திமுகவில் அதிர்ப்தியில் இருக்கும் மூத்த தலைவர்கள் மூன்று பேருக்கு பாஜக தலைமை வலை விரித்துள்ளது. கவர்னர் பதவி மற்றும் தேசிய அளவில் கேபினெட் அந்தஸ்துள்ள பதவி தருவதாக அவர்களை நோக்கி தூண்டில் வீசியபடி இருக்கிறது.
பாஜக தேசிய தலைமையின் உத்தரவின் பேரில் அதிர்ப்தி தலைவர்களிடம் இந்த தூண்டிலை வீடிக்கொண்டிருக்கிறார் திமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி. பழைய நட்புடன் மிக ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
குறிப்பாக, அந்த பேச்சுவார்த்தையில், ’’தமிழகத்தில் ஆட்சியை திமுக கைப்பற்றிவிட கூடாது என்பதற்கான அனைத்து செயல் திட்டங்களையும் போட்டு வைத்திருக்கிறது பாஜக தலைமை. இதனையும் மீறி திமுக ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வரானால், உங்களைப் போன்ற சீனியர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கப்போவதில்லை. இளம் தலை முறையினருக்குத்தான் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கும் வகையில்தான் இப்போதே திட்டமிடுகிறார்கள்.
தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களைப் போன்ற ஓரிருவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டாலும் வலிமையான இலாகா ஒதுக்கப்படாது. அதனால் இப்போதே சுதாரித்துக்கொள்ளுங்கள். ஆட்சியை கைப்பற்றும் சூழலில், திமுகவில் புதிதாக உருவாகியுள்ள அதிகார மையத்தை மீறி உங்களால் (சீனியர்கள்) அரசியல் செய்வது கடினம். அதனால், பாஜகவுக்கு வாருங்கள் ; மரியாதையும் முக்கியத்துவமும் உள்ள அதிகார பதவி உங்களுக்கு கேரண்டி‘’ என்கிற ரீதியில் வலை விரிக்கப்பட்டுள்ளது.