Skip to main content

பா.ஜ.க.வின் புதிய ஆபரேஷன்! - லிஸ்டில் 9 அமைச்சர்கள்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

BJP's new operation! 9 ministers in the list

 

5 மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பிஸியாக இருந்தாலும், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு எதிரான ஆபரேசன்களை செய்வதிலும் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி டெல்லியில் போடப்பட்டுள்ள திட்டம் ‘செம ஹாட்’ என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள். 

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகள், “சமீபத்தில் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் சீரியஸாக எடுத்துக்கொண்டது. சம்பவம் குறித்து ஆளுநர் ரவியிடம் விசாரித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியிருப்பதாகவும், ராஜ்பவனுக்கே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார் ஆளுநர். இதனையடுத்து, ராஜ்பவனுக்கு எதிரான தாக்குதலில் நடந்தது பற்றிய முழு ரிப்போர்ட்டை மத்திய உளவுத்துறையிடமிருந்து வாங்கியிருக்கிறார் அமித்ஷா.

 

BJP's new operation! 9 ministers in the list

 

ஏற்கனவே, தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழல்கள் குறித்து தனித்தனியாக கோப்புகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆளுநரும், ஐ.பி.யும் அனுப்பும் ரிப்போர்ட்டுகள் கனமாகிக்கொண்டே வருகின்றன. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி தமிழகத்திற்கான ‘நவரத்னா’ ஆபரேசனை கையிலெடுக்க டெல்லியில் திட்டமிடப்படுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிந்ததும் இந்த திட்டத்தின் விளைவுகள் தமிழகத்தில் எதிரொலிக்கும்” என்கிறார்கள்.

 

இத்தகைய அதிர்ச்சித் தகவல்கள் குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, “அரசியலாக இருந்தாலும் சரி, சனாதனத்தை நிலை நிறுத்துவதாக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கொள்கை என்பது நீண்டகால திட்டமாகத்தான் இருக்கும். குறுகிய கால திட்டமாக எப்போதும் இருக்காது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் என்ன நடக்க வேண்டுமோ அதற்காக இப்போதிலிருந்தே திட்டமிட்டு காய்களை மெல்ல நகர்த்துவது ஆர்.எஸ்.எஸ்.ஸின் அஜெண்டாவாக இருக்கும்.

 

BJP's new operation! 9 ministers in the list

 

அந்த வகையில், தமிழகத்தில் 2026ல் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென 2016ல் ப்ளான் போட்டன ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைமைகள். அதற்கேற்ப, தமிழகத்தின் அரசியல் ஆளுமைகளான ஜெயலலிதாவும், கலைஞரும் மறைந்ததைத் தொடர்ந்து அந்த திட்டத்துக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டது. அதன் ஒரு கட்டமாகத்தான் தமிழக அரசியலில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.ஸை வைத்துக்கொண்டு அரசியல் விளையாட்டை மெல்ல... மெல்ல ஆரம்பித்தனர். அந்த வகையில், அவர்கள் போட்டு வைத்த அரசியல் திட்டத்தில் தற்போது வரை 50 சதவீதத்தை கடந்துவிட்டதாகக் கருதுகின்றனர். மீதமுள்ள 50 சதவீதத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 25 சதவீதத்தை நிறைவேற்றினாலே போதும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்களின் இலக்கை அடைந்துவிட முடியும் என்கிற இறுமாப்பில் இருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைவர்கள்.

 

நாடாளுமன்றத் தேர்தலின்போது 25 சதவீதம் நிறைவேற வேண்டும் என்கிற அந்த திட்டத்திற்கு டெல்லி வைத்துள்ள பெயர்தான் ‘ஆபரேஷன் நவரத்தினா’. அதாவது, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் இமேஜைப் பற்றி தமிழக மக்களிடம் ஈசியாக பதிய வைக்க வேண்டுமெனில், இரண்டு விசயங்கள் போதும் என நினைக்கிறார்கள் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள். முதல் விசயம், அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகள் ஊழல் நிறைந்தவை என்றும், மக்களிடம் பணப்புழக்கம் இல்லை; ஆனால், மந்திரிகளிடம் பாருங்கள் கோடி கோடியாய் குவிந்து கிடக்கிறது. இதெல்லாம் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் பணம் என்றும் தமிழக மக்களிடம் பதியவைப்பது.

