Skip to main content

மலேசியாவில் இருந்தாலும் மாரியம்மனை கும்பிடுவேன் - சீனத் தமிழன் வில்லியம் சியா

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 China Tamilan William Chia interview

 

தமிழ் மொழியின் மீது பண்பாடு, கலாச்சாரத்தின் மீது தீவிரமான பற்று கொண்டுள்ள சீனத் தமிழன் வில்லியம் சியா உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

 

தமிழர்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பது என்னுடைய எண்ணம். இன்று நான் வாழ்வதற்கு காரணம் தமிழ் தான். தமிழ் தான் என்னை வாழ வைத்தது. ஒரு சீனராக இருந்தாலும் இதை நான் பெருமையாகச் சொல்வேன். நான் மலேசியாவில் ரப்பர் எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்தவன். நாம் வாழும் சூழ்நிலை தான் நமக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்கும். அதுபோல் எனக்கும் என்னுடைய சூழ்நிலை தமிழைக் கற்றுக்கொடுத்தது. நாங்கள் வாழ்ந்த பகுதியில் நிறைய தமிழர்கள் இருந்தனர். அதனால் தமிழர்களோடு பழகும் வாய்ப்பும் தமிழ் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. 

 

தமிழ் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கும், தமிழ் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழர்களின் ஒழுக்கம் என்னைக் கவர்ந்தது. திருவிழா காலங்களில் காப்பு கட்டுவது, தீ மிதிப்பது என்று அனைத்தையும் பார்த்திருக்கிறேன். நானே மூன்று முறை தீ மிதித்திருக்கிறேன். தமிழ் கடவுள்களின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அம்பாள், மாரியம்மன், காளியம்மன் என்று பல்வேறு கடவுள்களை எனக்குப் பிடிக்கும். 2006 ஆம் ஆண்டு முதன்முதலில் நான் தமிழ்நாட்டுக்கு வந்தேன். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டுக்கு நான் வருகிறேன்.

 

தமிழ்நாட்டுக்கு வருவது தான் என்னை ஆசுவாசப்படுத்துகிறது. இங்கு வரும்போது தமிழ் மண்ணை நான் தொட்டுக் கும்பிடுவேன். இந்த மண்ணுக்கு நான் ஏதோ கடமைப்பட்டிருப்பது போல் எப்போதும் உணர்வேன். என்னுடைய தாய்வழிப் பாட்டி ஒரு தமிழர். என் உடம்பிலும் தமிழ் ரத்தம் ஓடுகிறது. அதுகூட என் தமிழ் பற்றுக்குக் காரணமாக இருக்கலாம். என்னுடைய சிறுவயதில் தமிழ் படங்களின் மீது எனக்கு ஈடுபாடு கிடையாது. அதன்பிறகு திருவிளையாடல், கந்தன் கருணை, ஆதிபராசக்தி போன்ற படங்களைப் பார்த்தேன். நாங்கள் கேசட் விற்பனையிலும் ஈடுபட்டதால் தமிழ் படங்களின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. 

 

சமீபத்தில் கூட துணிவு படம் நல்ல கதையம்சத்துடன் இருந்தது. மாரி செல்வராஜ் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். உண்மையில் நடக்கும் விஷயங்களை எதார்த்தமாக அவர் காண்பிக்கிறார். கர்ணன் படத்தில் வரும் 'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

 

 

Next Story

“பெரிய இயக்குநர்கள் நேரடியாக அணுகுவார்கள்” - சரண்யா ரவிச்சந்திரன் பேட்டி!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 Saranya Ravichandran | Indian2 | Kamal Haasan | Shankar |

தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரண்யா ரவிச்சந்திரன் அண்மையில் வெளியான  இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்நிலையில்  நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக அவரை சந்தித்தபோது, அவரின் சினிமா வாழ்க்கை பற்றிய சுவாரசியமான தகவல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். 

தொடக்கத்தில் வந்த பட வாய்ப்புகள் அணுகுமுறைகள் பற்றியும், தற்போது  வரும் பட வாய்ப்புகளின் அணுகுமுறையிலும் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளது என்ற கேள்வி குறித்து அவர் பதிலளிக்கையில் "மரியாதையில்தான் எல்லாம் உள்ளது, அவர்கள் மதிக்கவில்லை என்பதால்தான் நமக்கு திரைத்துறையில் நல்ல இடத்திற்குப் போக வேண்டும் என்ற வெறி வரும். அப்படிதான் அவர்கள் நம்மை புஷ் பண்ணிக் கொண்டு செல்வார்கள். சில சமயங்களில் இயக்குநர் அவரே வந்து அணுகாமல், ஏன்  உதவியாளரை அனுப்புகிறார் என்று தோன்றும், இயக்குநருக்குப் பல வழிகளில் அழுத்தம் இருக்கும், அடுத்த காட்சி குறித்த சிந்திப்பார்கள், ஆனால் சில பெரிய இயக்குநர் அவர்களாகவே வந்து நம்மிடம் அணுகுவார்கள், அது சில இயக்குநர்களின் ஸ்டைலாக இருக்கும் 

நான் முதல் படத்தில் நடிக்கும்போது படப்பிடிப்பில் என்னிடம் இயக்குநர் பேசவே இல்லை. நானே அவரை அழைத்து என்னுடைய சீன் எப்போது வரும், நான் இங்குதான் உட்கார்ந்திருப்பேன் என்னைத் தேடாதீர்கள் என்று சொல்லுவேன், ஆனால் நான் நடித்து முடித்தபோது  படப்பிடிப்பின் இடைவேளையில் அவரே என்னிடம் வந்து சாப்டிங்களா? என்றெல்லாம் பேசினார். நம்ம வேலையைச் சரியாக செய்யும்போது அவர்களே மரியாதை தருவார்கள்" என்று கூறினார்.

