மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 10 தொகுதியில் ஒன்றான விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி பின்வருமாறு...
தேர்தலுக்கும், பிரச்சாரத்திற்கும் உள்ள கால இடைவெளி மிகவும் குறைவான நாளாக இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுகிறதே?
“அது புதிய வேட்பாளர்களுக்கு இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை வேட்புமனு வாபஸ் வாங்கிய பிறகு கடைசி கட்டமாக 15 நாள்கள் நடக்கும். அந்தப் பிரச்சாரம்தான் உண்மையான தேர்தல் பிரச்சாரம். அதற்கு முன்னாடி, ஒரு வருடம் கூட பிரச்சாரம் செய்யலாம். பிரதமர் மோடி, ஐந்து வருடமாக பிரச்சாரம் தான் செய்து வருகிறார்”.
விருதுநகர் தொகுதியை முதன் முதலில் பிரிக்கப்பட்ட பிறகு உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட வைகோவை வீழ்த்தி நீங்கள்தான் வெற்றி பெறுகிறீர்கள். அவரை வீழ்த்தும்போது அந்த வெற்றி உங்களுக்கு எப்படி இருந்தது?
“புரட்சியாளர் வைகோ ஒரு பெரிய பிம்பம். 1993ல் நான் கல்லூரி மாணவனாக, இருந்தபோது அவரது பேச்சை கேட்பதற்காக காத்துக் கொண்டிருப்பேன். அந்தக் காலத்தில் இளைஞர்களுக்கு அவர் மேல் ஒரு பெரிய ஈர்ப்பு. அவரை எதிர்த்து தேர்தலை சந்திப்பது என்பது காலத்தின் கட்டாயமாக இருந்தது என்று தான் நினைக்கிறேன். இது கூட்டணியின் ஒரு பலம். நான் வேட்பாளராக அறிமுகமாகும் போது தி.மு.க.வும், காங்கிரஸும் மிகவும் வலுவாக முன்னெடுத்தது. அனைவரும் சேர்ந்து அந்த வெற்றியைக் கொடுத்தோம். அந்த 2009 தேர்தல் வெற்றி என்பது மிகவும் நெருக்கமான வெற்றியாக இருந்தது. அதன் பிறகு 2019ல் நான் போட்டியிடும் போது எனக்காக வைக்கோ பிரச்சாரம் செய்தார். இந்த முறையும் அவர் எனக்காக பிரச்சாரம் செய்வார் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. வருவேன் என்றும் சொல்லி இருக்கிறார்”.
உங்களை எதிர்த்து ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன் போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் நிற்கிறார்களே. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
“தமிழ்நாட்டினுடைய பிரச்சனையா என்று தெரியவில்லை. சினிமாவில் இருக்கக்கூடிய நபர்கள் நின்றால் தான் அது நட்சத்திர தொகுதியாக இருக்கிறது. சினிமா என்பது அவருடைய தொழில், அதை பாராட்ட வேண்டும். அவர்கள் மக்களிடம் என்ன கொள்கையை வைக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதே போல், ஒரு எம்பியாக இருந்து, அவர்கள் டெல்லி நாடாளுமன்றத்தில் எப்படி குரல் கொடுப்பார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் இருக்கக்கூடிய 80 சதவீத மக்களை மட்டுமே பாஜக பார்க்கிறது. மீதமுள்ள 20% சிறுபான்மையினர் மக்களை ஓட்டுரிமை இல்லாமல் ஆக்குவது தான் பாஜகவின் பார்வை. இதுதான் ஆர்.எஸ்.எஸ் உடைய பார்வை. அவர்களைப் பொறுத்தவரை சிறுபான்மையினர் மக்களின் ஓட்டு மட்டும் கிடைக்க வேண்டும். மற்றபடி அவர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கக் கூடாது என்பதுதான். எடுத்துக்காட்டுக்கு, அவர்களது அமைச்சரவையில் சிறுபான்மையினர் ஒருவர் கூட கிடையாது. இதுவரை அவர்கள் அறிவித்த தேர்தல் வேட்பாளர்களின் ஒருவர் கூட சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர் கிடையாது. 20 சதவீதம் உள்ள சிறுபான்மையினர் மக்கள் உள்ள ஒரு சமூகத்தை மொத்தமாக ஒதுக்கி வைத்து அரசியல் செய்வது ஆர்எஸ்எஸ் மட்டும்தான்.
அவர்களை அரசியல் பூர்வமாகவும் ஒடுக்க வேண்டும், பொருளாதார ரீதியாகவும், அவர்களை ஓரம் கட்ட வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது ஊரறிந்த விஷயம். அதை பாஜக என்ற முகத்தை வைத்து ஆர்.எஸ்.எஸ் செய்கிறது. அதை செய்து கொண்டிருக்கிறார் மோடி. அந்தக் கட்சி பெயர் பாஜக. அந்தக் கட்சிக்கும் காங்கிரசிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. எங்களை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் காங்கிரஸுடைய தத்துவம். காங்கிரஸ் அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், பா.ஜ.கவின் தத்துவம் பெரும் பணக்காரர்களை உருவாக்க வேண்டும் என்பது தான்.
கடந்த 10 வருடத்துக்கு முன்பாக அதானி, அம்பானி போன்றவர்களை நமக்கு யாரென்று தெரியாது. அதானி, பத்து வருடத்திற்கு முன்பு உலகப் பணக்காரர்களை பட்டியலில் 612 வது இடத்தில் இருந்தார். ஆனால், இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பத்து வருட காலத்தில் இது மாதிரியான வளர்ச்சி யாருக்கும் நடந்ததில்லை. ஏனென்றால் ஒரு பிரதமரும், அரசும் முழு நேர வேலையாக அதானியை மட்டும் பணக்காரராக உருவாக்க வேண்டும் என்று வேலை செய்கிறது. இந்த அரசினுடைய மாடலே ஒரு சிலரை மட்டும் பணக்காரர்களாக ஆக்க வேண்டும், அந்தப் பணத்தில் மற்ற எல்லா விஷயத்தையும் நம் கட்டுக்குள் வைக்க வேண்டும். சிறுபான்மையினர் சமூகத்தை ஒடுக்க வேண்டும், சிறுபான்மையினர் மொழியான தமிழ் போன்ற மொழியை இந்தி மொழியை போன்ற மொழியை வைத்து அடக்க வேண்டும் இதுதான் அவர்களுடைய கொள்கை. இதுதான் பாஜகவின் தாயாக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை” என்று கூறினார்.
பேட்டி தொடரும்...