Skip to main content

பிறந்த குழந்தைக்கு கரோனா! -சென்னை கோஷா மருத்துவமனை அவலம்

Published on 09/07/2020 | Edited on 09/07/2020
govt

 

கரோனா நோயாளிகளிடம் சுகாதாரத் துறையும் மருத்துவமனையும் காட்டிவரும் அலட்சியம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் பிரபல கோஷா மருத்துவ மனையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் மிகமிக அலட்சியாமாகக் கையாளப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

 

அங்கே கரோனா பாஸிட்டிவ் ஆன பெண்களுக்காக சிறப்பு வார்டு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு கரோனா தாய்மார்களுக்குப் பிறக்கும்  சிசுக்ளைத் தனியாக பாதுகாப்பான தூரத்தில் வைத்துப் பராமரிக்காமல், தொற்றுள்ள தாயருகிலேயே வைத்திருக்கிறார்கள். இதனால் சிசுக்களும் கரோனாத் தொற்றுக்கு ஆளாகி, ஆபத்தைச் சந்தித்து வருகின்றன என்கிறார்கள் பலரும்.

 

இது குறித்து நம்மிடம் பேசிய கார்த்திகேயன் “எனது நண்பரின் மனைவிக்கு கரோனா பாதித்த நிலையில், அவரை பிரசவத்துக்காக கோஷா மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே மருத்துவர்களைத் தவிர அனைத்துப் பணியாளர்களும், பாதுகாப்புக் கவச உடைகள் அணியாமல் வெறும் மாஸ்க்கும் கிளவுஸும் போட்டுக்கொண்டு நோயாளிகளிடம் சென்று வந்துகொண்டு இருந்தார்கள்.

 

அதைவிடவும் கொடுமை என்னவென்றால் கரோனா வார்டுகளில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் எளிதாகப் போய் வருவதைப் பார்த்ததும் அதிர்ந்து போனோம். வார்டுக்குள் போய்வரும் நோயாளிகளின் உறவினர்கள், சகஜமாக வெளியே தேநீர்க்கடைகள் வரை நடமாடுவதன் மூலம் நோய் பரவுமே என்ற கவலை அங்கே யாருக்கும் இல்லை.

 

சில கரோனா கர்ப்பிணிகளுக்கு அருகில் விதிமுறைகளுக்கு மாறாக, அவர்களது தாயாரோ மாமியாரோ இருந்து உதவிக்கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில், என் நண்பரின் மனைவிக்கு கடந்தவாரம் குழந்தை பிறந்தது. 

 

corona issue

 

பிறந்த குழந்தையை உடனே தாயிடம் இருந்து விலக்கி வைக்காமல் அருகிலேயே வைத்துவிட்டார்கள். அதனால் குழந்தைக்கும் தொற்று ஏற்படுமோ என்று என் நண்பரும் அவர் மனைவியும் கலக்கமடைந்தார்கள். அவர்கள் பயந்தது போலவே அடுத்த இரண்டொரு நாளில் குந்தைக்கும் கரோனா என்று சொல்லிவிட்டார்கள். தாய்ப்பால் மூலம் சிசுக்களுக்கு கரோனா பரவாது என்றாலும், தாயின் எச்சில், மூச்சுக் காற்று, தும்மல் போன்றவற்றால் சிசுக்களுக்கு கரோனா பரவாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.

 

இப்போது  நண்பரின் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் மருத்துவமனையின் அலட்சியம்தான் என்று கருதத் தோன்றுகிறது. இனி குழந்தையின் உயிருக்கு ஆபத்து வந்துவிடக்  கூடாதே என்று பயந்துகொண்டு இருக்கிறோம்” என்கிறார் கவலையாய்.  

 

இதேபோல் வேளச்சேரி ஏரிக்கரை வீட்டு வசதிக் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தொண்டை வலியோடு, வாசத்தை உணரும் திறனும் குறைந்ததால், கிண்டியில் இருக்கும் கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு கரோனா பரிசோதனைக்காகப் போயிருக்கிறார். அவர்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குப் போகும்படி கைகாட்ட, அவர் நேராக வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.

 

http://onelink.to/nknapp

 

ஆனால் மறுநாளே மாநகராட்சி அலுவலர்கள் அவர் வீட்டு முகப்பில் கரோனா நோயாளி என அடையாளப் படுத்தும் ஸ்டிக்கரை ஒட்டியிருக்கிறார்கள். அவர்கள் கிங் இன்ஸ்டியூட் நுழைவு கேட்டில் கொடுத்த முகவரியை வைத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த நபர்,  தனக்கு டெஸ்டே எடுக்கப்படவில்லை என்று சொன்ன பிறகு அவர்கள் திரும்பிச் சென்றாலும், அடுத்தடுத்த இதேபோன்ற டீம்கள் அடிக்கடி வந்து பீதியூட்டுகிறதாம். இனியாவது உரியவர்கள் கவனம் கொள்வார்களா? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்தும் பலருக்கு வாழ்வளிக்கும் முதியவர்; மரியாதை செலுத்திய அரசு

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
State Honors at Funeral of Organ Donors in Trichy

தமிழகத்தில் இறந்த பிறகும் தமது உறுப்புகளை வழங்கி பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கும் நபர்களின் இறுதிசடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த வீரப்பன்(80) என்பவர் வாகன விபத்தில் சிக்கி திருச்சி அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவரது  கல்லீரல் கார்னியா, தோல் தானமாக பெறப்பட்டது.  வீரப்பன் உடலுக்கு ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி,  மருத்துவமனை முதல்வர் நேரு,  எம்.எஸ்.அருண் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  அதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று ராயல் சல்யூட் வைத்து வேனை வழியனுப்பி   வைத்தனர்.

கடந்த 2007 - 2008 ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் இந்த  உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது.  உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது. சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் இவற்றில் ஒரு பகுதியை தானமாகத் தரலாம்.  விபத்துகளின்போது மூளைச் சாவு அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும். கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.   நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும் கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.

Next Story

ஆமணக்கு காய்களைச் சாப்பிட்ட மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Government hospital treats students who ate castor beans

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தில் அரசு நிதி உதவி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நேற்று(15.2.2024) மாலை பள்ளி முடிந்த பின்பு மாணவர்கள் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதரில் இருந்த காட்டு ஆமணக்கு செடியில் உள்ள காய்களை மாணவர்கள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பள்ளி நேரம் முடிந்து இரவு வீட்டிற்குச் சென்ற மாணவர்களுக்கு லேசான வயிற்று வலி வந்துள்ளது. இதனையடுத்து மாணவர்களிடம் விசாரித்த பெற்றோர் மாணவர்கள் காட்டு ஆமணக்கு காய்களை சாப்பிட்டது தெரிய வந்தது. அதைக்கேட்டு அதிர்ச்சியான பெற்றோர்கள் அழுதபடி பிள்ளைகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். 

எட்டு மாணவர்களையும் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு தற்போது 8 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.