Skip to main content

“வெற்றிமாறன் என்னை சந்தித்து சில தகவல் பெற்றிருக்கலாம்” - ‘விடுதலை’ திரைப்பட வாத்தியார் மகன் சோழன் நம்பியார் !

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Chozhan Nambiyar Special Interview

 

சமீபத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் 'விடுதலை' படத்தில் அதிகம் கவனிக்க வைத்தது விஜய் சேதுபதி ஏற்று நடித்த பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரம். இந்த கேரக்டர் அதிக கவனம் பெற்றதற்குக் காரணம் இது கலியபெருமாள் என்கிற உண்மைக் கதாபாத்திரத்தைத் தழுவி உருவான ஒன்று என்பதுதான். தமிழ்த் தேசிய போராளி கலியபெருமாள் அவர்களுடைய மகன் சோழன் நம்பியார் இந்தப் படம் குறித்தும் அவருடைய தந்தை குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

என்னுடைய தந்தை கலியபெருமாளை வாத்தியார் என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். அவர் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதையும் தாண்டி பொதுத் தொண்டில் அதிகம் ஈடுபட்டவர் என்பதால் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். சில உண்மைச் சம்பவங்களை விடுதலை படத்தில் வைத்துள்ளனர். பொதுமக்களுக்கு நேரடியாகப் புரியாவிட்டாலும் இதில் ஈடுபட்டவர்களுக்கு படத்தில் காட்டப்படும் பல விஷயங்களின் பின்னணி புரியும். 1950 காலகட்டங்களில் என் தந்தை பொன்பரப்பியில் ஆசிரியராக இருந்தார். ஆரம்பத்தில் அவர் பெரியாரிய இயக்கங்களில் இருந்தார். ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாக எதிர்த்ததால் பெரியாரிய இயக்கங்களோடு இணைந்து பணியாற்றினார். வர்க்க விடுதலையின் மீதும் ஆர்வம் கொண்டதால் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பயணித்தார்.

 

மக்கள் தங்களுடைய அன்றாடப் பிரச்சனைகளையும் என்னுடைய தந்தையிடம் எடுத்து வருவார்கள். அவரும் அதைத் தீர்த்து வைப்பார். நாங்கள் ஐந்து பேர் சகோதர, சகோதரிகள். எங்கள் தந்தை ஒரு விவசாயியாகவும் இருந்தார். சமூகத்துக்காகப் போராடினாலும் குடும்பத்தையும் நன்றாக கவனித்துக் கொண்டார். எங்கள் தந்தையின் மீது அனைவருக்கும் இருந்த மரியாதையின் காரணமாக காவல்துறை மூலமாக ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. நக்சல்பாரி இயக்கம் தொடங்கிய பிறகு பல்வேறு பிரச்சனைகள் வந்தன. பாதுகாப்புக்காக வெடிகுண்டு செய்தபோது அது வெடித்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு மத்திய அரசிடமிருந்து கடுமையான ஒடுக்குமுறைகள் வந்தன. யாரும் புகாரளிக்க முன்வராத நிலையில், ஒருவரை வற்புறுத்தி புகார் கொடுக்க வைத்தனர். அதில் எங்களுடைய ஒட்டுமொத்த குடும்பமும் சிறை சென்றோம். தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டோம். 

 

10 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அனைவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டோம். அப்போதுதான் தந்தையை மீண்டும் பார்த்தோம். நாங்கள் பிறக்கும் போதே கம்யூனிஸ்டுகளாகப் பிறந்தோம். பொதுவுடைமைச் சிந்தனை எங்களுக்குள் ஊறியிருந்தது. போராளிகள் சிறையில் அடைக்கப்பட்ட வரலாறு குறித்து தொடர்ந்து படித்து வந்தோம். அதனால் எங்களுக்கு சிறைத் தண்டனை கிடைத்தபோது இயல்பாக ஏற்றுக்கொண்டோம். விடுதலை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படம் குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய போராட்டங்களின் போது அவரை நான் சந்தித்திருக்கிறேன். என் தந்தை குறித்து நான் எழுதிய புத்தகத்தை அவர் படித்திருக்கிறார். திரைத்துறையினரோடும் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. விடுதலை படத்தில் விஜய் சேதுபதியை சூரி கைது செய்யப் போகும் காட்சியில் மக்கள் விஜய் சேதுபதிக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். இதுபோன்ற பாதுகாப்பு மக்கள் செல்வாக்கினால் என் தந்தைக்கு இருந்தது.

 

அப்பாவுடைய வாழ்க்கையோடு ஓரளவு ஒத்துப்போகும் அளவுக்கு இந்தப் படம் இருந்தது. கமல் நடித்த நாயகன் படமும் அப்பாவின் வாழ்க்கையை எனக்கு நினைவுபடுத்தும். என் தந்தை ஒரு வெகுஜனப் போராளி. விடுதலை படம் விறுவிறுப்பாகவும், தமிழ்த் தேசிய உணர்வைத் தூண்டும் வகையிலும் இருந்தது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்டுகள் தான் அதிகமாக சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடித்துத் துன்புறுத்துவது தொடர்ந்து நிகழ்ந்தது. சிறைக் கைதிகளுக்கு சரியான உணவு வழங்குவது போன்ற பிரச்சனைகளுக்காக சிறையிலும் என் தந்தை போராடி காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு பெரிய ஆளுமையாகவே இருந்தார். அவர் மீது இருந்த மரியாதையால் அவர் பெரிதாகத் தாக்கப்பட்டதில்லை. ஆனால் மற்றவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அப்போது இந்திரா காந்தியும் ஆதரவு கொடுத்தார். போராளிகளுக்கு முகாம் அமைத்து அரசாங்கத்தின் சார்பிலேயே பயிற்சியும் வழங்கப்பட்டது. அடுத்து வந்த ராஜீவ் காந்தி ஒரு தனி மாநிலம் பெற்றுத்தர முயற்சி செய்தார். ஆனால் அதைப் போராளிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

