மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து நமது கேள்விகளுக்கு தன்னுடைய கருத்துகளை பதிவு செய்கிறார்...
ஓபிஎஸ் நடத்திய கூட்டத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். பெரிய கூட்டம் அது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் கூடியிருந்தனர். சசிகலா, தினகரன் ஆகியோர் வராத நிலையில் அந்தக் கூட்டம் முழுவதும் பன்னீர்செல்வத்திற்காகக் கூடிய கூட்டம். பஸ் இல்லாமல், லாரி இல்லாமல் தானாக வந்த கூட்டம். எடப்பாடி பழனிசாமி கேட்ட பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் என்று அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டனர். வழக்கம்போல் அவர் துரோகம் செய்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் இன்னொரு பக்கம் பன்னீர்செல்வத்தை வளர்த்து விடுகின்றனர்.
இருவரையும் தன்னுடைய பிடியில் வைத்திருக்க விரும்புகிறது பாஜக. தலைவரான பிறகு எதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்? அவரைத்தானே அனைவரும் வந்து பார்க்க வேண்டும்? தங்களுடைய தலைவர் அமித்ஷா தான் என்று எடப்பாடி முடிவு செய்திருக்கிறார். உண்மையான பாஸ் அமித்ஷா தான் என்பது நிரூபணமாகியுள்ளது. நாம் அடித்தால் ஓபிஎஸ் திருப்பி அடிப்பார் என்பது திருச்சி கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சின் மூலம் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
அனைத்துமே பாஜகவின் பின்னணியில் தான் நடக்கிறது. அவ்வப்போது ஒரு பரபரப்பான விஷயத்தை அறிவிக்கின்றனர். சசிகலா, தினகரன் ஆகியோரும் ஓபிஎஸ் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தால் அது ஒருநாள் செய்தியாக மாறியிருக்கும். எனவே அவர்கள் ஒவ்வொன்றாகத் தான் செய்வார்கள். ஜூன், ஜூலையில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும். ஆனால், தலைவராக இவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். புதிய தலைமை ஒன்று உருவாகும். எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது ஈரோடு தேர்தலின் மூலம் தெரிந்தது. தொடர்ந்து எட்டு தேர்தல்களில் அவர் தோற்றிருக்கிறார்.