தமிழ் அரசியலும் தமிழ் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. "பராசக்தி' வசனம் மூலம் அரசியலிலும் சினிமாவிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியவர் கலைஞர். அவருடைய எழுத்தின் வீச்சும் பேச்சின் வசீகரமும் தமிழக முதல்வராக்கியது. தான் நடித்த முக்கால்வாசிப் படங்களில் ஏழைப்பங்காளனாக நடித்த எம்.ஜி.ஆரும் சினிமாவில் டாப் ஹீரோவாக கோலோச்சி, அரசியலில் உச்சத்தைத் தொட்டு முதல்வரானார். ஆனால் சினிமாவிலிருந்து ரிடையர்டான ஜெயலலிதாவோ, அரசியல் விபத்து மூலம் திடீரென முதல்வராக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் கலைஞர் தனது பூம்புகார் புரொடக்ஷன்ஸ் மூலம் பல குடும்பப்பாங்கான படங்களைத் தயாரித்ததோடு, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிரான அரசியல் சாட்டையடி படங்களையும் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் சினிமா தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸை நிர்வகித்த ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் பவர்ஃபுல்லாக இருந்த போதும் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னும் சத்யா மூவீஸ் மூலம் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்தார். ஆர்.எம்.வீ.யின் சத்யா மூவீஸ் தயாரித்த கடைசிப் படம்தான் ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்த எதிர்பார்ப்புகளுக்கு அடித்தளமிட்ட பாட்ஷா.
இப்படி தங்களது அரசியல் பவர் மூலம் அப்போதிலிருந்து இப்போது வரை சினிமாவிலும் கொடி நட்டு, செழிப்பாகவே இருந்து வருகிறார்கள். 1980-களில் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த கே.கே. எஸ்.எஸ்.ஆர்., "பூ ஒன்று புயலானது', "இதுதாண்டா போலீஸ்' போன்ற அரசியல் தடாலடி படங்கள் உட்பட ஏகப்பட்ட படங்களின் தென்மாவட்ட வினியோக உரிமையை வாங்கி நல்ல வருமானம் பார்த்தார்.
1991-96 ஜெ. மந்திரிசபையில் இருந்த கண்ணப்பன், ரகுபதி, நடேசன் பால்ராஜ், உட்பட பல மந்திரிகள் சினிமா வினியோகஸ்தர்களாகவும் பல படங்களுக்கு மறைமுக தயாரிப்பாளர்களாகவும் இருந்துள்ளனர். அதே போல் மந்திரிகளின் வாரிசுகளும் சினிமா தயாரிப்பிலும் வினியோகத்திலும் இறங்கி, வளப்படுத்திக்கொண்டார்கள். சசிகலா வகையறாக்களின் சில நூறு கோடிகள், மதுரை அன்புச் செழியன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து பலநூறு கோடிகளாகின.
2006-ல் கலைஞர் தமிழக முதல்வரானதும் கலைஞர் குடும்பத்தினரும் அமைச்சர்களும் தி.மு.க. வி.ஐ.பி.க்களும் சினிமா உலகை நோக்கி தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள். மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் "க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸ்', மு.க.தமிழரசுவின் "மோகனா மூவீஸ்', கலாநிதி மாறனின் "சன் பிக்சர்ஸ்', உதயநிதி ஸ்டாலினின் "ரெட் ஜெயண்ட்' என கலைஞர் குடும்பத்தின் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொடி நாட்ட... அது திரையுலகிலும் அரசியலிலும் கடும் சர்ச்சைகளை உண்டாக்கி 2011 தேர்தல்களம் வரை எதிரொலித்தது.
சேப்பாக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், பல சினிமாக்களின் சென்னை மாநகர வினியோகஸ்தராக இருக்கிறார். "ஆதிபகவன்'’என்ற படத்தைத் தயாரித்து ரிலீஸ் செய்வதற்குள் பெரும் நொம்பலத்திற்குள்ளானதால், படத் தயாரிப்பையே நிறுத்திவிட்டார்.
