கரோனா காலத்தில் தன் உயிரையும் பணயம் வைத்து வேலை பார்த்து வருகின்றனர் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை சார்ந்த ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள். அயராமல் பணியாற்றி வரும் இவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு சேவையை இந்தச் சமூகத்திற்குச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், 70 நாளுக்கும் மேலாக ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள டயாலிசிஸ் டெக்னீசியன் தம்பிதுரை.
தர்மபுரி மாவட்டம் மானியதஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2015-2016 பேட்ஜில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் டெக்னீசியனாகப் பணிக்குச் சேர்ந்தார். அதன் பின்னர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வரும் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று வருடங்களாக எழும்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தம்பிதுரை, கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரை ஒருநாள் கூட விடுமுறை எடுக்கவில்லை.
'ஒரு நாள் கூட லீவு எடுக்காம... எப்படி சார்?' என நாம் அவரிடம் பேசினோம்.
மனம் திறந்து பேச ஆரம்பித்த அவர், 'என்னுடன் பணியாற்றியவர் சொந்த ஊருக்குச் சென்றபோது அங்கேயே அவர் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால் அவரால் திரும்ப இங்கு வரமுடியவில்லை. குழந்தைகளுக்கான சிகிச்சை கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறோம். நாம லீவு போட்டோம் என்றால் அந்த குழந்தைகளுக்கான சிகிச்சையும் தள்ளிப்போகும். இந்த கரோனா காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு நாம் துணையாக இருக்கணும், குழந்தைகளை கரோனா காலத்தில் அலைய வைக்கக்கூடாதுன்னு முடிவு செய்து மருத்துவமனையிலேயே தங்க ஆரம்பித்தேன். இதற்கு மருத்துவமனை இயக்குநர் மற்றும் மருத்துவர்கள், சக ஊழியர்கள் அனைவரும் ஒத்துழைத்தனர்.
தொடர்ந்து வேலை செய்யும்போது சோர்வு வரவில்லையா?
கண்டிப்பா வரும். சிகிச்சை அளிக்கும்போது குழந்தைகள் அழும். அதனைப் பாக்கும்போது எனக்கும் அழுகை வரும். கட்டுப்படுத்திக் கொள்வேன். அதற்குப் பிறகு குழந்தைகள் சிரிக்கும். போகும்போது டாடா காட்டும்... அப்ப அந்தக் குழந்தைகள் முகங்களைப் பார்க்கும்போது சோர்வெல்லாம் போய்விடும். இந்த வேலைக்கு வந்ததும் குழந்தைகளுடன் பழக வாய்ப்புக் கிடைச்சுது. என்னைக் கண்டால் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும். அப்படிப் பழகிப்போன குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கணும், தள்ளிப்போடக் கூடாது என்பதற்காகவே லீவு போடல.
உங்க அப்பா, அம்மா என்ன சொல்றாங்க?
நான் வீட்டுக்கு ஒரே பையன். சென்னையின் நிலைமை குறித்து டி.வி.யில் அவர்கள் பார்க்கிறார்கள். 'வந்துவிடு' என்பார்கள். வீட்டுக்கு ஒரே பிள்ளை, எவ்வளவு பெரியவனா வளர்ந்தாலும், அவர்களுக்கு நான் குழந்தைதானே. எனக்கு இந்தக் குழந்தைகளை விட்டுப்போக மனசு வரல. போன் பேசும்போதெல்லாம் வந்துவிடு வந்துவிடு என்பார்கள். இதற்காகவே நான் அப்பா, அம்மாக்கிட்ட போன் பேசுறத குறைச்சிக்கிட்டேன். இப்ப அமைச்சர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், மருத்துவமனை இயக்குநர், மருத்துவர்கள் என எல்லோரும் பாராட்டுறத பார்த்து அவுங்க சந்தோஷப்படுறாங்க. 'நீ ஜாக்கரதையா இருப்பா'ன்னு சொல்றாங்க.
70 நாளுக்கும் மேலாக ஒரு நாள்கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வரும் தம்பிதுரைக்கு சுகாதாரத்துறை அமைச்சர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், மருத்துவமனையின் இயக்குநர் என எல்லோரும் பாராட்டுத் தெரிவித்து வருவதுடன், அவரது உடல்நலனையும் கவனித்துக் கொள்ளுமாறும் அன்போடு அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவமனையில் எல்லோரையும் அனுசரித்துபோகும் தம்பிதுரை தற்காலிக பணியாளர்தான். அவரது வேலை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது பிரார்த்தனை என்கிறார் உடனிருந்த நண்பர். பாராட்டுத் தெரிவித்த அரசு, பரிசாக நிரந்தர பணியைத் தரும் என நம்புவோம்.