மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏற்றியதில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி அரசுக்கு எதிராக தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக விசிக மத்தியச் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்லத்துரையிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக உ.பி-யில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது அங்கு வந்த பாஜக நபர்கள் அமர்ந்திருந்த கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இது அரச பயங்கரவாதமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மாநிலத்தை நடத்த தகுதியற்ற முதல்வராக யோகி ஆதித்யநாத்தை நான் பார்க்கிறேன். இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக எப்போதும் இருந்ததில்லை என்பது தற்போது மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த போராட்டம் 10 மாதங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம். குறிப்பாக வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை மத்திய அரசு நினைத்திருந்தால் எப்போதே நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதை ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை.
அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக கருதுகிறேன். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அங்கே வருவதாக தெரிந்துகொண்ட விவசாயிகள் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு அவருக்கு எதிராக விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அங்கு வாகனத்தில் வந்த அவரது மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றியுள்ளார்கள். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் அமைச்சரின் மகன் இதுவரை கைது செய்யப்படவில்லை. மாநில முதல்வரும் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் சிலர் அந்த காரின் மீது கல் எறிந்ததால், ஓட்டுநர் நிலைதடுமாறி வாகனத்தை ஓட்டினார் என்று சொல்லப்படுவதை பற்றி?
போராட்டம் என்பது ஜனநாயகப்பூர்வமானது, அந்த வண்டியில் இருந்தவர் மத்திய அமைச்சரின் மகன், யாரோ ஒருவர் கார் ஏற்றி செல்லவில்லை. கார் எரிக்கப்பட்டுள்ளது. வண்டியை ஓட்டியது யார் என்ற கேள்வி வருகிறது. தவறு இழைத்தவர்களை கைது செய்ய சொல்கிறோம். ஆனால் இதுவரை செய்யவில்லை. குறைந்த பட்சம் மாநில முதல்வர் அங்கே சென்று பார்த்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த பக்கம் கூட அவர் செல்லவில்லை. சமூக வலைதளங்களில் உங்களை கழுவி ஊற்றுகிறார்கள். மோடியே பதவி விலகு என்று டிரெண்ட் செய்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மற்ற நாட்டு மக்கள் இதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதை அவர்கள் அவமானமாக நினைக்க மாட்டேன் என்கிறார்கள். முதலில் மோடி வாய் திறந்து பேச வேண்டும்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெல்லியில் இருந்து லக்னோ வந்து லக்கிம்பூர் அருகே சென்றடைந்த நிலையில் அவர் தங்கிருந்த வீட்டில் அவர் சிறை வைக்கப்படுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை அரசியல் கட்சியை சேர்ந்தர்கள் சந்திப்பது வாடிக்கையான நிகழ்வு தானே? அவரை எதற்காக கைது செய்ய வேண்டும், வீட்டு சிறையில் வைக்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆளும் அரசாங்கம் சரியான முறையில் அணுகவில்லை என்பது தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அவர் போய் பார்ப்பதில் உ.பி அரசுக்கு என்ன வந்துவிடப் போகிறது. அடுத்த நாள் முலாயம் சிங் வருகிறார், சத்தீஷ்கர் முதல்வர் வருகிறார், யாரையும் சந்திக்க அனுமதிக்க முடியாது என்கிறீர்கள், உங்களுக்கு மடியிலே கணம் இருப்பதால்தான் அவர்களுக்கு தடை விதிக்கிறீர்கள்.
உடனடியாக கலவரம் நடந்தால் மாநில அரசை விசாரணை செய்யத்தானே சொல்ல வேண்டும், நீங்கள் ராஜினாமா செய்ய சொல்லலாமா? என்று கேட்கிறீர்கள். உங்கள் கேள்வியில் நியாயம் இருப்பாதகவே எடுத்துக்கொள்கிறேன். ஆனால் ஹரியானா முதல்வர் பாஜக விவசாயிகள் அணி கூட்டத்தில் பேசுகிறார், " நீங்களும் அணி திரளுங்கள், போராடும் விவசாயிகளுக்கு எதிராக நில்லுங்கள், முடிந்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டையால் அடியுங்கள்" என்கிறார். இதை எப்படி பார்ப்பது. இவர்கள் இந்த விவசாயிகளுக்கு ஏதாவது நல்லது செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? இந்த நாட்டில் இருக்கும் மீதி விவசாயிகளையும் இவர்கள் கொல்லத்தான் பார்ப்பார்கள். அவர்களிடம் இருந்து நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.