 

BJP's new operation! 9 ministers in the list

 

இரண்டாவது விசயம், ஓட்டுக்கு பணம் கொடுப்போம் என மக்களை திராவிட கட்சிகள் கரப்ட்டாக்கி வைத்திருப்பதால், ஓட்டுக்கு பணம் கொடுக்க திராவிட கட்சிகள் சேமிக்கும் கோடிகளை கொள்ளையடிப்பதன் மூலம் தடுப்பது என்றும், ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படவில்லையெனில் மக்களின் மனம் மாறும் என்பதும்தான் இரண்டாவது விசயம். இதற்காக தங்களின் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது டெல்லி.

 

உதாரணமாக, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அப்போது தமிழக முதல்வராக இருந்த தங்களின் கூட்டணி பார்ட்னரான எடப்பாடியை மையப்படுத்தி 2018ல் அதிரடி வேட்டையை நடத்தியது வருமானவரித்துறை. குறிப்பாக, எடப்பாடிக்கு நெருக்கமான நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டரான செய்யாதுரை, அவரது மகன் நாகராஜ், எடப்பாடியின் சம்பந்தி மற்றும் உறவினர்கள் என அவர்கள் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது.

 

BJP's new operation! 9 ministers in the list

 

இதில் கணக்கில் காட்டப்படாமல் குவித்து வைக்கப்பட்ட பல ஆயிரம் கோடிகளை கைப்பற்றியது வருமான வரித்துறை. அன்றைக்கு இந்த ரெய்டுகள் பரபரப்பாக பேசப்பட்டதும், அ.தி.மு.க. கூடாரமே அதிர்ச்சியடைந்ததும் வரலாறு. இதில் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, மோடி மற்றும் அமித்ஷாவிடம் தனது சார்பில் பேசும் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலமாக, ‘நாடாளுமன்றத் தேர்தலுக்காக சேமிக்கப்பட்ட பணம் அது. ரெய்டு என்ற பேரில் அதனை எடுத்துக் கொண்டால் தேர்தலை எப்படி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி எதிர்கொள்ள முடியும்? நம் கூட்டணிதான் எப்படி இயல்பானதாக இருக்கும்?’ என்றெல்லாம் தனது கோபத்தை அப்போது வெளிப்படுத்தினார்.

 

2019 தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், ‘பார்த்தீர்களா… உங்கள் ரெய்டுகள் ஏற்படுத்திய விளைவுகளை’ என கோபமாக டெல்லிக்கு தகவல் பாஸ் பண்ணினார் எடப்பாடி பழனிசாமி. அதே வரலாறுதான் இப்போது தி.மு.க. ஆட்சியின் போதும் திரும்புகிறது. அதற்காக டெல்லியில் போடப்பட்டிருப்பதுதான் மோடியின் ஆபரேஷன் நவரத்னா” என்று விவரிக்கிறார்கள்.

 

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்குவதுதான் மோடி ஆபரேசனின் முதற்கட்டத் திட்டம். அந்த வகையில், ஓட்டுக்கு பணம் கொடுக்க தி.மு.க. சேமித்து வைக்கும் கோடிகளை கைப்பற்றவே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ரெய்டுகள் நடத்தப்படுகின்றன.

 

BJP's new operation! 9 ministers in the list

 

அந்த ரெய்டுகள் மூலம் தி.மு.க. மந்திரிகளும், எம்.பி.க்களும் வைத்திருக்கும் பணத்தை கைப்பற்றி, அதன் மூவ்களை மோடியும் அமித்ஷாவும் தடுத்து வருகிறார்கள்.

 

தி.மு.க.வின் கஜானா எனப்படும் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். மற்றொரு கஜானா என வர்ணிக்கப்படும் எம்.பி. ஜெகத்ரட்சகன் போன்றவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இதற்கிடையே, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்டவர்களின் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிப்பதன் மூலம் தி.மு.க.வுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர். இந்த வழக்குகள் தி.மு.க. அமைச்சர்கள் மீது தொங்கும் கத்திதான்.

 

இப்படிப்பட்ட சூழலில்தான், தி.மு.க. அமைச்சர்களின் ஊழல்களைத் தயாரித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அந்த ஊழல்களில் ஜீரணிக்க முடியாத பெரும் ஊழல்களை செய்தவர்கள் என டெல்லி பட்டியலிட்ட போது அதில் 9 அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். ஆரம்பத்தில் 5 அமைச்சர்கள்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஊழல் விவகாரங்கள் டெல்லிக்கு கிடைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது 9 அமைச்சர்களாக எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

 

BJP's new operation! 9 ministers in the list

 

தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் முதல், முதல் முறை அமைச்சர்கள் வரை 9 பேர் அதில் இடம்பிடித்திருக்கிறார்கள். அந்த 9 அமைச்சர்களுக்கு எதிரான அதிரடிகளை நடத்தத்தான் கோப்புகள் நகர்ந்து வருகிறது. அதற்கான ஆபரேசன் பெயர்தான் நவரத்னா. (நவ என்றால் 9) வடக்கில் நடக்கவிருக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் நவரத்தினங்களுக்கு எதிரான அதிர்ச்சிகள் காத்திருக்கிறது” என்கிறார்கள்.