மீண்டும் 2016-ல் ஜெ. ஆட்சி வந்ததும் சினிமா உலகையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் காரியங்களில் இறங்கியது சசிகலா வகையறா. சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் "ஜாஸ் சினிமாஸ்' என்ற நிறுவனத்தை துவங்கி, பெரிய ஹீரோக்கள் படங்களின் ஒட்டுமொத்த தமிழக வினியோக உரிமையையும் வாங்கினார். சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபோனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் தியேட்டரை 1,000 கோடி ரூபாய்க்கு வாங்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தார்.
இப்படியெல்லாம் தனது தலைவியும் தன்னை முதல்வராக்கிய சசிகலாவும் சினிமா மீது கண் வைத்திருப்பதை கவனித்த எடப்பாடி தரப்பு இப்போது சினிமா உலகிற்குள் நுழைந்துவிட்டது. முதல்வரின் நம்பிக்கைக்குரிய அரவிந்த் என்பவர் மூலம் "பிளஸ்மேக்ஸ்' என்ற கம்பெனியை ஆரம்பித்து, அதற்கு சப்போர்ட்டாக மில்க் புள்ளியை நியமித்து, ரஜினியின் ‘"தர்பார்'’படத்தின் திருச்சி,—தஞ்சை ஏரியாக்களின் வினியோக உரிமையை வாங்கினார் எடப்பாடி.
இப்போது விஜய்யின் "மாஸ்டர்'’படத்தின் அதே ஏரியாக்களின் வினியோக உரிமைக்காக மிரட்டலில் இறங்கியுள்ளனர் அரவிந்தும் மில்க்கும் என்கிறது சினிமா ஏரியா. "மாஸ்டர்'’ படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ள நிலையில், படத்தின் ஒட்டுமொத்த வியாபாரம் 250 கோடிக்கு முடிந்துள்ளதாம். படத்தின் தமிழக வினியோக உரிமையை லலித் என்பவர் வாங்கி, மாவட்ட ரீதியாக பிரித்தும் கொடுத்து விட்டார். அதன்படி திருச்சி,—தஞ்சை உரிமையை ஆர்.விஸ்வ நாதனின் மருமகன் ரவிசங்கர் வாங்கியிருந்தார். திடீரென முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த மிரட்டலால் அரவிந்தின் பிளஸ்மேக்ஸ் கம்பெனிக்கு கொடுக்கும்படி ஆகிவிட்டது என்கின்றனர்.
"இது உண்மையா' என ரவிசங்கரிடம் கேட்டபோது, "ஆமா சார், 8.40 கோடி பேசி, கடந்த 05-ஆம் தேதி அட் வான்ஸ் கொடுக்கலாம்னு இருந்தேன். அப்ப லலித் எனக்கு போன்பண்ணி "மில்க்குக்கு வினியோக உரிமையைக் கொடுக்கச் சொல்லி பிரஷர் வருது, கொடுக்கலேன்னா ரிலீஸ் நேரத்துல பிரச்சினை வரும். அதனால சாரிங்க' என்றார். இந்தப் பிரச்சனையை திருச்சி மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கேசவனிடம் சொல்லியிருக்கேன்'' என்றார்.
நாம் கேசவனிடம் பேசியபோது, ""ஏற்கனவே "பிகில்'’படத்தால் ரவிசங்கருக்கு லலித் 40 லட்சம் தரவேண்டியிருக்கு. இப்ப இந்தப் பிரச்சினை வேற'' என்றார். "தர்பார்'’வினியோக உரிமையை வாங்கியதும், தனது தம்பியை அழைத்துக்கொண்டு போய் ஆர்.விஸ்வநாதனிடம் ஆசி வாங்கினார் மில்க் புள்ளி. இப்போது அந்த ஆர்.வி. மருமகனுக்கே ஆப்பு அடித்திருக்கிறார்.