Next Story

நக்கீரன் இணைய செய்தி எதிரொலி; மாற்றுத்திறனாளி ஆசிரியர் நெகிழ்ச்சி!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Nakiran Internet News Echo; Disabled teacher flexibility

தான் பார்வை மாற்றுத்திறனாளியாக இருப்பதால் நல்ல நூல்களைப் படிக்க ஆசைப்பட்ட போதெல்லாம் படிக்க முடியாமல் போனது. ஆனால் அந்த நூல்களைப் படித்தறிய வேண்டும் என்ற வேட்கை மட்டும் குறையவில்லை. பின் நாட்களில் அச்சு நூலை மின்னூலாக மாற்றும் தொழில்நுட்பம் வந்தவுடன் தான் படிக்கும் காலங்களில் படிக்க முடியாமல் விட்ட அத்தனை நூல்களையும் படித்து மகிழ்ந்த சிலட்டூர் அரசுப் பள்ளி தமிழாசிரியர் பொன்.சக்திவேல். தான் படித்தால் மட்டும் போதாது என்றெண்ணி அச்சு புத்தகங்களை மின்னூலாக மாற்றி பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுத்து வருகிறார். வாசிக்கத் துடித்த அத்தனை பேரையும் வாசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை கலைஞரின் நெஞ்சுக்கு நீதி உள்பட சுமார் 1000 புத்தகங்களை சுமார் 10 லட்சம் பக்கங்களை மின்னூலாக்கி நண்பர்களுக்கும் கொடுத்திருக்கிறார் என்ற அவரது முகநூல் பதிவைப் பார்த்துத் தொடர்ந்து அவரிடமும் சில தகவல்களைப் பெற்று நக்கீரன் இணையத்தில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த கட்டுரை தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சகம் வரை சென்று நெகிழ வைத்துள்ளது. மேலும் அவரை பாராட்டவும் செய்துள்ளது. 

Nakiran Internet News Echo; Disabled teacher flexibility

இது பற்றி பொன்.சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு இதோ, “தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பார்வையற்றோருக்கு மின்னூலாக மாற்றித்தரும் எனது பணி பற்றிய செய்தியைப் படித்திருக்கிறார். அவரது அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் என் பள்ளிக்கே வந்து என்னைக் கௌரவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் காணொளி அழைப்பின் வாயிலாக எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வாசித்துக் காட்ட ஆள் இல்லாமல் கல்லூரி காலங்களில் நான் சிரமப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, வளர்ந்து வந்த தமிழ் ஓ.சி.ஆர்  தொழில்நுட்பம், ஜே.ஆர்.எஃப் தொகையில் வாங்கிய உயர் ரக ஸ்கேனரும் மின்னூலாக்கத்திற்கு உதவி செய்தன. அது என் வாசிப்பிற்கான பாதையைத் திறந்தது. என்னைப்போலவே, அச்சு நூல்களைப் படிக்கச் சிரமப்படும் பார்வை மாற்றுத் திறனாளிகள் அச்சுனூலை வாங்கி அனுப்பி வைத்தால் மின்னூலாக மாற்றித் தருகிறேன் என்று அறிவித்த பொழுது, பல பார்வை மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வாசிப்பு நெடுஞ்சாலையாக அது விரிந்தது. வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியோடு இப்பணியை செய்து வந்தேன். அறிவார்ந்த நண்பர்கள் அரிய நூல்களின் அறிமுகம் என இதன் வாயிலாக நான் பெற்ற பயன்கள் ஏராளம். அதைத் தாண்டி அங்கீகாரத்தை பற்றியெல்லாம் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. 

Nakiran Internet News Echo; Disabled teacher flexibility

எனது முகநூல் பதிவொன்றைப் பார்த்துவிட்டு புதுக்கோட்டை நிருபர்களான பகத்சிங், சுரேஷ் அதனைச் செய்தியாக வெளியிட எனது மின்னூல் உருவாக்கம் தொடர்பான விவரங்கள் குறித்துக் கேட்டனர். விவரங்களைச் சொல்லும்போது இந்தச் செய்தி பத்தோடு பதினொன்றாகக் கடந்து சென்றுவிடும் என்றுதான் மனதிற்குள் நினைத்தேன். செய்தி வெளியான பிறகு, அதனைப் பார்த்துவிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு வாழ்த்தினர். பத்திற்கும் மேற்பட்டோர் எனது என்னைக் கண்டறிந்து தொலைப்பேசியிலும் நேரடியாக அழைத்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். அனைத்திற்கும் உச்சமாக இது அரசின் கவனத்தையும் எட்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் எண்ணி இத்தருணத்தில் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போயிருக்கிறேன் நண்பர்களே.

கொஞ்சக் காலமாகவே முகநூலைக் கரித்துக்கொட்டிக்கொண்டிருந்தாலும் இத்தகைய நிகழ்வுகள் நடக்கக் காரணமான முகநூலுக்கு இன்று நன்றியைக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி உலக சாதனையாளர்களை உருவாக்கும் சின்னக் கிராமம் என்பதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது. முதலில் தடகள வீராங்கனை சாந்தி, அடுத்து பொன்.சக்திவேல் ஆசிரியர், அடுத்து இன்னும் பலரை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.