அதிமுகவில் தலைமைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இது தொடர்ந்தால் வெற்றிவாய்ப்பு என்பது இல்லாமல் போய்விடும் என்று அதிமுக மூத்த உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரிய அளவிலான கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மூத்த உறுப்பினர்கள் சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கடுமையாக திட்டியதாகவும் தகவல் வெளியானது. அதே போன்று பாமக தரப்பிலும் ராமதாஸ் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகிகளிடம் காட்டமாக பேசினார். இந்நிலையில் அதிமுக, பாமகவில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு...
"நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற யுத்தம் அதிமுகவில் நடைபெற்று வருகிறது. எனவே இவர்களால் எந்த முடிவு எடுக்க முடியாது. எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் ஒன்றாக இந்த கட்சியை ஒருபோதும் நடத்திச் செல்ல வாய்ப்பில்லை என்றே அந்த கட்சியில் இருப்பவர்கள் தற்போது உறுதியாக நம்புகிறார்கள். எனவே இவர்கள் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானாலும், இல்லை எந்த கூட்டமானாலும் இரண்டு தரப்பாகவே ஆதரவாளர்கள் இருப்பார்கள். எனவே கட்சி ஒற்றுமை பற்றி இவர்கள் சிந்திக்க கூட மாட்டார்கள். நமக்கு என்ன கிடைக்கிறது என்ற எண்ணமே அவர்களுக்கு பிரதானமாக இருக்கும்.
அதிமுகவைப் பொறுத்த வரையில் கட்சி கையைவிட்டுப் போவதை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. வரப் போகின்ற உள்ளாட்சித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல, அதிமுகவுக்கு அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. அதிமுகவின் தலைமை மாற்றம் வரும் வரை அதிமுகவுக்கு வளர்ச்சி என்பதே இல்லை. பாமகவை பொறுத்தவரையில் பெரிய டாக்டர் ஐயா, சின்ன டாக்டர் ஐயா. அவர்கள் இருவரும் கரோனா காரணமாக நீண்ட நாட்களாக வெளியே வராமல் இருந்தனர். அதைப்பற்றி அக்கட்சியை சேர்ந்தவர்கள் கவலைப்பட்டார்களா? தொலைக்காட்சியில் கூட அவர்கள் எந்த விவாதத்திலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தனர். கேமரா வைத்தால் கூட கரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் யாரும் வெளியே வரவே இல்லையே. தலைவா நான் உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லையே என்று எந்த தொண்டனாவது கேட்டானா? யாரும் அதைப்பற்றி பேசவில்லை என்றால் என்ன அர்த்தம். கட்சி அப்பவோ போய் விட்டது. ஊடகங்கள் இருப்பதால்தான் அவர்கள் இருவரும் வெளியே தெரிகிறார்கள்.இல்லை என்றால் அவர்கள் இருப்பதே யாருக்கும் தெரியாமல் போய்விடும்.