்டம் 80கள் அல்ல, தற்காலம்தான்.    

 

மொத்தத்தில் முழு வெப்சீரீஸையும் பார்த்து முடிக்கும்போது விவரம் தெரியாத யாராக இருந்தாலும், வெப்சீரீஸில் வரும் இயக்கத்தின் மேல் வெறுப்பு வரும்படி வெற்றிகரமாக அமைந்துள்ளது திரைக்கதை. 'இது புனைகதைப் படைப்பாகும். உண்மையான நபர், நிகழ்வுகளுடன் இருக்கும் ஒற்றுமை தற்செயலானதே' என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ள முடியாமல் காயப்படுவதும் நம் சாய்ஸாம். உண்மை வரலாற்றில் கற்பனை கலந்து எடுக்கும் வணிக பொழுதுபோக்குக்காகத் தியாகம் நிறைந்த போராட்ட வரலாறு சிறுமைப்படுத்தப்படக்கூடாது.  

 

Next Story

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் 4 புதிய எபிசோடுகள்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
hot bread web series update

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், அதன் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் துவங்கியது. இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. இந்த சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களைச் சுற்றி நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான் ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில், நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரிஸில், கடந்த வார இறுதி எபிஸோடில் ரீனா, மருத்துவர் ரதியின் மகள் எனும் டிவிஸ்ட் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்கு கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தான்தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள்.

இந்த சூழ்நிலையில் ரீனாவின் கேள்விக்கு ரதியின் பதில் என்ன? ஏன் ரீனாவை பிறந்தவுடன் தன்னுடன் வளர்க்காமல் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றாள்? ரீனாவை மகளாக ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்தில் இணைத்துக் கொள்வாரா?. இத்தனை கேள்விகளுக்கு அடுத்தடுத்த எபிஸோடுகளில் பதில் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கங்குவா டூ கேம் சேஞ்சர் - பட்டியலை வெளியிட்ட முன்னணி ஓடிடி நிறுவனம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
kanguva to game changer amazon prime ott announced his list

திரையரங்கிற்கு பின் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் அதிகளவில் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதே போல் வெப் சீரிஸ்களுக்கும் படங்களுக்கு நிகரான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் 2024ல் தங்களது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

கங்குவா - சூர்யாவின் 42ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யூட்யூபில் 11 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. 

கேம் சேஞ்சர் - ஷங்கர், ராம் சரண் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. ஆந்திராவில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ரிலீஸ் அப்டேட் நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். 

சிட்டாடெல் - வெப் சீரிஸான இதில் வருண் தவான், சமந்தா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜ் மற்றும் டீகே இயக்கி வரும் இத்தொடர் ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சிட்டாடெல் தொடரின் இந்திய பதிப்பாகும். இந்தியாவில் சிட்டாடல் ஹனி பனி என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. 'கேங்க்ஸ்' - சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ ரன்னராக பணியாற்றும் இந்த சீரிஸில் அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நோஹா ஆபிரஹாம் என்பவர் இயக்குகிறார். 

சுழல் சீசன் 2 - ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுத்தில் பிரம்மா மற்றும் சர்ஜுன் இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், லால் சரவணன், மஞ்சிமா மோகன், கௌரி கிஷன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதைத் தவிர்த்து ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2, அபிஷேக் பச்சன் நடித்துள்ள 'பி ஹேப்பி', அனுஷ்கா ஷெட்டியின் ‘காதி’, விஜய் தேவரகொண்டாவின் ஃபேமிலி ஸ்டார், எனப் பல படங்களின் திரையரங்கிற்கு பின் வெளியாகும் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.