நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசிய பேச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள.புகழேந்தி எடுத்து வைக்கிறார்
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையைப் பிடித்து திமுகவினர் இழுத்ததாக பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அவருக்கு எந்த வரலாறும் தெரியவில்லை. அப்போது நான் சட்டமன்றத்தில் இருந்தேன். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அன்று அதிமுகவினர் சபைக்கு வந்தனர். பட்ஜெட் உரையைப் படிப்பதற்கு அன்றைய முதல்வர் கலைஞர் தயாராக இருந்தார். அப்போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆர்எஸ்எஸ் மனநிலை கொண்ட துக்ளக் சோ.ராமசாமியின் வழிகாட்டுதல்படி ஜெயலலிதா செயல்பட்டார்.
நடப்பது நடக்கட்டும் என்று கலைஞர் அப்போது அமைதியாக இருந்தார். அப்போது ஜெயலலிதா தன்னுடைய முடியைத் தானே கலைத்துக்கொண்டார். தன்னுடைய சேலையைத் தானே இழுத்துக்கொண்டு அலங்கோலமாக தன்னை மாற்றிக்கொண்டார். திமுகவைச் சார்ந்த யாரும் அவர் அருகில் கூட செல்லவில்லை. நடக்காத ஒன்றை நடந்தது போல் இந்தியா முழுவதும் பரப்பி திமுக மீது அவதூறு செய்து வருகின்றனர். இழிவான ஒரு நாடகத்தை அன்று நடத்தியவர் ஜெயலலிதா. வெளியே சென்று பத்திரிக்கையாளர்களிடம் தான் அவமானப்படுத்தப்பட்டதாக பேட்டி கொடுத்தார்.
நிர்மலா சீதாராமன் விவரம் தெரியாமல் பொய் பேசிக்கொண்டு திரியக்கூடாது. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் பாஜகவினர் இழுத்து வருகின்றனர். அது பற்றி நிர்மலா சீதாராமனால் பேச முடியவில்லை. ஒரு நிதியமைச்சராக இருக்கும் அவர், மதிகெட்டு அலையக்கூடாது. உண்மையைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்குகிறார். அவரை இவர்களால் பிடிக்க முடியவில்லை. கைலாசாவுக்கு அதிகம் சென்று வருவது பாஜகவினர் தான்.
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி குறித்து நிர்மலா சீதாராமனின் கணவர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். அனைத்தையும் மிகச்சரியாக செய்து வரும் ராகுல் காந்தி குறித்து ஏதாவது அவதூறு பரப்ப வேண்டும் என்று பாஜகவினர் காத்திருந்தனர். சென்று வருகிறேன் என்பதைத் தான் சைகையில் ராகுல் காந்தி சொன்னார். பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் தான் அதை அவர் தெரிவித்தார். அதை இவர்கள் பெண்களுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததாக இழிவாக மடைமாற்றினர். வெட்கமாக இல்லையா? அவர் மீது புகார் கொடுத்த பாஜக எம்.பிக்களில் பாதி பேர் இது வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
குஜராத் நீதிமன்றங்களிலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. நீதித்துறையை ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். அதை நினைவுபடுத்தும் விதமாகவே ஆ.ராசா பாராளுமன்றத்தில் இதுபற்றி பேசினார். "நீங்கள் பேசினால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்" என்று மத்திய அமைச்சராக இருக்கும் மீனாட்சி லேகி என்பவர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை மிரட்டினார். அமலாக்கத்துறையை இவர்களுடைய வேலைக்காரர்கள் போல் பயன்படுத்துகிறார்கள். பாசிச வெறிபிடித்த இவர்களின் செயல்பாடுகளை ஆ.ராசா தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.