கரோனா வைரஸ் பிரச்சனையில் உலகமே ஊடரங்கு தடை சட்டத்தில் சிக்கிக்கொண்டு இருக்கும் நிலையில், அவரவர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் அதுவே உங்களுக்கு பாதுகாப்பு என்று அனைத்து தரப்பிலிருந்தும் அறிவுரைகள் உத்தரவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் யாரும் இல்லாத அனாதைகளாக தெருவில் திரிந்து கொண்டிருக்கும் தெருநாய்களுக்கு உணவு அளிப்பதற்கு போலீஸ் தடைபோட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் மேனகாகாந்திவரை சென்று புகார் செய்து திருச்சி கலெக்டரிடம் அனுமதி வாங்கியிருக்கிறார்கள் திருச்சியிலுள்ள தங்கராஜ் – கமலா தம்பதி.

தங்கராஜ் – கமலா தம்பதியிடம் தெருநாய்களுக்கு உணவு அளிப்பது குறித்தும், இதற்கு எப்படி அனுமதி கிடைத்தது என்பது குறித்தும் பேசினோம். அவர்கள் இதுபற்றி நம்மிடம் விரிவாக கூறியதாவது:
தெருக்குள்ள போனா, ஆடு, மாடு, கோழி எல்லாம் இருக்குது, அதுக்கெல்லாம் ஓனர் இருக்குறாங்க, அவங்க அதுகளுக்கு உணவு தந்துடுறாங்க. ஆனால் இந்தத் தெரு நாய்களுக்கு மட்டும் யாருமே சாப்பாடு கொடுப்பது கிடையாது. அது கைவிடப்பட்ட விலங்கு. காட்டில் வாழும் விலங்கு கூட ஒன்றை ஒன்று அடித்து சாப்பிட்டுவிடும். இந்த உலகத்தில் தெருநாய்களுக்கு மட்டும் உணவு கிடைப்பதே இல்லை.

ஆடு, கோழி, மாடு போன்றவற்றை அடித்தால் உடனே கேள்வி கேட்கும் மக்கள், தெரு நாய்களை யாராவது அடித்தால் கேள்வி கேட்பதில்லை. இப்படி யாருமே கண்டுகொள்ளாத தெருநாய்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். என்னுடைய உழைப்பில் வரும் சம்பளத்தில் 99 சதவீத சம்பாத்தியத்தை தெருநாய்களின் உணவுக்காவே செலவு செய்கிறேன்.
தேரடி கடைவீதியில் கே.டி. என்கிற பழைய புத்தகக்கடை வைத்திருக்கேன். என்னுடைய கடையில் வரும் வருமானத்தில் 99 சதவீதம் தெருநாய்களின் உணவுக்காக செலவு செய்வேன் என்று எழுதியிருக்கிறேன்.
இதை 18 வருடம் தொடச்சியாக செஞ்சுகிட்டு வரேன். ஒரு நாளைக்கு குறைந்தது 120 நாய்களுக்கு உணவு கொடுக்கிறேன். சாப்பாடு, பிஸ்கெட் எடுத்துகிட்டு வீட்டை சுற்றியுள்ள 4 கிலோமீட்டர் சுற்றளவில் டூவிலரிலே சென்று பிஸ்கெட்டு போடுவேன். பார்லே பிஸ்கெட் பெட்டி 400 ரூபாய் வரும், ஒரு நாய்க்கு 4 முதல் 5 பிஸ்கெட் பாக்கெட் போடுவேன்.

