Skip to main content

750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Discovery of 750-year-old Dulagkal inscription

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

துலா அல்லது ஏற்றம்

கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு  துலா அல்லது ஏற்றம் எனப்படும். மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். இத்தகைய கிணறுகளை அப்பகுதிகளின் ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோர் அமைத்துத் தந்துள்ளார்கள். இது பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் இருந்துள்ளது. கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ளவை திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது.

 

இந்நிலையில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர், பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோயில் முன்பு உள்ள ஒரு துலாக்கல்லில் கல்வெட்டு இருப்பதைக் கள ஆய்வின் போது கண்டறிந்து படியெடுத்து படித்து ஆய்வு செய்தனர். இதுபற்றி வே,ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது...

 

Discovery of 750-year-old Dulagkal inscription

 

கல்வெட்டு

பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோயில் முன்பு 7 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு கல் தூண் உள்ளது. இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் “ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் அரியான் சோறனான விசைய கங்கர் செய்தது உ” என எழுதப்பட்டுள்ளது. இக்கோயில் பாட்டக்குளம் கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு துலாக்கல் ஆகும். அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத்துக் கொடுத்துள்ளார். பாண்டியர் காலத்தில் இவர் இப்பகுதியின் ஆட்சியாளராக இருந்திருக்கலாம். இங்கு துலாக்கல் மட்டுமே உள்ளது. கிணறு மூடப்பட்டிருக்கலாம்.

 

இவ்வூருக்கு மிக அருகில் உள்ள விழுப்பனூரிலும் இதேபோன்ற ஒரு துலாக்கல் உள்ளது. இதில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டில், மலைமண்டலத்தைச் சேர்ந்த ஒருவன் கிணறு, துலாக்கல், படிக்கட்டு, தொட்டி அமைத்த தகவல் உள்ளது.

 

மேலும் விருதுநகரில் இருந்து ஆமத்தூர், மங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் வெள்ளூர், விழுப்பனூர், மானகச்சேரி, மாறனேரி, அர்ச்சுனாபுரம் போன்ற ஊர்களில் பாண்டியர் காலத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இது போன்ற கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன. கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியுள்ளதை அறியமுடிகிறது. கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இது பிற்காலப் பாண்டியர்களின் கி.பி.13-14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Govt bus incident Tragedy of the young woman

 

அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அலமேலுமங்கைபுரம் என்ற கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் முத்துமாரி (வயது 23) என்ற இளம்பெண் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

2000 ஆண்டுகள் பழமையான ஊரில் 550 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

A 550-year-old inscription found in a 2000-year-old town

 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பிராமணக்குறிச்சியில் 550 ஆண்டுகளுக்கு முன்பு வாணாதிராயர், அக்ரகாரம் அமைத்துக் கொடுத்ததைக் குறிப்பிடும் புதிய கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ஸ்ரீவிபின், முகம்மது சகாப்தீன் ஆகியோர்,  பிராமணக்குறிச்சி தடியார் உடையார் ஐயனார் கோயில் முன்பு கிடக்கும் 6½ அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்ட கருங்கல்லில் 9 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்துப் படியெடுத்து படித்து ஆய்வு செய்தனர். 

 

 A 550-year-old inscription found in a 2000-year-old town

 

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, “வாணதிராயர்கள் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் குறுநிலத் தலைவர்களாகவும், அரச அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின் விசயநகர மற்றும் நாயக்க மன்னர்களுக்குக் கீழ், மதுரை அழகர் கோயில் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு தனிஅரசு நடத்தியுள்ளனர்.  இவர்களின் கல்வெட்டுகள் மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளன. இவர்கள் வைணவ மதத்தைப் பின்பற்றியவர்கள்.

 

பிராமணக்குறிச்சியில் உள்ள கல்வெட்டில் ‘சுந்தரதோள் மகவலி வணதராயர் தன்மம் அனகுறிச்சி அகிராகரம்’ என எழுதப்பட்டுள்ளது. அதன் மேல் கமண்டலமும், திரிதண்டமும் கோட்டுருவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. வாணதிராயர் குலத்தைச் சேர்ந்த மன்னர் சுந்தரதோள் மகாவலி வாணதிராயர், கி.பி.15-ம் நூற்றாண்டில், அனகுறிச்சியில் பிராமணர்களுக்கு தானமாக அக்ரகாரம் அமைத்துக் கொடுத்துள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இவர் கி.பி.1468 முதல் கிபி.1488 வரையிலான காலத்தில் ஆட்சி செய்தவர். தற்போது இவ்வூர் பிராமணக்குறிச்சி என அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் அனகுறிச்சி என உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

A 550-year-old inscription found in a 2000-year-old town

 

கல்வெட்டு உள்ள ஐயனார் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள ஆய்வு செய்தபோது இங்கு கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், வட்டச் சில்லுகளுடன் இரும்புக் கசடுகளும் கண்டெடுக்கப்பட்டன.  இதன் மூலம் சங்க காலத்தில் இருந்து சுமார் 2000 ஆண்டுகளாக இவ்வூர் மக்கள் வாழ்விடமாக இருந்துள்ளதையும், இங்கு இரும்பு உருக்கும் தொழில் நடைபெற்றதையும் அறிய முடிகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்