கூட்டம் சேரக்கூடாது, கும்பலாக சுற்றக்கூடாது என நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கும் சூழலில்தான், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து பேரணி போல திரண்ட மக்கள் தங்கள் சொந்த மாநிலங்கள் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் பிற மாநிலங்களிலிருந்து தலைநகருக்கு வந்த தொழிலாளர்கள்.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் டெல்லியில் குடும்பத்தோடு தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் அவர்களுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. அன்றாடம் உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில், 4 நாட்களாக உணவுக்கு வழியில்லை. கைக்குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியவில்லை. பசியும் பட்டினியுமாக எத்தனை காலம் தலைநகரில் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அத்துடன், அவர்கள் முடங்கியிருப்பதற்கு வீடும் கிடையாது. தெருவோரமே பல குடும்பங்களின் வசிப்பிடம்.
போக்குவரத்தும் முடக்கப்பட்ட நிலையில், கொடும்பசியுடன் தலைநகரிலிருந்து 500, 600 கி.மீ தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கே போய்விடலாம் எனப் புறப்பட்டுவிட்டனர். கரோனா தொற்று பரவும் அச்சத்தில் உள்ள மத்திய-மாநில அரசாங்கங்கள் இந்தத் தொழிலாளர்களின் அவலத்தை இப்போதுதான் தங்கள் கழுத்தை லேசாகத் திருப்பி பார்க்கத் தொடங்கியுள்ளன.
பிற மாநிலத் தொழிலாளர்களை டெல்லி காப்பாற்றும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சொந்த ஊருக்குச் செல்பவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்தனை பேருக்கும் எப்படி பேருந்து அல்லது பிற வாகன வசதி செய்து தரப்படும், எத்தனை நாட்களுக்குள் செய்து தரப்படும், அதுவரை அவர்கள் கரோனா தொற்று ஏற்படாமல் தங்குவதற்கு எங்கே இடம், உணவுக்கு என்ன வழி என்று தெரியாத நிலையே நீடிக்கிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு இன்று (மார்ச் 28) அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடு முடங்கியுள்ள நிலையில் வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்கு வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட வீடற்ற மக்களுக்கு மறுவாழ்வு முகாம்கள் மற்றும் பிற இடங்களில் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட வசதிகளை மாநில பேரிடர் பொறுப்பு நிதியிலிருந்து செய்து தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும், (குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில்) குவிந்திருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கும் இடமின்றி, தின்பதற்கு உணவின்றி சுற்றுத் திரிவது, கொரோனா தொற்றுப் பரவல் குறித்து அந்தந்த மாநில மக்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மாநிலம் என்றாலும் வெளி மாநிலம் என்றாலும் மக்களுக்கு வயிறும் பசியும் ஒன்றுதான். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கங்களின் கடமை.
வீட்டுக்குள் முடங்குங்கள் என்று பிரதமரும் மாநிலங்களின் முதல்வர்களும் தெரிவித்தனர். வீட்டுக்குப் போக வழி காட்டுங்கள் என்கிறார்கள் ஏழைத் தொழிலாளர்கள். பால்கனியில் நின்று கைதட்டி பாரத் மாதாவுக்கு ஜே என்று முழக்கமிட்டவர்கள், இப்போதுதான் குனிந்து பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள், உண்மையான பாரதத்தை.