ரூ. 5 லட்சம் செலவு பண்ணி மாருதி ஈகோ ஆம்புலேன்ஸ் வாங்கியிருக்கேன். நாய்க்கு உணவு கொடுக்க போகும் போது ரோட்டில் அடிபட்டு கிடக்கும், புண் வந்திருக்கும் நாய்களை பார்த்தால் உடனே அதை எடுத்து வந்து மருத்துமனைக்கு அழைத்து சென்று காயத்திற்கு மருந்து போட்டுவிடுவேன். உடம்பு சரியில்லை என்றால் மருந்து மாத்திரை எல்லாம் பால்கோவாவில் வைத்து கொடுப்பேன். திரும்ப அதே இடத்தில் இறக்கிவிடுவேன். இறந்து போன விலங்குளை அடக்கம் செய்வேன். இதையெல்லாம் நான் மட்டுமே செய்வேன். என்னுடைய குழந்தைகள் வெளியூரில் இருக்காங்க. நானும் என் மனைவி மட்டும் தான், இதை 18 வருடங்களாக தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கிறோம்.
ஒரு நாளைக்கு 5 மணி நேரம் செலவாகும், காலையில் 2 மணிநேரம், இரவு 3 மணி நேரம் செலவு ஆகும். ஒவ்வொரு நாள் இரவு தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணி ஆகிவிடும், ஏனா அடிபட்டிருக்கும் நாயின் புண்களை எல்லாம் துடைத்து அதை சரிபண்ணவே லேட்டாயிடும். இருந்தாலும் எனக்கு பெரிய ஆறுதல் அவர்களுக்கு சேவை செய்வது, விலங்கில் இருந்து வரும் எந்த உணவு பொருட்களை நான் சாப்பிடுவது இல்லை. வி கேன் என்கிற குழுவில் இணைந்து உள்ளேன். பால், தயிர், வெண்ணை, எதுவுமே சாப்பிடுவது கிடையாது.

இப்போ கரோனா வைரஸ் பிரச்சனை சமயத்தில் நாங்கள் தொடர்ச்சியாக தெருநாய்களுக்கு உணவு கொடுத்தபோது கோட்டை காவல் நிலைய போலீஸ் 144 தடை உத்தரவு போட்டிருக்கு வெளியே நின்னா புடுச்சு உள்ளே போட்டுறுவேன் என மிரட்டினாங்க. தெருநாய்களுக்கு 144 கிடையாது எவ்வளவோ சொல்லியும் என்னை உணவு கொடுக்க விடமாட்டேன் என சொல்லிட்டாங்க, என்னை நம்பி 100 ஜீவன் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் அதுங்களுக்கு யார் சாப்பாடு போடுவா எனக்கு உடம்பே ஒரு மாதிரி ஆயிடுச்சு. எனக்கு வேறு வழி தெரியவில்லை.
ஏற்கனவே ஒரு நண்பர், மேனகாகாந்தியின் தொடர்பு எண் கொடுத்து விலங்கு சம்மந்தமாக ஏதாவது பிரச்சனை என்றால் கூப்பிடுங்க என்று சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டோம். அவுங்க உடனே நான் கலெக்டர்கிட்ட பேசுறேன் என சொல்லி எங்களை போய் பார்க்க சொன்னாங்க. நாங்க போய் பார்த்தோம். அப்ப அங்க இருந்த கலெக்டர் உதவியாளர் சிவசுப்ரமணியன் என்பவர் நேற்றுதான் மேனகாகாந்தி பேசினாங்க என்று சொல்லி ஒரு அனுமதி சீட்டு தயார் பண்ணி கொடுத்தார். ஆனா லோக்கல் போலீஸ்தான் இது எதுவுமே தெரியாமா வெளிவரக்கூடாதுன்னு மிரட்டிகிட்டு இருக்காங்க. ஆனா எங்ககிட்ட அனுமதி சீட்டு இருக்கு இனி பயம் இல்லாம தொடர்ந்து செயல்படுவோம் என்றனர்.

இந்த உலகம் சுயநலம் மிக்க மனிதர்கள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் ஒரு நெருக்கடியான நேரத்தில் உயிர் பயம் மிக்க பிரச்சனை சுற்றிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் மனிதநேயத்தோடு யாரும் அற்ற அனாதைகள் என்று அழைக்கப்படும் தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் இந்த செயல் பெரிய தன்னம்பிக்கை தரும் விஷயமாக தெரிகிறது.