Skip to main content

பிரச்சாரப் பாசாங்குகள்! மக்களின் தீர்ப்பு!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
Election atrocities in Virudhunagar constituency

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்து சாமானிய அரசியல்  நோக்கர்கள் சிலர் வெளிப்படுத்திய கருத்துகள் இவை..

தோல்வி பயத்தால் உறவுகளைக் களமிறக்கி ஆழம் பார்த்த தலைவர்கள்!

தருமபுரியில் பா.ம.க.வேட்பாளராக அன்புமணி ராமதாசும், விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக பிரேமலதாவும், பா.ஜ.க. வேட்பாளராக சரத்குமாரும் ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகள் மூலம் பதில் கிடைத்துள்ளது.

நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று டிடிவி தினகரன் போன்றவர்கள் விமர்சித்த நிலையில், இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது? அன்புமணி ராமதாஸ் தன் மனைவி சவுமியாவை ஏன் தேர்தலில் நிறுத்தினார்? தன் கட்சியை பா.ஜ.க.வில் கரைத்துவிட்டு, மனைவி ராதிகாவை ஏன் விருதுநகர் தொகுதியில் சரத்குமார் போட்டியிட வைத்தார்? ஓபிஎஸ். டிடிவி தினகரன், சசிகலாவை ஓரம் கட்டிய பலவீனமான  அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து,  தன் மகன் விஜயபிரபாகரனை ஏன் விருதுநகரில் தேமுதிக வேட்பாளராக பிரேமலதா நிறுத்தினார்?

வெற்றி வாய்ப்பில் சந்தேகம் எழுந்ததாலேயே தாங்கள் தேர்தலில் போட்டியிடாமல்,  உறவுகளைக் களமிறக்கி, அவர்களுக்கு தோல்வி திசையைக்காட்டியுள்ளனர். கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோட்டதும் இந்தச் சுயநலத்தின் வெளிப்பாடுதான்.

ஆன்மிக அரசியலும் பொய்ப் பரப்புரைகளும் தோற்றுப்போயின!

தியானம், அங்கப்பிரதட்சணம், மடிப்பிச்சை நாடகம் எல்லாம் வேலைக்கு ஆகாதவை என்பதை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.

Election atrocities in Virudhunagar constituency

இரவோடு இரவாக ச.ம.க.வை கலைத்துவிட்டு, தன் மனைவி ராதிகாவுக்காக, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியை பா.ஜ.க. தலைமையிடம் கேட்டுப்பெற்றவர் சரத்குமார். சென்னையிலிருந்து கிளம்பிய சரத்குமாரும் ராதிகாவும் விருதுநகர் தொகுதியில் தங்களுக்குத் தெரிந்த  சினிமா பாணி பிரச்சாரங்களையே தொடர்ந்து மேற்கொண்டனர்.

சூர்யவம்சத்தில் தேவயானியைக் கலெக்டர் ஆக்கியதுபோல் என்னை என் கணவர் சரத்குமார் எம்.பி.யாக்குவார் என்றார் ராதிகா. நடிகர், நடிகை என்பதால் இவ்விருவரையும் வேடிக்கை பார்ப்பதற்காகக் கூட்டம் கூடியதே தவிர, ஆதரிப்பதற்காக அல்ல. வெற்றிபெற்று எம்.பி.யானால் விருதுநகரில் ராதிகா தங்குவாரா?  வழக்கம்போல் ஷூட்டிங்கிற்காக சென்னை போய்விடுவாரா? என்ற கேள்வி எழுந்தபோது,  “நான் வெற்றிபெற்றால் எங்கும் போகமாட்டேன். என் வீடு விருதுநகரில் இருக்கிறது. இங்குதான் இருப்பேன்.” என்றார் ராதிகா.

