இந்தியா மற்றும் தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ் நம்முடன் சில விசயங்களை பகிர்ந்து கொள்கிறார்
அதிமுகவினர் அவர்களே மாநாடு நடத்திவிட்டு அதை அவர்களே வெற்றி என்று அறிவித்துவிட்டனர். பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்திற்கும் இவர்களுடைய கூட்டத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பொதுக்குழு உறுப்பினர்களைக் கையில் வைத்திருக்கும், நீதிமன்ற தீர்ப்புகளைக் கையில் வைத்திருக்கும், சின்னத்தை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம், இது எதுவுமே இல்லாத பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தை விட எந்த வகையில் பிரமாதமாக இருந்தது? எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன? எத்தனை பேர் பேசினார்கள்?
என்னென்ன கொள்கைகளை அந்த மாநாட்டில் அறிவித்தனர்? தென்மாவட்டத்து மக்கள் எத்தனை பேர் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்? ஒவ்வொருவருக்கும் இவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். இவர்கள் செலவு செய்த அளவுக்கு கூட்டம் வரவில்லை என்பது தான் உண்மை. தொண்டர்களுக்கு எழுச்சி வருவது போல் அந்தக் கூட்டத்தில் எடப்பாடி என்ன பேசினார்? இவர் பேசும் அனைத்தையும் அண்ணாமலையும் தான் பேசி வருகிறார். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு என்ன என்பது குறித்து எடப்பாடி பேசவே இல்லை. நீட் தேர்வு அவருடைய ஆட்சியில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. கச்சத்தீவை 10 ஆண்டுகளாக இவர்கள் ஏன் மீட்கவில்லை?
கச்சத்தீவு எங்கே இருக்கிறது என்பது கூட பழனிசாமிக்கு தெரியாது. அந்த மாநாட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட பட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று தான். இந்த கூட்டத்தால் எடப்பாடிக்கு எந்த லாபமும் இல்லை. நீட் தேர்வைக் கொண்டுவந்த பாஜகவுடன் தான் இவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். திமுகவை இவர்கள் எதிர்ப்பதால் என்ன பயன்? நீட் தேர்வை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? மோடியுடன் இவர் தான் நெருக்கமாக இருக்கிறார். நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று அவரிடம் சொல்ல வேண்டியதுதானே? மத்தியில் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இவர் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்?
இந்த ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? நியமிக்கப்பட்ட ஒருவர் தான் அவர். ஒரு சாதாரண போஸ்ட்மேன் அவர். சட்டமன்றத்தில் இருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மோடி, அமித்ஷாவிடம் இன்று ஜனநாயகம் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. அதைக் காப்பாற்றுபவராக ஜனாதிபதி இருக்க வேண்டும். அவர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் தாக்கப்படும்போது கூட வாய் திறக்கவில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கோவிலுக்குள் இவர்கள் அனுமதிக்கவில்லை. இப்படி ஒரு பதவியில் இருப்பது தேவைதானா?