தி.மு.க.வில் ரொம்ப காலத்திற்குப் பிறகு, மீண்டும் ஓர் இளைய பட்டாளம் களம் இறங்கியிருக்கிறது. சென்னையில் உள்ள மொத்த தொகுதிகளையும் தி.மு.க. வென்ற நிலையில், அருகருகேயுள்ள மூன்று தொகுதிகளான ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, எழும்பூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாகியிருப்பவர்கள் இளந்தலைமுறையினர்.
ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்புவை எதிர்த்து வெற்றி பெற்ற டாக்டர் எழிலன், கரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் தனது தொகுதியில் களமிறங்கி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். கலைஞர் குடும்பத்தினருக்கு வாக்குரிமை உள்ள தொகுதியின் எம்.எல்.ஏ.வாக முன்னோடியான செயல்பாடுகளை மேற்கொண்ட அவர், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை-எளிய மாணவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் உரிய இடம் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தரும் முகாம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். ஆயிரம்விளக்குத் தொகுதியின் குடிசைப் பகுதிவாசிகளின் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் செயல்பாடு இது என்பதால் மற்ற தொகுதியிலும் இதனைப் பின்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வுக்குள்ளேயே இருக்கிறது.
குடிசைப்பகுதிகள் - குடிசைமாற்றுவாரியக் குடியிருப்புகள் நிறைந்த தொகுதி, எழும்பூர். இங்கிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் வழக்கறிஞர் பரந்தாமன். தொகுதி மக்களின் கோரிக்கைகளை நேரிலும், ஆன்லைன் மூலமும் பெற்று அவற்றை நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ச்சியான ஆலோசனைகளை மேற்கொள்கிறார். மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சேகர்பாபுவின் ஆலோசனைப்படி கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வார்டுதோறும் நேரில் சென்று மேற்கொண்டவர் எம்.எல்.ஏ. பரந்தாமன். தொகுதிக்கான கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கும் எடுத்துச் செல்கிறார்.
கலைஞரின் பேரன், முதல்வரின் மகன் என்ற தகுதியுடன் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி தனது தொகுதியின் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு வருகிறார். தொகுதி போலவே அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமும் குறுகலாகத்தான் இருக்கிறது. ஆனால், அங்கே நாள்தோறும் மனுக்களுடன் திரண்டு வரும் பொதுமக்களை சந்திக்கிறார்.
மீனவர் பகுதிகள், ஆற்றங்கரையோர மக்கள் என குடிசைகளிலும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளிலும் வசிக்கும் ஏழை மக்கள் அதிகமுள்ள தொகுதி இது. அந்தக் குடிசைகளுக்கு நேரில் சென்று மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்த உதயநிதி, அனைவருக்குமான குடியிருப்புகளைக் கட்டித் தரவேண்டுமென்ற கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். சிதிலமைடந்துள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் ஏற்கனவே இருப்பவர்களுக்கும், இன்னமும் குடியிருப்புகள் கிடைக்காதவர்களுக்கும் புதிய குடியிருப்புகளைக் கட்டித்தரும்போது, குறைந்தபட்சம் ஒரு பெட்ரூம் வசதியுடனும் கிச்சன், பாத்ரூம், ஹால் ஆகியவை போதுமான அளவிலும் இருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் உதயநிதி.
கரோனா நேரத்தில், தடுப்பூசி விழிப்புணர்வை வீடுவீடாக சென்று மேற்கொண்ட உதயநிதி, தன்னிடம் கோரிக்கைகள் வைக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட சதவீதத்தை தனது தொகுதிவாசிகளுக்கு இலவசமாக வழங்கவேண்டும் எனக் கேட்டு, அதிகளவில் தடுப்பூசிகள் போடச் செய்தார்.
“கலைஞர் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் முதல்வராகவும் இருந்திருக்கிறார். அப்போதுகூட கட்சி நிர்வாகிகள் இந்தளவு நேரில் வந்ததில்லை. ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் வந்ததில்லை. அ.தி.மு.க. சார்பில் இருந்த கவுன்சிலர்களும் எட்டிப்பார்க்கவில்லை. உதயநிதிதான் இப்ப ஒரு இடம் விடாமல் வருகிறார்” என்கிறார்கள் தொகுதிவாசிகள்.
தொகுதி விசிட்டில், ‘சேப்பாக்கம் மாடல்’ என்ற ட்ரெண்டை உருவாக்கிவிட்ட உதயநிதியிடம் பிற தொகுதிகவாசிகளும் மனுக்களை அனுப்புகிறார்கள். அவை முறைப்படி, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் அதற்குரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, நடவடிக்கைகள் குறித்து உறுதிசெய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல தொகுதிகளிலும் தி.மு.க.வில் இம்முறை இளையவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் பலரும் களப்பணியை முதன்மையாகக் கொண்டு, தொகுதி மக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்கள்.
தி.மு.க. தொடங்கப்பட்டபோது, அண்ணா உள்பட எல்லாருமே இளைஞர்கள்தான். காலப்போக்கில், அது சீனியர்களின் கட்சி ஆனது. அந்த நிலையில்தான், கட்சியில் இளையரத்தம் பாயவேண்டும் என்ற நோக்கத்துடன் 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தி.மு.க.வின் இளைஞரணியைத் தொடங்கி வைத்தார் கலைஞர். அதனை 30 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பேற்று நடத்தியவர் மு.க.ஸ்டாலின்.
இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தி.மு.க.வுக்கு இன்னும் அதிகமாக இளரத்தம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் வளர்ந்து வரும் புதிய இயக்கங்கள் ஏற்படுத்தும் போட்டிச் சூழலால், திராவிட இயக்கத்தின் கொள்கை அடிப்படையில் இளைஞர்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாக தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மேற்கு மண்டலத்தில் அது பெரும் தோல்வியை சந்தித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் உள்ள புதிய சவால்களை உணர்த்துவதாக உள்ளது.
இந்த சவால்களை எதிர்கொண்டு, 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக தி.முக. ஆட்சி என்ற ஸ்டாலினின் திட்டம் நிறைவேறவேண்டும் என்றால், திராவிட அரசியல் கொள்கையுடனான இளைய தலைமுறையை உருவாக்கினால் மட்டுமே சாத்தியமாகும். அந்தப் பொறுப்பும் இப்போது உதயநிதியின் இளைஞரணியின் தோளில்தான். அவரது பயணப்பாதையை உற்றுநோக்குகிறார்கள் திராவிட இயக்கத்தாரும் எதிர்த்தரப்பாரும்.