கரோனா... உலகின் இயக்கத்தையே மாற்றியமைத்திருக்கும் இந்த வைரஸ் பாதிக்காத துறையே இல்லை. பெரும்பாலானவர்களை எதிர்மறையாகவும் சில துறைகளை சேர்ந்தவர்களை நேர்மறையாகவும் பாதித்திருக்கிறது. கரோனா, ஊரடங்கு, பொருளாதார முடக்கம் என இந்த சங்கிலியால் என்ன செய்வதென்றே தெரியாமல் சில தொழிலதிபர்கள், தொழிலாளிகளின் நிலை இருக்கிறது என்றால் சிலரோ இதை வைத்து இன்னும் கூடுதல் லாபம் ஈட்டுகின்றனர்.
கரோனா ஊரடங்கை தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தி பல பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இதை நிரூபிக்கிறது 'லிங்க்டுஇன்' (Linkedin) சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள். மார்ச் இறுதியில் கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. தொடக்கத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தொழில் நடவடிக்கைகள் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கின. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்க அனுமதித்தன.
வீட்டிலிருந்து வேலை பார்த்தால் கரோனாவை விரட்டலாம், குடும்ப உறவினர்களிடம் நாம் அதிக நேரம் செலவழிக்கலாம், மன அழுத்தத்தைப் போக்கலாம் என்ற எண்ணம் ஆரம்பத்தில் ஏற்பட்டது. அந்த எண்ணம் ஒரு பெரும் பிம்பமாக மேலாண்மை அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது. வீட்டிலிருந்து வேலை பார்ப்பது நல்லது என்று பலரும் நினைத்தனர். வீட்டிலிருந்து பணிபுரிந்தால் தங்கள் குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவு செய்ய முடியுமென்று நம்பினர். ஆரம்பத்தில் அது உண்மையாகவும் கூட இருந்தது. ஆனால் போகப்போக நடந்தது என்ன?
'லிங்க்டுஇன்' சார்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் சுமார் 16,000 இந்திய ப்ரொபஷனல் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 60 சதவீதத்தினர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் தனிமையில் வாடுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 41 சதவீதத்தினர் இந்த நடைமுறையால் தங்களது திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளனர். வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் வேலை - குடும்பம் ஆகிய இரண்டும் ஒன்றாகப் பிணைவதால் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவதாக 46 சதவீதத்தினர் கூறியுள்ளனர். அதேபோல, இந்த நடைமுறையால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக 39 சதவீதத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
வேலைக்குச் சென்றுவரும் பயண அலைச்சலை மட்டுமே இந்த 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறை மிச்சப்படுத்தியுள்ளது. அதற்கு மாறாகப் பல துயரங்களை தினமும் சந்தித்து வருவதாகக் கூறுகின்றனர் ஐடி ஊழியர்கள். இந்நிலையில், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் பணியாளர்களில் ஐந்தில் ஒருவர் தனிமையை உணருவதாக 'லிங்க்டுஇன்' ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து ஐடி ஊழியர்களிடம் விசாரித்த போது, "இது எங்களுக்குச் சோதனை காலம், நாங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும்பொழுது பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டும் என்பதற்காக அதிகமாக வேலை பார்ப்போம். ஆனால் இந்த ஊரடங்கில் எங்கள் வேலையை நிலை நிறுத்திக்கொள்ளவே நாங்கள் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது.
