1934ல் சேகுவேராவின் தாய் செலியாவுக்கு நான்காவது குழந்தை பிறந்தது. அன்னா மரியா என்ற அந்தக் குழந்தை மீதுதான் குவேராவுக்கு பாசம் அதிகம். அவனுக்கு ஆஸ்த்மா தாக்கிவிட்டால், அந்தக் குழந்தையை அணைத்து தனது இளைப்பை தணித்துக் கொள்ள முயற்சி செய்வான்.
ஆஸ்த்மா பிரச்சினையால் குவேராவுக்கு வீட்டிலேயே தொடக்கக் கல்வி அளிக்கப்பட்டது. தாய் செலியாதான் டீச்சர். இது, தாய்க்கும் மகனுக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. பரந்துபட்ட அறிவு, எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம், எல்லோருடனும் ஒரே மாதிரி பழகும் தன்மை எல்லாம் தனது தாயிடமிருந்து குவேராவுக்கு ஒட்டிக்கொண்டது.
பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் அவனுக்கு பாடம் எடுத்தார். அவனை மிகப்பத்திரமாக பொத்தி வளர்த்தார்.
1941ஆம் ஆண்டுதான் குவேரா பள்ளிக்கு அனுப்பப்பட்டான். கோரடோபா நகரில் உள்ள மேனிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டபோது அவனுக்கு வயது 13.
அவனுடைய படிப்பார்வம் விரிவடைந்தது. வீடுமுழுக்க அவனுடைய அப்பாவும் அம்மாவும் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களுக்குள் புதையத் தொடங்கினான்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், சிக்மண்ட் பிராய்டு ஆகியோரின் நூல்கள் அப்போதே அவனுக்கு மிக நெருக்கமாகி இருந்தன.
குவேரா புத்தகங்களைத் தேடி அலையத் தொடங்கினான். மகனின் ஆர்வத்துக்கு தீனிபோட தாயும் தந்தையும் தயாராக இருந்தார்கள்.
சிலி நாட்டு புரட்சிக் கவிஞர் பாப்லோ நெரூடாவை அவன் ரசிக்கத் தொடங்கினான். அவரை மானசீகமாக நேசிக்கத் தொடங்கினான்.
சிலி நாட்டின் கம்யூனிஸ்ட் சிந்தாந்தவாதியான பாப்லோ நெரூடா காதல் கவிதைகளையும், எழுச்சிக் கவிதைகளையும், சிலி நாட்டின் வரலாற்றைப் பதிவு செய்யும் புதினங்களையும், அரசியல் அறிக்கைகளையும் எழுதிக் குவித்தவர்.
பள்ளியில் அவனுக்கு தாமஸ் கிரனடா என்ற நண்பன் கிடைத்தான். அவனுடைய அப்பா ரயில்வேயில் கண்டக்டராக வேலை செய்தார். தொழிற்சங்கத்திலும் இருந்தார்.
அவனுடைய அண்ணன் ஆல்பர்ட்டோ கிரனாடா பயோ கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்தான். குவேராவை விட ஆறுவயது மூத்தவன்.
நீண்ட மூக்கு, ஏராளமான முடி, நகைச்சுவையான பேச்சு, கால்பந்து விளையாட்டில் திறமை என்ற வேறுபட்ட கலவையுடன் இலக்கியமும் பேசுவான்.
குவேராவுக்கு தாமஸை விட, அவனுடைய அண்ணனின் நட்பு அவசியமாகப் பட்டது. கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த ஆல்பர்ட்டோவிடம் தன்னையும் அணியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டான். ஒல்லியான நலிந்த தோற்றமுடைய குவேராவை சேர்க்க யாரும் அனுமதிக்கவில்லை.
ஆனால், குவேராவின் ஆர்வத்தைப் பார்த்த ஆல்பர்ட்டோ, அவனை அணியில் சேர்த்தான். முதல் இரண்டு நாட்கள் தடுமாறிய அவன் மூன்றாவது நாள் பந்தை எதிரணியிடமிருந்து கடத்திப்போன விதமும், பந்தை அவன் உதைத்த விதமும் ஆல்பர்ட்டோவை அசத்திவிட்டது.
ஒருநாள் குவேரா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவனது அப்பாவும் அம்மாவும் மற்ற இரு குழந்தைகளுடன் அவனை எதிர்பார்த்து ஹாலில் அமர்ந்திருந்தனர். குவேரா களைத்துப் போயிருந்தான். உடலெல்லாம் அழுக்குப் படிந்திருந்தது.
“குவேரா கொஞ்சம் இரு.”
அப்பா சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தது. குவேரா தயக்கத்துடன் அவரருகில் அமர்ந்தான்.