இந்திய அரசின் அமைதிப்படை தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் ஒடுக்கியது. மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் ரயில் விபத்து சம்பவம் நடத்தப்பட்டது. என் தந்தைக்குப் பிறகு கட்சியைக் கட்டி எழுப்பிய தமிழரசன் தான் அந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தினார். பொதுமக்களை பாதிக்கும் அளவுக்கு தமிழ்நாடு விடுதலைப் படை எதையும் செய்யக்கூடாது என்று என் தந்தை அறிவுறுத்தினார். வங்கிக் கொள்ளையிலும் ரயில் விபத்திலும் என் தந்தைக்கு முழுமையான உடன்பாடு இல்லை. கலைஞர், எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் என் தந்தையின் பெரும்பாலான செயல்பாடுகள் இருந்தன. அனைத்து ஆட்சிகளிலுமே ஒடுக்குமுறைகளும் இருந்தன. விடுதலை படத்தில் என் தந்தையின் கதாபாத்திரத்தை வெற்றிமாறன் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தில் ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 5 செண்ட் நிலம் வழங்கப்பட்டது.

 

அறுவடை இயக்கம், சர்க்கரை ஆலைக்கு எதிரான போராட்டம் என்று எண்ணிலடங்கா வெகுஜனப் போராட்டங்களில் என் தந்தை ஈடுபட்டிருக்கிறார். விடுதலை படத்தின் இயக்குநர் என்னை சந்தித்து சில தகவல்களைப் பெற்றிருந்தால் படத்தை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம் என்கிற வருத்தம் இருக்கிறது. ஆனால் வெற்றிமாறன் நல்ல முறையிலேயே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். என் தந்தையின் பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி ஒரு சிறந்த தேர்வு.

 

 

 

Next Story

“ஆம்ஸ்ட்ராங்கை ரோல் மாடலாக எடுத்திருந்த இளைஞர்களுக்கு பேரிழப்பு” - வெற்றிமாறன்

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
Vetimaaran said Disaster for the youth who had taken Armstrong as their role model

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுச் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதனையடுத்து, பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங்கினுடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வருகையையொட்டி பெரம்பூர், செம்பியம் பகுதியில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இளைஞர்களை ஒருங்கிணைத்து எல்லோரையும் படிக்க வைத்து அவர்களை நல்வழிப்படுத்தின பெரிய ஆளுமை. இந்த இழப்பு எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. குறிப்பாக, அவரால் ஈர்க்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் படித்து பெரிய இடங்களில் இருக்கிற இளைஞர்களுக்கும், அவரை ரோல் மாடலாக எடுத்து படித்துகொண்டு இருப்பவர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதற்கான இடம் தொடர்பாக நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன். அவர்களின் விருப்பம் என்னவோ அதைச் செய்வதே சரியாக இருக்கும். இந்தப் படுகொலையை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு கட்சியினுடைய மாநிலத் தலைவருக்கு இப்படி நிகழ்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

Next Story

“இது இல்லனா என் படம்லாம் வெளியவே வராது” - வெற்றிமாறன்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Vetrimaran said about editing

சென்னையில் திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிங்கம் புலி, ஆர்.பி. உதயகுமார் நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். 

இதில் பேசிய வெற்றிமாறன், “சினிமாவுல என்ன தப்பு வேணாலும் சூட்டிங் ஸ்பாட்ல பண்ணலாம். அதை எடிட்டிங்ல கரக்ட் பண்ணிட முடியும் என்கிற தைரியம் எனக்கு எப்போது இருக்கு. என்னை மாதிரி ஸ்டைல்ல படம் எடுக்குறவங்களுக்கு எடிட்டிங் ரூம் ஸ்ட்ராங்கா இல்லனா என் படம்லாம் வெளியவே வராது. அதுக்கு காரணம், நான் இரண்டு மிக சிறந்த எடிட்டர்களோடு வேலை பார்த்தது தான். ஒருவர் பாலு மகேந்திரா. நிறைய பேர் அவருடைய ஒளிப்பதிவு பத்தி பேசுவாங்க, இல்லனா ரைட்டிங் பத்தி பேசுவாங்க. 

ஆனால், நான் அவர் பக்கத்தில் இருந்து பார்த்ததில், அவருடைய மத்த திறமைய காட்டிலும் அவர் ஒரு தலைசிறந்து எடிட்டர்.  அவரிடம் வேலை பார்த்த உதவி இயக்குநர்கள் எல்லோருக்கும் எடிட்டிங் அறிவு கொஞ்சம் இருக்கும். என்னுடைய முதல் படத்தில் இருந்து எடிட்டர் என்கூடவே இருந்து என் படங்கள உருவாக்குறாங்க. இந்த இடத்துல என்னுடைய இடம் இருக்கனும்னு நினைச்சு இங்கு வந்துருக்கேன்” என்று கூறினார்.