ஜூலை 15, ஏழை பங்காளர், கல்விகண்திறந்தவர், கர்மவீரர் என போற்றப்படும் காமராஜரின் 116-வது பிறந்தநாள் விழாவை இன்று கல்வி திருநாளாக அனுசரித்து வருகிறோம். எவ்வளவோ தியாகங்களை அர்ப்பணித்து, தனிமனித ஆசைகள், ஆடம்பரங்களை தவிர்த்து மக்களின் கல்விக்கும், நாட்டின் வளத்திற்கும் முக்கியத்துவம் அளித்த ''கிங்மேக்கர்'' வாழ்வில் நடந்த ஒரு சிறிய சம்பவம் இது,
இரவில் நீண்ட நேரம் விழித்துக் கொண்டிருப்பார் கர்மவீரர் காமராஜர் என்பது எத்தனை சரியோ, அத்தனை சரியான விஷயம் படுத்தவுடனேயே அவர் தூங்கிவிடுவார் என்பதும். காரில் எங்காவது நெடுந்தூரப் பயணம் என்றால் காரின் பின் சீட்டில் அப்படியே சுருட்டிக் கொண்டு படுத்து விடுவது அவரது வழக்கம். வெளியூர் சுற்றுப்பயணம் முடிந்த அவர் அப்படித் திரும்பிக்கொண்டிருந்தார் ஒரு சமயம்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் தனது கார் அப்படியே நிற்பதும் ஏராளமான கார்களின் ஹாரன்கள் ஒலிப்பதும் அவரை விழிப்படையச் செய்தன. எழுந்து வெளியே பார்த்தார் காமராஜர், சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம். (அப்போது மர்மலாங் பாலம்)-
"டிராபிக் ஜாம் ஆகியிருந்தது. முன்னால் பார்த்தார் காமராஜர், "நடுப்பாலத்தில் ஒரு லாரி பிரேக் டவுன்' ஆகியிருந் தது. ஒரே ஒரு டிராபிக் போலீஸ்காரர் போக்குவரத்தை சரிபடுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
தான் ஒரு முதலமைச்சர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு உடனே காரை விட்டு இறங்கி, தானும் அந்தப் போலீஸ்காரரோடு உதவியாக இருந்து போக்குவரத்தை சரிபடுத்திவிட்டே மறுபடியும் காரில் ஏறினார் காமராஜர். அதுமட்டுமல்ல... பொறுப்போடு சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் “"அதுபோன்ற இடங்களில் இன்னொரு வரைக் கூடுதலாகப்போட்டால் என்னண்ணேன்ன'' என்று கண்டித்து விட்டும் வந்தாராம்... இப்படியெல்லாம் தமிழகத்தில் முதல்வர் இருந்தார்கள்... அது ஒரு காலம். இப்படி காலம் போற்றும் மனிதராக வாழ்ந்து மறைந்து மன்னிக்கவும் நம் மனங்களில் மலர்ந்து நிற்பவர்தான் நமது காமராஜர் ஐயா.