8 மணி நேரம் வேலை பார்த்த நாங்கள் தற்போது இரவு பகல் பாராது உழைக்கிறோம், அலுவலகத்தில் நாங்கள் தினம் செய்த வேலையை அன்று மாலை எங்கள் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்போம். ஆனால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையால் ஒவ்வொரு மணி நேரமும் எங்கள் உயர் அதிகாரி தொலைபேசியில் 'என்ன நடக்கிறது, முடிந்ததா வேலை?' என்று எங்களை சோதனை செய்துகொண்டே இருக்கிறார். இதனால் நாங்கள் பயந்து கண்கொத்தி பாம்பைப் போல கணினியின் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். திடீர் திடீரென மீட்டிங் போடுவார் எங்கள் உயர் அதிகாரி. அதனால் நாங்கள் சரியான நேரத்தில் உணவு கூட உண்ண முடியவில்லை. அலுவலகத்தில் நாங்கள் வேலை பார்ப்பதை விட வீட்டில் இருமடங்கு வேலையைச் செய்கிறோம்" என்று புலம்புகின்றனர்.
மேலும், "தற்போது எங்கள் குழந்தைகளுக்கு இணைய வழி கல்வியும் நடக்கிறது. எங்கள் குழந்தைகளுக்கு இணையவழி கல்வி குறித்தோ அல்லது கைப்பேசிகளை இயக்கவோ தெரியவில்லை. எனவே நாங்களும் எங்கள் குழந்தைகளோடு இணையவழி கல்வி வகுப்புகளோடு இருக்க வேண்டியுள்ளது. எங்களோடு சேர்ந்து எங்கள் குழந்தைகளும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். வீட்டில் 8 மணி நேரத்திற்கு மேலாக மடிக்கணினியை இயக்குவதால் எங்கள் உடல் மற்றும் வீடும் அதிக வெப்பமடைகிறது. இதைத் தவிர்க்க வீட்டில் குளிர்சாதன கருவி பொறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்களில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கான மின்சார கட்டணம், இணைய சேவை கட்டணம் போன்றவற்றை தரும் வழக்கமில்லை.
தற்போது அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தாலும் இன்னும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க உத்தரவிட்டுள்ளார்கள். இதற்குக் காரணம் ஊழியர்கள் மீது வைத்துள்ள அக்கறை என்கின்றனர் தொழில் நிறுவனத்தினர். ஆனால் ஊழியர்கள் வீட்டில் வேலை பார்ப்பதால் அலுவலக கட்டிட வாடகை, மின்சாரம் மற்றும் இணைய சேவை செலவுகள் எல்லாம் நிறுவனத்திற்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் லாபமும் பெருகியுள்ளது. ஆனால் எங்களுக்கோ பெரிய பயனெதுவும் இல்லை. இப்படியான சூழலில் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில், இந்த கஷ்டங்களை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டு வேலை பார்த்து வருகிறோம்" என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.
நிறுவனங்களின் தரப்பில் சில மனித வள மேலாண்மை அதிகாரிகளிடம் பேசியபோது, "அனைத்து ஐடி நிறுவனங்களும் ஏசி கட்டிடங்களில் இயங்குகின்றன. அலுவலகத்துக்கு வந்து செல்வதும் ஏசி வாகனங்களில்தான். இப்படி இருக்கையில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருந்தாலும் எளிதில் அனைவருக்கும் பரவிவிடும். ஊழியர்களின் பாதுகாப்பில் நாங்கள் ரிஸ்க் எடுக்க முடியாது. இதனால் நிறுவனங்களின் செலவுகள் கணிசமாகக் குறைந்திருப்பதை மறுக்க முடியாது" என்று கூறுகின்றனர்.
தற்போது வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை விட அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். எவ்வித இடையூறுகளும் இல்லாமல் வேலை பார்ப்பது, முழு மனதுடன் முழு வீச்சுடன் வேலை பார்ப்பது போன்றவை அலுவலகச் சூழலிலேயே ஊழியர்களுக்கு சாத்தியப்படுகின்றன. அவரவர் வீடுகளில் தனித்தனியே வேலை பார்ப்பதால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் இடைவெளி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இப்படி பல காரணங்களால், 'போதும்ப்பா சாமி வொர்க் ஃப்ரம் ஹோம்' என்று பலரும் அலுவலகத்திற்குச் செல்லும் விருப்பத்தோடு காத்திருக்கின்றனர்.
-சேகுவேரா