“குவேரா, நீ விளையாடுவதில் எங்களுக்கு பெருமைதான். ஆனால், உனக்குள்ள நோயின் தீவிரம் எங்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. தயவுசெய்து வேறு விளையாட்டில் கவனம் செலுத்தக்கூடாதா?”
குவேராவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தனது நோயின் தன்மையை அவன் பலமுறை அனுபவித்திருந்தான்.
“சரி அப்பா. இனி நான் உங்களுக்கு கவலை தரும்வகையில் நடந்துகொள்ள மாட்டேன்” என்று பதிலளித்தான்.
அதன்பிறகு அவனுக்கு செஸ் விளையாட்டை சொல்லிக் கொடுத்தார். செஸ் போர்டில் அவன் காய் நகர்த்தும் திறன் விரைவிலேயே வெளிப்படத் தொடங்கியது. அப்பாவையும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் எளிதில் தோற்கடித்தான்.
இந்தக் காலகட்டத்தில் நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள மலைச்சரிவில் தனக்கென வீடுகட்டினார் எர்னஸ்டோ.
இந்த வீடு அமைந்த பகுதியில் சாதாரண மக்கள் வசித்து வந்தனர். புதிய புதிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு குடும்பத்தினருக்கு கிடைத்தது. மனிதர்களை வேடிக்கை பார்ப்பது, அவர்களுடைய குணங்களை பகுத்து ஆய்வது குவேராவுக்கு பழக்கமாகியது.
சைக்கிளில் தெருவிலிருந்து வீட்டுக்குள் நுழைந்து பின்வழியாக மீண்டும் வீதிக்குச்செல்லும் வகையில் குழந்தைகளுக்குச் சுதந்திரம் இருந்தது.
கால்பந்து விளையாடுவதில் முன்புபோல குவேரா ஆர்வம் காட்டுவதில்லை. இது நண்பன் ஆல்பர்ட்டோவுக்கு வியப்பை அளித்தது.
“ஏண்டா, கிரவுண்டுக்கு வர மாட்டேங்கற?”
“ஆஸ்த்மா இருக்கதால, விளையாட வேண்டாம்னு சொல்லிட்டாங்க”
“அவங்க சொல்லிட்டா...”
“நான் விளையாட மாட்டேன்னு சொல்லிட்டேன். அவ்வளவுதான்.”
“அதுக்காக கிரவுண்ட் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டியா?”
அப்புறம் மாலை நேரத்தில் கால்பந்து மைதானத்திற்கு வருவான். மைதானத்தின் இரும்பு போஸ்ட் ஒன்றில் சாய்ந்து படிக்கத் தொடங்கிவிடுவான். முதலில் பாடப் புத்தகங்களைப் படிப்பதாகத்தான் ஆல்பர்ட்டோ நினைத்தான். ஒருநாள், அவன் என்ன படிக்கிறான் என்று பார்ப்பதற்காக வந்தான்.
குவேரா கையில் இருந்தது பிராய்டின் புத்தகம். தான்தான் பெரிய படிப்பாளி என்று அதுவரை ஆல்பர்ட்டோ நினைத்திருந்தான். அந்த நினைப்பு தகர்ந்து விட்டது. தன்னைவிட ஆறுவயது சின்னவன் பிராய்டைப் படிக்கிறான் என்பது அவனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.
பிறகு அவனுடன் பேசும்போதுதான் தெரிந்தது அவன் எவ்வளவு ஆழமாக படித்திருக்கிறான் என்பது. அவனுடைய அறிவுத்திறன், ஆல்பர்ட்டோவுக்கு மட்டுமல்ல, பள்ளி ஆசிரியர்களுக்கும் அவன்மீது தனி பிரியத்தை ஏற்படுத்தியது.
பள்ளி நாட்களில் டேக்கிள் (எதிர்த்து போராடு) என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தினான். அதில் சாங்சோ என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினான்.
குவேராவின் மாமா ஜோர்ஜ் விமானியாக இருந்தார். அவருடைய உதவியுடன் விமானம் ஓட்டிப் பழகினான்.
அதேசமயம், உள்ளுக்குள் தான் யார் என்கிற கேள்வி அவனை உறுத்திக்கொண்டே இருந்தது. அடையாளமே இல்லாமல் வாழ்வதற்கு மனம் ஒப்பவில்லை. தன்னைச் சுற்றியுள்ள உலகம் பரந்துகிடக்கிறது. ஆனால், தான் மட்டும் ஒரு சிறிய கூட்டுக்குள் அடைந்து கிடப்பது போல அவன் உணர்ந்தான். தான் படித்த புத்தகங்களில் படித்த விஷயங்கள், அவற்றை எழுதியவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன…
(நான் எழுதிய அணையா பெருநெருப்பு என்ற சேகுவேராவின் வாழ்க்கைக் கதையிலிருந்து…)