தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
மக்களால் போற்றப்படும் மாபெரும் தலைவர்களை எல்லாம் வரலாறுகளை படிக்காமல் இழிவாக அண்ணாமலை பேசி வருகிறார். ஆனால், அண்ணாமலை சார்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் இந்து மத நம்பிக்கையுள்ள காந்தியை சுட்டுக் கொன்றது. இதனை வரலாற்றில் இருந்து படித்து நாங்கள் பேசுகிறோம். இருந்தும் அண்ணாமலை வேண்டுமென்றே அண்ணாதுரை அவர்களை இப்படி விமர்சித்துள்ளார். ஏன், இதற்கு தேவர் அமைப்புகளும் கூட எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால், 1956ல் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தை பி.டி.ஆர் அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார். கூட்டத்தை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து நடத்த வேண்டாம் என முத்துராமலிங்கம் அறிவுறுத்தியுள்ளார். கோவில் இடம் என்பதால் பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கவே இப்படி அவர் சொல்லியுள்ளார். பின்னர், அடுத்த நாள் கூட்டம் தமுக்கம் மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்றது. எனவே அண்ணாமலை, முத்துராமலிங்கம் ‘ரத்த அபிஷேகம் செய்ய சொன்னார்’ என பரப்பி அவரையும் அவமானப்படுத்துகிறார். ஆனால், அண்ணாமலைக்கும் சேர்த்து போராடியவர் தான் அண்ணாதுரை. இதற்கு திமுக தரப்பில் இருந்தும் பதிலடி கொடுத்து பின்னர் நிறுத்திவிட்டோம். மறுபுறம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ‘அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டிருந்தால் உன் நாக்கு அழிந்து விடும்’ என பதிலளித்துள்ளார். எனவே, நாக்பூர் கூட்டத்தின் உத்தரவில் தான் அண்ணாமலை இவ்வாறு செயல்படுகிறார். இதற்கு அமித்ஷாவும், மோடியும் கூட காரணமாக இருக்கலாம். இதனால்தான் அண்ணாமலை தமிழகத்தில் பிரச்சனையை கிளப்பி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். இதனால் திமுக அவரை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறது.
ஜி20 கூட்டம் என்பது சுழற்சி முறையில் நடைபெறுவது தான். ஆனால், பிரதமர் மோடி தன்னை உலகத் தலைவர் போல சித்தரித்துக் கொள்கிறார். இவர்கள் செய்தது அங்கு அருகில் இருந்த பகுதிகளை துணியை வைத்து அடைத்தது தான். சமீபத்தில் கூட கனடா சொல்கிறது, இந்திய தூதரகம் இங்கே இருக்கக் கூடாது என்று. மேலும், இந்தியா-கனடா இடையேயான ஒப்பந்தமும் முறிந்துவிட்டது எனவும் அறிவிக்கின்றனர். இதேபோல, நியூயார்க் டைம்ஸ், ‘மோடி நடத்திய ஜி20 கூட்டம் அவரின் சுய விளம்பரம். இது தேர்தலுக்கு செய்த பிரசாரம் போல தான் இருந்தது’ என்றும் விமர்சித்து செய்தி வெளியிட்டது. இப்படி உலகில் பல ஊடகங்கள் ஜி20யை விமர்சிக்கிறது. ஆனால், மோடி உறசாகமாக புதிய நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்கிறார். இதற்கு நமது எம்.பி. திருச்சி சிவா அவர்களும் நாடாளுமன்றத்தில் தக்க விமர்சனம் அளித்திருந்தார். தொடர்ந்து, தற்போது வழங்கியுள்ள 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு கூட திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றிதான். சனாதனத்திற்கு எதிராக இருந்தாலும் தேர்தலுக்காக அவர்கள் இதனை செய்துள்ளனர். இதுமட்டுமின்றி மறைமுகமாக, தேர்தல் ஆணையத்தை தேர்வு செய்வதில், உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்கியுள்ளனர். பின்னர், அந்த இடத்திற்கு ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரரை அமர்த்தி தங்களுக்கு வேண்டியதை அவர்கள் செய்வர். மேலும், தேர்தல் ஆணையத்தையும் அவர்கள் குறி வைத்துள்ளார்கள் என்றும் தெரிகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்தும் அவர்கள் எந்தவித முன் குறிப்புகளும் வழங்கவில்லை. எனவே, இந்த புதிய நாடாளுமன்றத்தில் நடக்கும் முதல் கூட்டம் ஆரோக்கியமாக எனக்கு தெரியவில்லை. இதற்கு காரணம் மோடியின் அரசு தான். இவ்வளவு பேசும் அண்ணாமலை ஐ.பி.எஸ். ஆனதே அன்று பெரியார், அம்பேத்கர் சேர்ந்து வலியுறுத்திய 1951 சட்டத் திருத்தம் தான் காரணம். அதைவிடுத்து இன்று சனாதனம் தான் உயிர் என அண்ணாமலை பேசுகிறார். இதற்கெல்லாம் சேர்த்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு முடிவு எட்டப்படும்.
எடப்பாடி அவர்கள் முதல்வராக இருப்பதற்கு தகுதியில்லாதவர். அவர் பிறர் காலில் விழுந்து தானே பதவிக்கு வந்தார். மேலும், அவரின் ஆட்சியில் தான் தொடர்ந்து ஊழல் நடைபெற்றது. மாறாக, திமுக அனைவருக்கும் நன்மை செய்ய இயங்குகிறது. இதன் தொடக்கம் தான் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம், தற்போது அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்பதெல்லாம்.
அனைத்து பெண்களுக்கும் ஏன் தரவில்லை எனக் கூறி கோடீஸ்வர, வருமானவரி கட்டும், அரசு வேலை செய்யும் பெண்களுக்கு ஆதரவாக சிலர் வாதிடுகிறார்கள். மாறாக சில பெண்களே முன்வந்து முதலமைச்சரை பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. சீமான் போன்றோர் முனிசிபாலிட்டிக்கு கூட செல்லாமல் எதனையாவது பேச வேண்டியது. இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் நாடுதான் தமிழ்நாடு. அது ஒன்றும் தனி நாடு அல்ல. மேலும், தமிழ்நாடு கல்வி, மருத்துவம் போன்றவற்றில் முதன்மை வகிக்கிறது. எனவே, இதனையெல்லாம் அறிந்து கொள்ளாமல் சீமான் போன்றோர் பேசுகிறார்கள்.
நம் முதல்வரின் செயல்பாடு குறித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆர்வமுடன் விசாரிக்கிறார்கள். ஆனால், சீமான் சொல்ல வருவது, கஷ்டப்படுகிற பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் உதவி செய்யக்கூடாது என்பது போலத்தான் இருக்கிறது. இதுவே சீமானின் மறைமுக நோக்கமாக இருந்து வருகிறது. இவரின் நோக்கத்தை புரிந்துகொண்டால் அவரின் நிலை குறித்து அறியலாம்.