இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், கோயில் சன்னதி முன்பாக பக்தர்கள் தரையில் விழுந்து வணங்கும் முறையைத் தெரிவிக்கும் பித்தளைத் தகடு ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நூறு வருடப் பழமையான செப்புத்தகடு பற்றியும் அதன் விபரங்கள் பற்றியும் தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் பிரியா கிருஷ்ணன் கூறியதாவது, "திருப்பெரும்புதூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் பிரதான நுழைவு வாயிலின் கொடிமரத்தின் வலது புறத்திற்கு சற்றுத்தள்ளி பிரகாரத்தில் பக்தர்கள் தரையில் விழுந்து வணங்கும் முறை மற்றும் திசையை குறிப்பிடும் வண்ணம் ஒரு பித்தளைத் தகடு பதிக்கப்பட்டுள்ளது. இத்தகட்டில் ஆண் மற்றும் பெண் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் வரைபடம் வரையப்பட்டுள்ளது. இதில் ஆண் உருவம் இடது புறமும், பெண் உருவம் வலது புறமும் உள்ளது. ஆண் உருவத்திற்கும் பெண் உருவத்திற்கும் இடையில் தமிழில் எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன.
விழுப்புரம் தாலுகா எளயாண்டப்பட்டு ஒடையவர் சொர்ணசூபிவிமான கையிங்கிரியம் 22.8.1912 என்றும், ஆண் உருவத்திற்கு கீழே அய்யா சாமிபிள்ளை என்றும், பெண் உருவத்திற்கு கீழே கோகிலாம்மாளம்மா என்று எழுதப்பட்டுள்ளது. இதே கோயிலில் ராமர் லட்சுமணன் சீதை தனி சன்னதியின் முன்னும் அந்த தகட்டில் இருப்பதை போல் தரையில் கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ள விழுந்து வணங்கும் ஆண், பெண் உருவங்களும் அதன் விபரமும் எழுதப்பட்டுள்ளது. ஆண் உருவம் வலது புறமும் பெண் உருவம் இடது புறமும் உள்ளது. இதில் முதல் மூன்று வரிகள் சிதைந்துள்ளது. அதனால் ஆண்டு குறித்து அறிய இயலவில்லை. இந்த ஆண், பெண் உருவங்களுக்கு மத்தியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. 23 தேய்ந்த மண்டபதள வரிசை கயிங் கர்யதாஸன்னா கிசெட்டி றாமசாமி னாயுடு அவர் பார்யாள்னாகவல்லி அம்மா என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
"இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாப்பது அவசியமாகும். மக்கள் அதன் மீது தொடர்ந்து நடப்பதால் அதிலுள்ள எழுத்துகள் அழிந்து வருகின்றன. இதனால் விபரங்கள் வாசிக்க இயலாமலேயே போய்விடக்கூடும். இவ்வாறான பகுதிகளை அரசு தனிக் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்" என்று தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் முனைவர் பிரியா கிருஷ்ணன் தெரிவித்தார்.