Skip to main content

பெண் அர்ச்சகர்கள் ஏன் வரக் கூடாது..? - மனநல மருத்துவர் ஷாலினி கேள்வி!

Published on 21/11/2019 | Edited on 22/11/2019


சிதம்பரம் நடராஜர் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை மனநல மருத்துவர் ஷாலினியிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் லதா என்ற பெண் தன்னுடைய மகனின் பிறந்த நாளை முன்னிட்டு அர்ச்சனை செய்ய சென்றுள்ளார். அங்கு அர்ச்சகர் ஒருவர் அவருடன் வாக்குவாதம் செய்து அவரை அறைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

இந்த சம்பவத்தில் அவருடைய ஆதிக்க தன்மைதான் வெளிப்பட்டுள்ளது. அந்த அம்மா ஒரு நம்பிக்கையின் பெயரில் தன்னுடைய மகனுக்காக அர்ச்சனை செய்ய வந்துள்ளார்கள். அந்த வேலையை செய்யத்தானே இவர் இருக்கிறார். அவர் மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அவரிடம் விவாதம் செய்துள்ளார். அந்த அம்மா அர்ச்சனை செய்தால் தன் மகன் நன்றாக இருப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கோயிலுக்கு சென்றுள்ளார். அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கிறது. நீதிமன்றமே நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும்போது அந்த அம்மாவுக்கு அந்த நம்பிக்கை இருக்கத்தானே செய்யும். அதை நாம் குறை சொல்ல முடியாதே? பெரிய பதவியில் இருப்பவர்களை பொதுமக்கள் கேள்வி கேட்கும்போது கூட, அவர்கள் அதுகுறித்து விளக்கமாக சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் இந்த காலத்தில் நீ என்ன கேள்வி கேட்பது, நான் என்ன உனக்கு பதில் சொல்வது என்பதை போன்று அவருடைய பதில் இருக்கிறது. அதுவும் திமிராக நீ என் செயினை பிடுங்கினாய் என்று சொல்வேன் என்று அவர் கூறுகிறார் என்றால், அவருக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும். தங்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாது என்று நினைப்பது எல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

 

n




சர்ச்சைக்குள்ளான தீட்சகர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரை வேலையில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார்கள். 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள். அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்துள்ளார்கள். இது போதும் என்று நினைக்கிறீர்களா?

இல்லை, நிச்சயமாக இது போதாது. அவர்களுடைய வேலையை செய்ய சொன்னால் அவர்கள் அடிப்பார்கள் என்றால், இதை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது. நம்முடைய கோயில்களில், நம் மன்னர்கள் கட்டிய கோயில்களில், நம் உழைப்பால் உருவான அந்த கோயில்களில் இவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள் என்றால், அதை எப்படி கடந்து போக முடியும். அவ்வளவு எளிதாக இதனை பார்க்க முடியாது. இவர்களுடைய வேலை என்ன, வரும் பக்கதர்களுக்கு அர்ச்சனை செய்வது தானே? அதற்காகத்தானே இவர்கள் பணியில் இருக்கிறார்கள், அதை தவிர இவர்களுக்கு வேறு பணி ஏதாவது இருக்கிறதா? இவர்கள் ஏன் அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள். இப்போது அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் நாம் யாரும் கோயிலுக்கு செல்ல முடியாத நிலையை அவர்கள் உண்டாக்குவார்கள். அவர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவார்கள்.

இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள், வந்தவர்களை இருக்கட்டுமே என்று அனுமதித்தால் நம்மிடமே அவர்கள் வித்தைகளை காட்டினால் நாம் அதை எவ்வாறு அனுமதிப்பது. இதனை ஒரளவு குறைக்க வேண்டும் என்றால் பெண் பூசாரிகளை நியமிக்க வேண்டும். தற்போது சிறு தெய்வ கோயில்களில் மட்டும் இருக்கும் அவர்களை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பணி அமர்த்த வேண்டும். மேல்மருவத்தூரில் இருக்கிறதே என்கிறார்கள், அப்படி என்றால் ஏன் மீனாட்சி அம்மன் கோயிலில் இல்லை, ஏன் காமட்சி அம்மன் கோயிலில் இல்லை, ஏன் விசாலாட்சி அம்மன் கோயிலில் இல்லை, எல்லா கோயில்களிலும் இருக்க வேண்டிய தானே? ஆகம விதிப்படி பெண்கள் பூசாரியாக இருக்க கூடாது என்றால் எங்களுக்கு ஆதாரத்தை காட்டுங்கள். ஆகம விதி எல்லாம் மனிதன் உருவாக்கிது  தானே, அதில் அப்டேட் செய்யுங்கள், அதை மாற்றுங்கள். அதுதான் இந்த மாதிரியான செயல்களுக்கு அடிப்படையாக உள்ளது. 

இந்து மதத்தில் நாம் இத்தகைய மாற்றங்களை கேட்கும்போது, கிருஸ்துவ மதத்தில் பெண்கள் போப் ஆக முடியுமா என்ற கேள்வி எழுகிறதே? 

அதை பற்றியும் நாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். பல இடங்களில் அவர்கள் பிஷப் ஆக இருக்கிறார்கள். முக்கிய பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள். சமணம், பௌத்தம், இந்து மதங்களை தவிர மற்ற மதங்களில் பெண்கள் உயர் பொறுப்புக்களுக்கு வந்துள்ளார்கள். இங்கேதான் இன்னமும் பிற்போக்குதனம் உச்சத்தில் இருக்கிறது. அதையெல்லாம் களைய வேண்டும் என்று நாம் எடுக்கும் முயற்சியை இந்த மாதிரியான ஆட்கள் கெடுக்க முயற்சிக்கிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்பு பெண்கள் மருத்துவர்கள் ஆக முடியாது. 200 வருடங்களுக்கு முன்பு பெண்கள் செவிலியராக கூட ஆக முடியாது. அதே நிலைமையில் பெண்களை வைத்திருக்கலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள். காலம் மாறிவிட்டது, அதனால் மாற வேண்டியது இவர்கள்தான், அவ்வாறு மாறுவது தான் இவர்கள் அனைவருக்கும் நல்லது.