தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
தற்போது நடைபெறுவது சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் அல்ல. அது வெறுப்பு கூட்டமாக மாறிவிட்டது. இந்தக் கூட்டத்தில் சந்திரயான் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, இதுவரை இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே சக எம்.பி மீது பயன்படுத்தாத வார்த்தையை பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் எம்.பி.டானிஷ் அலி மீது பிரயோகித்துள்ளார். இதற்கு, அருகில் இருந்த பாஜக எம்.பிக்களும் கை தட்டி மகிழ்கின்றனர். இதன் பின்னர், சபாநாயகர் இந்த சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டு வருத்தம் தெரிவிக்கிறார். தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ரமேஷ் சார்பாக மன்னிப்பு கேட்டு நாடகமாடுகிறார்கள். இந்த விவகாரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இருந்தும், டானிஷ் அலி கூறுகையில், ‘கூட்டத்திற்கு அழைத்து வந்து என்னை என் சமூகத்துடன் சேர்த்து கேவலப்படுத்துவதை உலகம் பார்க்கத் தான் அழைத்தீர்களா’ என்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி20க்கு பின்னர் ‘இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை மோசமாகவுள்ளது’ எனவும் கூறினார். மேலும், மணிப்பூர் முதலான விவகாரங்களையும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கையில், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி எம்.பி. பேசியதும் தெரிய வந்துள்ளது.
இது ஒவ்வொரு முறையும் மோடி அண்ட் கோ செய்யும் நாடகம் தான். ஏனென்றால், பா.ஜ.க. எம்.பி. பேசியதற்கு அவரை உடனே சஸ்பெண்ட் செய்து விடாமல் விளக்கம் கேட்பதால் சொல்கிறேன். அதுமட்டுமின்றி, இந்திய நாடு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து உலகம் முழுதும் இருக்கிறது. இந்நிலையில், மோடி அவர்கள் அந்த சம்பவத்தை கண்டித்திருந்தால் கூட உலக நாடுகள் தனது சிந்தனையை சற்று மாற்றியிருக்கும். ஏற்கனவே, அதானியும் மோடியும் உள்ள படத்தை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் காண்பித்து விமர்சித்தார். அதற்குத் தான், மோடி, நேரு குடும்பம் குறித்து பேசினார். எனவே, அவரின் ஆளாகத்தான் ரமேஷ் இன்று பேசியுள்ளார். இப்படிப்பட்ட பாஜக கட்சி வருகிற தேர்தலுடன் முடிந்துவிட்டால், இந்தியாவிற்கு நல்லது. இதனை நான் முன்பே சொல்லியிருந்தேன். ஒருவேளை, மீண்டும் பா.ஜ.க. வருமேயானால், நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைக்கு வேலை இருக்காது. மாறாக அது சந்தைக் கடையாக மாறும்.
காவிக் கும்பல் தான் உ.பி. சாமியார் போன்றவர்கள் தைரியமாக பேசுவதற்கு காரணம். சனாதனத்தின் பொருள் புரிந்ததால் நாங்கள் அதனை ஏற்கவில்லை. ஆனால், நீங்கள் அதனை விரும்புகிறீர்கள். மேலும், சனாதனம் என்பது எங்களை தொடக்கூடாது, சில இடங்களில் நடமாடக் கூடாது, படிக்கக் கூடாது, நாங்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும் குலத் தொழில் செய்ய வேண்டும் போன்ற கொடூரமான கருத்துகளை கொண்டிருப்பது தான். எனவே, இதனை ஆதரித்து எவராவது பேசுவார்களா. இதன் காரணமாக, சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி அவர்கள் வள்ளலார், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் கருத்தாக பேசியுள்ளார். அதுபோன்று வன்முறையாக பேசிய சாமியார்கள் வெளியே நடமாடிக் கொண்டிருக்கையில் அண்ணாமலை போன்றோர் பதிலளிக்கவில்லையே. இதற்கெல்லாம் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.
1967க்குப் பிறகு கலைஞர் 48 அணைகள் வரை கட்டி தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்தவர். ஆகவே அண்ணாமலை, குஜராத் போன்ற மாநிலங்களில் கழிவுநீர் தொட்டி போன்ற ஒன்றில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்கிறார்கள். மேலும், அங்குள்ள இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி படிக்க விடாமல் செய்து, இந்தியா முழுக்க வேலை செய்ய அலைகிறார்கள். ஏன், குஜாரத், உ.பி.யில் இன்றும் சாலை வசதி, 100% மின்சார வசதி கூட இல்லை. ஆனால், இவர்கள் தி.மு.க.வை கேள்வி கேட்கின்றனர். அண்ணாமலை போன்ற ஆட்களை வைத்துக் கொண்ட பாஜக உருப்படப் போவதில்லை. பாஜக தான் இவர்களுக்கு பணம் கொடுத்து இவ்வாறு பேச வைக்கிறது.
அண்ணா அவர்களின் பெயரைக் கூட உச்சரிக்கும் தகுதி இல்லாத கட்சி தான் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். கூட்டமும். இவர்கள் தினசரி, பெரியார், அண்ணா, கலைஞர், போன்றோரை இழிவுபடுத்திக்கொண்டு தான் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அண்ணா விவகாரத்தில் டெல்லிக்கு சென்று அமித்ஷா வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர். ஆனால், அவரோ நட்டாவை சந்திக்க அனுப்பி வைக்கிறார். எனவே, இவர்கள் தி.மு.க.வை பற்றி பேச எந்தத் தகுதியும் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் பாஜக குறித்து கூறுகையில், ‘வகுப்புவாதம், ஊழல் முறைகேடுகள், மூலதனக் குவியல், மோசடி, அவதூறுகள்’ என கடுமையாக குறிப்பிட்டார். இந்த ஐந்து முறையில் தான் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இது மாதிரி அதிமுகவை சேர்ந்தோர் பாஜகவிற்கு பதிலளிக்காமல் காலில் விழுந்து கிடக்கிறார்கள். அண்ணாமலை ஒருமுறை ஜெயலலிதாவை ஊழல் முதலமைச்சர் என விமர்சித்தார். அதன் பின்னும் செல்லூர் ராஜு அண்ணாமலையிடம் பேசி வந்தார். இதனால், இவர்கள் பேசுவதை பெரிய அரசியல் கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. தெருவில் நின்று கத்துபவர்கள் தான் இவர்கள்.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...