இந்தியா முழுவதும் பரவலாக பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை, தீபாவளி. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு தான் பிரதானம். இதில் இன்று பெரும் பேசுபொருளாக உள்ளது பட்டாசு. சுற்றுசூழல் பாதிப்பு, சீன இறக்குமதி, உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு என பல்வேறு அரசியலை கொண்டுள்ள பட்டாசின் வரலாறு சுவாரசியம் நிறைந்தது.
சீனாவில் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போரில் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு வித வெடிமருந்தில் இருந்து பரினமித்ததே இந்த பட்டாசு. இது சீனாவில் புத்தாண்டு மற்றும் நிலவு திருவிழாவின் பொழுது பெருமளவு பயன்படுத்தபட்டது. சீன நம்பிக்கையின்படி பட்டாசுகள் தீய சக்தியை விரட்டுவதாக நம்பப்படுகிறது.வரலாற்று ஆய்வாளர் பரசுராம் கோடேவின் ஆய்வுப்படி, 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து அரேபியர்களின் மூலம் பட்டாசு இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விஜயநகர அரசன் இரண்டாம் தேவரையாவின் அரண்மனையில் பெர்சிய நாட்டு தூதரால் முதன்முதலில் பட்டாசுகள் கொண்டு விழா நடத்தப்பட்டது.
பின்னர் முகலாய மன்னர்கள் பட்டாசு தயாரிக்கும் கலையை சீனாவிடம் தெரிந்துகொண்டு இந்தியாவில் பட்டாசு செய்ய ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்தில் போர்க்களத்தில் ஆயுதமாக பயன்படுத்தபட்ட வெடிமருந்து பின் அவர்கள் அரன்மனை விழாக்களில் பெருமளவு வெடிக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பது பெருமையாக கருதப்பட்டது, இதற்காக பெரும் தொகை செலவிடப்பட்டது. தரையில் மட்டும் வெடிக்கும் பட்டாசுகள் இருந்த காலத்தில்,அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வானில் சென்று வெடிக்கும் ராக்கெட்களை வாங்கி உபயோகபடுத்தினர்.
இப்படி இருந்த நிலையில் 18 ஆம் நூற்றாண்டு முதல் தான் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் வழக்கம் ஆரம்பித்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விளக்கு கொண்டு வீடுகள் ஒளியேற்றப்பட்டது போல் ராக்கெட் கொண்டு வானும் ஒளியூட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் சீனா மற்றும் ஐரோப்பாவிலிருந்து பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர் இந்தியாவில் கல்கத்தா மற்றும் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் தொடங்கப்பட்டன. இதில் சிவகாசி இன்றுவரை இந்தியாவின் முக்கிய பட்டாசு உற்பத்தியாளராக திகழ்கிறது.
என்னதான் பட்டாசு சீனாவில் தோன்றியிருந்தாலும், அது பல நூற்றாண்டுகளாக இந்திய தேசம் மற்றும் பன்பாட்டுடன் ஒன்றிவிட்டது. இந்நிலையில், வருடம் முழுவதும் இயங்கும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தாத மாசினையா இந்த ஒரு நாளில் பட்டாசுகள் ஏற்படுத்திவிடபோகின்றன என்பதை இதற்கு கட்டுப்பாடு விதித்தவர்கள் சற்று யோசித்து பார்க்க வேண்டும்.