Skip to main content

நேரக் கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களாமே... மோடியிடம் இருந்து எடப்பாடிக்கு வந்த உத்தரவு... கோபத்தில் எடப்பாடி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

விழித்திரு ; விலகியிரு ; வீட்டிலேயே இரு என்று மக்களுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த 25ந் தேதி சென்னையிலுள்ள தனது இல்லத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் பிரபாகர், சுகாதார செயலாளர் பீலாராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அரசின் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடியிடம் ஒரு கோப்பு இருந்தது. சமீபத்தில் மத்திய அரசின் குடியேற்றத்துறையிலிருந்து அனுப்பப்பட்டிருந்த. அந்த கோப்பில், தமிழகத்தில் 86,644 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் இருந்தது. அவர்கள் எந்தெந்த வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்திருந்தனர் என்கிற தகவலும் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்தப் பட்டியலில் இருப்பவர்களின் நிலை என்ன ? என்பது குறித்து எடப்பாடி கேட்டார்.

 

admk



வெளி நாடுகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களில் 16 ஆயிரம் பேர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 962 பேரின் ரத்தப் பரிசோதனையில் 933 பேருக்கு தொற்று இல்லை என ரிசல்ட் வந்திருக்கிறது. 29 பேருக்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்து சிகிச்சை தருகிறோம். பட்டியலில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷும் விளக்கமளித்திருக்கிறார்கள்.

கேரளாவிலுள்ள தமிழர்களை கேரளாவை விட்டு வெளியேற்றுமாறு கேரள முதல்வர் பிணராயிவிஜயன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது பற்றியும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எடுத்துக்கூறி, மாநில எல்லையிலேயே தமிழர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைத் தெரிவித்திருக்கிறார்.

144 தடை உத்தரவு குறித்து டிஜிபி திரிபாதியிடம் எடப்பாடி விசாரித்தபோது, மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அலட்சியம் இன்னும் இருக்கிறது. என டி.ஜி.பி சொல்ல, தயவு தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கச் சொன்ன எடப்பாடி, 144 தடையையும் ஏப்ரல் 14 வரை நீட்டிக்கச் சொன்னார். உள்துறை செயலாளர் பிரபாகர் குறித்துக்கொண்டார்.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியைப் பொது வெளியிலிருந்து திரட்டலாம் எனத் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவிக்க, தொழில்நிறுவனத்தினர், திரைத்துறையினர் உள்ளிட்டவர்களை துணை முதல்வர் ஓபிஎஸ் சுட்டிக்காட்ட, எடப்பாடியும் ஏற்றுக்கொண்டார். பொதுவெளியிலிருந்து 5000 கோடி திரட்ட இலக்கு வைக்கலாம். அதேசமயம், மத்திய அரசிடம் 4000 கோடி நிதி உதவி குறித்து கடிதம் எழுதுமாறு தலைமைச் செயலாளரிடம் தெவித்தார் எடப்பாடி.

 

 

bjp



வீடற்ற தொழிலாளர்கள், சாலையோர தொழிலாளிகளைப் பாதுக்காக்கவும் அவர்கள் மூலம் தொற்று பரவாமல் இருக்கவும் அவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தி மருத்துவ கண்காணிப்பில் இருக்க வைக்க வேண்டும். ஆனால், அவர்களைத் தங்க வைப்பதற்கான இடங்கள் போதுமானதாக இல்லை. அதனால் மாநகராட்சி வசமுள்ள சமூக நலக்கூடங்கள், அரங்கங்கள், கல்யாண மண்டபங்களைக் கொடுத்து உதவ வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்க, அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு அமைச்சர் வேலு மணியை கேட்டுக்கொண்டார் எடப்பாடி. நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்தல் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் வீடியோ கான்ஃப்ரன்சில் விவாதித்த போது, சில கலெக்டர்களிடம் கோபமும் காட்டியிருக்கிறார் எடப்பாடி. இனி ஒரு உயிர் கூட கொரோனாவால் பறிப்போகக் கூடாது எனச் சொன்னவர், புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஷ்வரியிடம், அத்யாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான நேர கட்டுப்பாட்டை விதித்துள்ளீர்களாமே.. அப்படியெல்லாம் கூடாது எனக் கண்டித்தார்.

டெல்லியிலிருந்து கொடுக்கப்படும் உத்தரவுகளுக்கேற்ப எடப்பாடி அரசின் நடவடிக்கைகளைக் கவனித்து வருகிறார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித். ராஜ்பவனுக்கு வரும் தகவல்கள் அப்படியே கோட்டைக்கு பாஸ் செய்யப்படுகின்றன. அந்தத் தகவல்கள் மீது உரிய கவனம் செலுத்த தனது செயலாளர்களுக்குப் பிரத்யேகமான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கிடையே, கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. இது குறித்து டெல்லி பத்திரிகையாளர்களிடம் விசாரித்தபோது, ''இந்தியா முடக்கப்பட்டதில் தினசரி 40 ஆயிரம் கோடி இழப்பை நாடு சந்தித்து வருகிறது என நிதித்துறை அமைச்சர் நிர்மலா கீதாராமன் தெரிவித்ததை ஆமோதித்த மோடி, நாட்டின் பொருளாதாரத்தை விட, மக்களின் உயிர் முக்கியம் அதற்கேற்ப பொருளாதார இழப்பைச் சமாளிக்க வேண்டும் எனத் தெளிவுப்படுத்தியிருக்கிறார். இதன்பிறகே 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி சிறப்புத் தொகுப்பை நிர்மலா அறிவித்தார்.

