Skip to main content
Breaking News
Breaking

என்ன நடந்தது அதிகாலை 01.55.36 மணிக்கு??? சந்திரயான் -2 ஏவுதல் நிறுத்தப்பட்டதன் பின்னணி!!!

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

இந்தியாவின் கனவுத்திட்டமான சந்திரயான் 2 இன்று (15.07.2019) அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படுவதாக இருந்தது. இதற்கான பணிகள் தொடக்கத்திலிருந்து சரியாக சென்றுகொண்டிருந்தது...
 

chandrayaan 2


கடந்த 2008ம் ஆண்டு, அக்டோபர் 22ம் தேதி, அதிகாலை 12.52 மணிக்கு ஏவப்பட்ட சந்திரயான்-1 தனது பணியை வெற்றிகரமாக முடித்ததையடுத்து, 2009ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்த முடிவுசெய்தது இஸ்ரோ. இதைத்தொடர்ந்து புவியிலிருந்து காணமுடியாத, உலகநாடுகள் இதுவரை செய்திராத, நிலவின் தென் துருவத்தை ஆராயும் பணியை மேற்கொள்வதற்காக சந்திரயான் -2 வடிவமைக்கப்பட்டது. நேராக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சந்திரயான் -2 ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.III என்ற ராக்கேட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. 

சந்திரயான் -2 ஏவப்படுவதற்கான 20 மணிநேர கவுண்டவுன் நேற்று (14.07.2019) காலை 6.51 மணிக்கு தொடங்கியது. அதைத்தொடர்ந்து அவ்வப்போது அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்தது. அதிகாலை 12.16 மணிக்கு ராக்கெட்டில் திரவ ஆக்ஸிஜன் வெற்றிகரமாக நிரப்பட்டது. திரவ ஹைட்ரஜன் நிரப்பும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. 

chandrayaan 2


அதைத்தொடர்ந்து 1.34 மணிக்கு திரவ ஹைட்ரஜன் நிரப்பும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்ற அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து சரியாக அதிகாலை 1.55.36 மணிக்கு கவுண்டவுன் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்த அனைவரும் குழம்பிப்போயினர். மேலும் அந்த இடம் பரபரப்பானது.

இதைத்தொடர்ந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும், காரணம் என்ன எனக் கூறப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏவுகணையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக சந்திரயான் -2 ஏவப்படுவது நிறுத்தப்படுகிறது. இன்று சந்திரயான் -2 ஏவப்படாது, விரைவில் வேறொரு நாளில் சந்திரயான் -2 ஏவப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.