ரஞ்சித்தை காலிசெய்ய திட்டமிட்டே ரஜினி மக்கள் போராட்டங்களுக்கு எதிராக கருத்து சொன்னார் என்ற விமர்சனங்கள் வைரலாக பரவி வருகின்றன.
காலா ரஜினி படமா? ரஞ்சித் படமா? என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்கிற நிலையில், ரஜினியை ஏமாற்றி ரஞ்சித் தனது அரசியலை படத்தில் புகுத்திவிட்டார் என்று பாஜக மற்றும் காவிச்சங்கங்கள் புதிய விமர்சனங்களை முன்வைக்கின்றன.
காலா படம் ஷூட்டிங்கில் ரஜினிக்கு புரியாத ரஞ்சித்தின் அரசியல், படம் முடிந்து பிரிவியூ பார்த்தபோதுதான் புரிந்தது என்று சொல்வது ரஜினியை முட்டாளாக்கும் செயல். ஆனால், மொத்தமாக படத்தை பார்க்கும்போது ரஜினிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
ஆம், ரஜினி பேசும் அரசியலைக் காட்டிலும், ரஜினி இல்லாத காட்சிகளில் ரஞ்சித் பேசும் அரசியல்தான் கூர்மையாக இருக்கின்றன. அதாவது, காவி அரசியலை, மோடி அரசியலை, கார்பரேட் அரசியலை கூர்மையாக குத்திக் கிழிக்கிறது.
பொதுவாகவே, ரஜினி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு கிடந்த சமயத்தில்தான், இளைஞரின் இயக்கத்தில் புதுசா ஒரு முயற்சி பண்ணலாம் என்று ரஞ்சித்துக்கு கபாலி வாய்ப்பைக் கொடுத்தார். ரஜினி என்ற சூப்பர் ஸ்டார் பிம்பத்தின் உதவியால் ஒடுக்கப்பட்டோரின் குரலை வெகுஜனங்களுக்கு கொண்டு சேர்த்தார் ரஞ்சித்.
அந்தப் படத்தின் வெற்றி, அடுத்த வாய்ப்பையும் ரஞ்சித்துக்கு பெற்றுக் கொடுத்தது. காலா என்பது கருப்பு அரசியல் என்பது ரஜினிக்கு புரியாமலா இருக்கும். ஆனால், காவிக்கு எதிரான கருப்பு அரசியல் மட்டுமல்ல, கருப்பு, சிவப்பு, நீலம் கலந்த கூட்டு அரசியல் என்பதை ரஜினி நிச்சயமாக புரிந்திருக்க மாட்டார்.
பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று கோட்பாட்டாளர்களும் இணைந்து செயல்பட வேண்டிய காலகட்டம் இது என்று மூத்த தலைவர்கள் கருத்து வெளியிடும் வேளையில், இந்த மூன்று நிறங்களும் இணைந்தால் வண்ணமயமான வாழ்க்கை அமையும் என்பதை ரஞ்சித் வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்தை முழுமையாக பார்த்த ரஜினி, ஆஹா, இது எனது அரசியல் இல்லையே என்று அதிர்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது, ரஞ்சித் தனி ட்ராக்கில் ஒரு அரசியல்வாதியாக வளர்வதை தடுக்க ரஜினியின் குருநாதர்கள் யாரேனும் ஆலோசனை கூறியிருக்கலாம். பாஜகவுக்கும், மோடி அரசுக்கும் எதிரான அரசியல் பேசும் இந்த படம் தனது சொந்த அரசியலை காலி செய்துவிடக் கூடும் என்று அஞ்சியிருக்கலாம். இதில் ஏதோ ஒன்று ரஜினியைத் தூண்டியிருக்க வேண்டும்.
அதன் வெளிப்பாடுதான் காலா படத்தின் அரசியலுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி தூத்துக்குடியில் ரஜினி பேசிய பேச்சு என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ரஞ்சித்தின் அரசியலுக்கு ஆதரவையும், ரஜினி அரசியலுக்கு எதிர்ப்பையும் காலா திரைப்படம் நன்றாகவே பதிவு செய்திருக்கிறது.