இந்தியா முடக்கப் பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஒன்று கூடுதல் நடந்து கொண்டுதானிருக்கிறது என உளவுத்துறை கொடுத்துள்ள அறிக்கை மீது மோடி விவாதித்துள்ளார். மாநில அரசுகளின் காவல்துறையினர் மீது மக்களுக்கு அலட்சியம் இருக்கிறது.. அதனால் காவல் துறையினருக்கு உதவியாக ராணுவத்தைக் களமிறக்கலாம் எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சொல்ல, நல்ல யோசனைதான். ஆனா, வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். பொறுத்திருந்து முடிவெடுக்கலாம். அதற்கு மாறாக மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு ஸ்ட்ரிக்டான உத்தரவுகளைப் போடலாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்ல, அதனை மோடி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.


ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் ராணுவத்தின் கண்காணிப்பிலேயே இருக்கட்டும் எனவும் முடிவு செய்திருக்கிறார்கள். 21 நாட்கள் கெடு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தனிடம் பிரதமர் சில கேள்விகள் கேட்க, மக்களின் ஒத்துழைப்பு போதுமான அளவில் கிடைக்கவில்லை. பாதிக்கப் படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கின்றன. 21 நாட்களுடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வந்துவிடுமா என்பது தெரியவில்லை. மக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியப்படும். தேவைப்பட்டால் 21 நாட்கள் என்பதை நீட்டிக்க வேண்டியதிருக்கும் என அவர் சொல்ல பிரதமர் உள்பட பலரும் அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள். இதனையடுத்து, ஒவ்வொரு மாநிலத்தையும் ஒரு மத்திய அமைச்சரின் கண்காணிப்பில் கொண்டு வருவதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்பட்டன"' என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

கொரோனா பரபரப்பிற்கிடையிலும் எடப்பாடி, தமிழக அமைச்சர்களின் நடவடிக் கைகள் மீதும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, ஓபிஎஸ் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களிடம், சமீபத்தில் மா.செ.பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கேபினெட்டிலிருந்து எடுக்கவும், புதிதாக இருவரை சேர்க்கவும் ஆலோசித்துள்ளார். அப்போது, பிரதமர் விதித்துள்ள 21 நாள் கெடு ஏப்ரல் 14-ந்தேதியோடு முடிந்து போகுமா? அல்லது நீட்டிக்கப்படுமா? எனத் தெரியவில்லை. அது தெரிந்தபிறகு கேபினெட் மாற்றம் குறித்து முடிவு எடுக்கலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள் கீனியர்கள். இந்த நிலையில், டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட உத்தரவுகளுக்கேற்ப ஒவ்வொரு பணிகளையும் கவனிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களை அமைத் துள்ளார் எடப்பாடி.

அதன்படி செந்தில்குமார், அதுல்யமிஸ்ரா, பங்கஜ்குமார் பன்ஜால், சந்தோஷ் கே மிஸ்ரா உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இந்திய அரசுடன் இணைந்த மாநில அளவிலான ஒருங்கிணைப்பை கவனிக்கவும் ; முருகானந்தம், அருண் ராய், அனுஜார்ஜ், அணீஷ் சேகர் ஆகிய ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாநிலத்தில் அத்யாவசிய பொருட்களுக்கான உற்பத்தியைக் கண்காணிக்கவும் ; தயானந்த கட்டாரியா, ககந்தீப்சிங்பேடி, சந்திரமோகன் ஆகிய ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுடன் தாமரைக்கண்ணன் ஐ.பி.எஸ்.அதிகாரியும் இணைந்து மாவட்ட அளவில் அத்யாவசிய பொருட்கள் சப்ளையாவதை கண்காணிக்கவும் ; குமரகுருபரன், சங்கர், தீபக் ஜேக்கப் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஊடக ஒருங்கிணைப்பிற்காகவும் ; கோபால், நாகராஜன் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தனியார் மருத்துவ மனைகளை ஒருங்கிணைக்கவும் ; பிரபாகர், ஜவஹர், தர்மேந்திரபிரதாப் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் போக்குவரத்துகளை கண்காணிக்காவும் ; உமாநாத், ஜெகனாதன், சாம்சன் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மக்களின் தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட வார்டிகளை கண்காணிக்கவும் ; ஹன்ஸ்ராஜ்வர்மா, ஹர்மேந்தர்சிங், மாணிவாசன் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மருத்துவமனை கட்டமைப்பை ஒருங்கிணைக்கவும் ; கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஷ்ணு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நிவாரணபணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வ குழுக்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள், பாதிக்கப்பட்ட முதியவர்களின் தேவைகளைக் கவனிக்கவும் என 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முடக்கப்பட்ட முதலிரண்டு நாட்களிலேயே மக்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலையில், மிச்ச நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது நாடு என்ற கேள்வி உள்ளது.