இதைக்கேட்ட விருதுநகர் வாக்காளர்கள், நமக்குத் தெரியாமல் ராதிகாவுக்கு விருதுநகரில் வீடு இருக்கிறதா? என்று  மண்டை காய்ந்தனர். பிறகுதான் தெரிந்தது, சரத்குமாரின் நண்பர் வீட்டை, தன் வீடு என்று ராதிகா கதைகட்டியது. இத்தகைய பொய்ப் பிரச்சாரம் வாக்காளர்களிடம் எப்படி எடுபடும்?“ அண்ணே, அண்ணியைக் கூட்டிக்கிட்டு கோயில் கோயிலா போங்க. ஒர்க்-அவுட் ஆகும்.” என்று உள்ளூர் பாஜகவினர் வழிகாட்ட, ஆன்மிக அரசியலைக் கையில் எடுத்தார் சரத்குமார். விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கெல்லாம் சென்று சாமி கும்பிட்டார். திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கப்பலூரில்  பிரச்சாரம் செய்தபோது மடிப்பிச்சையும் எடுத்தார் ராதிகா.  

Election atrocities in Virudhunagar constituency

சிவகாசியில் நம்பர் பிளேட் இல்லாத புல்லட்டில்  ராதிகாவைப் பின்னால்  அமரவைத்து, ஹெல்மெட் அணியாமல்தானே ஓட்டிச்சென்று பரபரப்பைக் கிளப்பினார் சரத்குமார். இவ்வாறாகப் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இருவரும் சென்னை சென்றுவிட்ட நிலையில், எக்ஸிட்-போல் முடிவுகள்  தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை அறிந்தனர். மனைவி ராதிகாவின் எம்.பி. கனவு, தன்னுடைய பா.ஜ.க. மாநிலத்தலைவர் கனவெல்லாம் சீட்டுக்கட்டுகளாக சரிந்தபோது, அதிர்ந்து போனார் சரத்குமார். அந்த நேரத்தில்தான், மோடியின் கன்னியாகுமரி தியானம் சரத்குமாரின் மனக்கண்ணில் மின்னியது. மீண்டும் ஆன்மிகக் குளத்தில் குதித்து மூழ்க முடிவெடுத்தார்.

Election atrocities in Virudhunagar constituency

வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், சட்டையைக் கழற்றிவிட்டு, விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவிலில் உருண்டு புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்தார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலும் சாமி கும்பிட்டனர். சரத்குமாரிடம் மீடியாக்கள் கேள்வி கேட்டன. இது “மனைவி ராதிகாவின் வெற்றிக்காக அல்ல. பிரதமர் மோடியின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தேன்.” என்று சமாளித்தார்.   

ஒர்க்-அவுட் ஆகாத சென்டிமென்ட்!

ஆரம்பத்தில் பா.ஜ.க.வா? அதிமுகவா? என்ற தேர்தல் கணக்குடன் இரண்டு இடத்திலும் கூட்டணிக்கு துண்டுபோட்டது தேமுதிக. பிறகுதான், திரைமறைவுப் பேரம் நடத்தி அதிமுகவுடன் கூட்டணி கண்டது. கேப்டனின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை பக்கமுள்ள ராமானுஜபுரம் எனச் சொல்லி,  விருதுநகர் தொகுதியைக் கேட்டுப்பெற்றார் பிரேமலதா விஜயகாந்த். விஜயபிரபாகரனும் தனது பிரச்சாரத்தில் “அப்பா கேப்டன் விஜயகாந்த் இறந்து100 நாட்கள்தான் ஆகிறது..” என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லி பரிதவிப்பை வெளிப்படுத்தினார்.

விஜயபிரபாகரனின் தம்பி சண்முகப்பாண்டியனும் “எங்க அப்பாவுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்கன்னா என்னுடைய அண்ணன் விஜயபிரபாகரனுக்கு வாக்களியுங்கள்.” என்று கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்தும் தன் பங்குக்கு  “உங்களுக்காக எங்களை கேப்டன் விட்டுச் சென்றுள்ளார்.” என்று கண்ணைக் கசக்கினார். “வெற்றி பெற்றால் விஜயபிரபாகரனுக்கு விருதுநகரில் திருமணம் நடக்கும்.” என்று உத்தரவாதம் அளித்தார்.

