Skip to main content

மணிப்பூர் கலவரம்; பாராளுமன்றத்தில் வாய் திறப்பாரா பிரதமர்? - இள. புகழேந்தி

Published on 28/07/2023 | Edited on 28/07/2023

 

Ela Pugazhendi Interview

 

மணிப்பூர் விவகாரம் மற்றும் தற்கால அரசியல் குறித்துப் பல்வேறு கருத்துக்களை திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி பகிர்ந்துகொள்கிறார் 

 

மணிப்பூரில் பல்வேறு கொடுமைகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. அங்கு மாநில அரசும் பாஜக தான். மத்தியில் இருப்பதும் பாஜக அரசு தான். இரட்டை எஞ்சின் ஆட்சி நடந்தால் நாடு நன்றாக இருக்கும் என்று மோடி அடிக்கடி சொல்வார். அதன் லட்சணத்தை இப்போது நாம் பார்த்து வருகிறோம். என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வீடியோ வந்தவுடன் உச்சநீதிமன்றமே மாநில அரசையும், ஒன்றிய அரசையும் கேள்வி கேட்டிருக்கிறது. இந்தக் கலவரங்கள் மே மாதமே தொடங்கிவிட்டன.

 

கலவரத்தை இவ்வளவு நாட்கள் நடக்க விட்டு போலீஸ் என்ன செய்தது? இதற்குள் பெரிய மர்மம் இருக்கிறது. மணிப்பூர் என்பது அமைதியாக இருந்த ஒரு மாநிலம். திடீரென்று நுழைந்த ஒரு கும்பல் மிகப்பெரிய வன்முறையில் ஈடுபட்டது என்று அங்கிருந்த பெண்கள் பேட்டி கொடுக்கின்றனர். அந்த கும்பலுக்கு ஆதரவாக போலீசும் இருந்தது என்று அவர்கள் கூறுகின்றனர். பாஜக எவ்வளவு ஆபத்தான கட்சி என்பதை இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மதத்தை வைத்து இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.

 

இவ்வளவு பெரிய வன்முறை குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டாமா? இது மன்னிக்க முடியாத குற்றம் என்று பிரதமர் பேட்டி கொடுக்கிறார். மன்னிக்க முடியாத குற்றத்தை செய்ய வைத்தவன் எவன்? எந்தக் காலத்திலும் எந்த அரசாங்கமும் மக்களை மோதவிட்டு இவ்வாறு வேடிக்கை பார்த்ததில்லை. இவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியதால்தான் இத்தனை நாட்கள் கலவரம் நீடிக்கிறது. பாஜகவின் ஆதரவுதான் ஜெயக்குமார் போன்ற அதிமுகவினரை இவ்வளவு கொழுப்புடன் பேச வைக்கிறது. யார் மீது வழக்கு வந்தாலும் சட்டப்படி சந்திப்போம் என்று எங்கள் தலைவர் சொல்லிவிட்டார்.

 

பொருளாதார சீரழிவு, மத ரீதியான பேரழிவு என அனைத்து வகைகளிலும் பாஜக அரசால் இந்தியா பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது. பாஜகவின் துணைத் தலைவர் ஒருவர் அமலாக்கத்துறையின் பெயரைச் சொல்லி மிரட்டி பெண் அதிகாரிகளை தன்னுடைய இச்சைக்குப் பயன்படுத்தியதாக செய்தி வெளிவந்திருக்கிறது. அவனுடைய ஆபாச வீடியோக்களும் வெளிவந்திருக்கின்றன. அமலாக்கத்துறை எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது இதன் மூலமாகவே தெரிகிறது. அனைத்து சுதந்திர அமைப்புகளும் இன்று பாஜகவின் கிளை அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.