Election atrocities in Virudhunagar constituency

ஒவ்வொரு அரசியல் கட்சியையும், ஒவ்வொரு அரசியல் தலைவரையும் வாக்காளர்கள் அறிந்தே வைத்துள்ளனர். பிரச்சாரப் பாசாங்குகள் அவர்கள் அறியாததல்ல. விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனுக்கு இரண்டாவது இடத்தையும், ராதிகா சரத்குமாருக்கு மூன்றாவது இடத்தையும் தந்துள்ளனர்.

இந்நிலையில், விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, 13-வது சுற்றிலிருந்தே முறைகேடு நடந்துள்ளதாகவும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டுமென்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் வரையிலும் புகார் அளித்திருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அப்போதே சீப் ஏஜென்ட் ஓபிஎஸ்தான்' - எடப்பாடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
'That's when the cheap agent became an ops' - Interesting information shared by Edappadi

'ஓபிஎஸ் எந்தக் காலத்திலும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை' என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை''என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-இல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி  என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.

இறுதியாக செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு எழ முயன்றபோது எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், 'ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''அவரை எப்படி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியும். அவர்தான் அதிமுகவுக்கு எதிராக, இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டுள்ளார். ஒரு தொண்டன் கூட அவரை மதிக்க மாட்டான். ஒவ்வொரு தொண்டனும் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் எனச் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவர் போய் பலாப்பழத்தை வைத்து பூஜை செய்கிறார். ஏற்கெனவே ஒருமுறை இதே தவறை செய்தார். அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்து வாக்கெடுப்பு நடந்த பொழுது, எதிர்த்து ஓட்டு போட்டார்.

ஓபிஎஸ் கட்சிக்கு விசுவாசமாக எப்பொழுதுமே இருந்ததில்லை. சுயநலமாகத்தான் செயல்படுவார். 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தன்னந்தனியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது நானும் நின்றேன். அப்பொழுது வெண்ணிற ஆடை நிர்மலா, ஜானகி அணி சார்பாக போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு சீப் ஏஜென்டாக இருந்தவர் இதே ஓபிஎஸ். அப்பொழுதே ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்தவர் ஓபிஎஸ். எப்பொழுதும் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. சுயநலம்தான் அவரிடம் உண்டு. இப்பொழுது கூட சுயநலத்தில்தானே அங்கே போய் போட்டியிட்டார். ஜெயிச்சா மத்திய மந்திரி ஆகலாம் என்று, ஆனால் நாட்டு மக்கள் சரியான தண்டனையைக் கொடுத்துள்ளார்கள். பலாப்பழத்தை வைத்து பூஜை போடுபவரை எப்படி தொண்டன் ஏற்றுக் கொள்வான். இந்தக் கட்சிக்கு எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் வரும்'' என்றார்.

Next Story

'கேப்டன் நேரில் வருகை' - வெளியான வீடியோவால் தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சி

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனமான விஜயகாந்த் மறைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியினர் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தினமும் அவருடைய  நினைவிடத்தில் மலர் தூவி பூஜை செய்து வருகின்றனர். அதேபோல் தினமும் அங்கு வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று (18/06/2024) செவ்வாய்க்கிழமை திடீரென தேமுதிக அலுவலகத்தில் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை உடனடியாக கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு கட்சியின் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் பாம்பு ரூபத்தில் வந்திருப்பதாகத் தெரிவித்ததோடு அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர் தேமுதிக தொண்டர்கள்.

பின்னர் சிறிது நேரம் அலுவலக வளாகத்திலேயே ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு பின்னர் அங்கிருந்து வெளியே தப்பி சென்றது. இந்த வீடியோவை தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தொடங்கி வைத்த 'கேப்டன் நியூஸ்' இணையதளபக்கத்தில் வெளியிடப்படுள்ளது. அதில் 'இன்று தலைமை  கழகத்திற்கு கேப்டன் நேரில் வருகை' எனக் கேப்சன் கொடுக்கப்பட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில், 'செவ்வாய்க்கிழமை தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கேப்டன் எந்த வழியாக அலுவலகத்திற்கு வருவாரோ அதே வழியில் நாகம் வந்து, அவர் அமர்ந்திருந்த அறைக்கு சென்று, அங்கிருந்து வெளியேறியது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேமுதிக தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.