 

உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “தி.மு.க. அமைச்சர்களின் ஊழல்களை ஏதோ சிரமப்பட்டு மத்திய அரசு சேகரித்ததாக நினைக்கத் தேவையில்லை. தி.மு.க. அரசில் முக்கிய துறைகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே டெல்லிக்கு தகவல்களை கொடுத்து வருகிறார்கள். 10-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லி வளைத்து வைத்திருக்கிறது. இவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு தலையையும், மத்திய அரசுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் தெரியுமா? தெரியாதா? என்பதுதான் புரியாத புதிர்.

 

ஆனால், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் விவகாரங்களை டெல்லி சேகரித்து ஆக்‌ஷன் எடுக்கவிருக்கிறது என்பதை மட்டும் முதல்வர் ஸ்டாலின் தெரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் 31 ஆம் தேதி கூடிய அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் மேலும், அனைவரும் உணரும் வகையில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர்களிடம் கடுமை காட்டும் முதல்வர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும் காட்ட வேண்டும்” என்கிறார்கள் உளவுத்துறையினர்.

 

 

Next Story

'திமுக அதில் அவசரம் காட்டத் தேவை என்ன?' - ஜெயக்குமார் கேள்வி

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
'What is the need for DMK to show urgency in this?'- Jayakumar asked

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பிற்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழ்நிலையில், திமுக தொகுதிப் பங்கீட்டிற்கான இறுதி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே கூட்டணி பிளவு கண்டிருந்த அதிமுக, பாஜக கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சிக்காமல் இருந்த நிலையில், தற்போது மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

முன்னரே கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டாம் என கட் அன்ட் ரைட்டாக பேசியிருந்தார். எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் அதிமுக, பாஜக வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. லேகியம் விற்பனை, வாய்க்கொழுப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் விமர்சனங்களை பாஜகவை நோக்கி வைத்தனர். ஆனால் மாற்றாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அதிமுகவின் தலைவர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரைப் புகழ்ந்து பேசியது மீண்டும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு அடித்தளமிடும் செயல் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

'What is the need for DMK to show urgency in this?'- Jayakumar asked

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ''கூட்டணிக்காக நாங்கள் யாரிடமும் கெஞ்சவில்லை. எங்களைப் பொறுத்தவரை திமுகவில் எங்களுக்காக பயந்து அவசரமாக இறுதிப்பங்கீடு வரை சென்று உடனே ஒப்பந்தம், உடனே கையெழுத்து என வெளியிடுகிறார்கள். இதில் அவசரம் காட்ட வேண்டியதற்கான தேவை என்னவென்றால், திமுகவை விட்டால் அடுத்த ஆப்ஷன் அதிமுகவிற்கு போய்விடுவார்கள். அந்த ஆப்ஷன் எந்த கட்சிக்கும் வரக்கூடாது என்ற அடிப்படையில் பயந்து காலில் விழாத குறையாக கெஞ்சி இன்று அவசர அவசரமாக கூட்டணியை முடிக்கப் பார்க்கிறார்கள்.

இது அவர்களின் தோல்வி பயம் அல்லது எங்கள் மீதுள்ள அச்சத்தால் நிகழும் அவசரத் தன்மையை காட்டுகிறது .தேர்தல் மார்ச் இரண்டாவது வாரத்தில் அறிவிப்பு செய்யப்படலாம். இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது. 10 நாட்கள் இருக்கும் நிலையில் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் 'கத்திரிக்காய் மலிந்தால் கடைத் தெருவுக்கு தான் வந்து தான் ஆக வேண்டும்' என்பதுபோல் யார் யார் எங்கெங்கு ஜம்ப் பண்ணி எங்கெங்கே போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் பத்து நாட்களில் தெரிந்துவிடும். எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவதற்காக நிறைய கட்சிகள் இருக்கிறது. ஆனால், எந்தெந்த கட்சிகள் உள்ளது என இப்போது சொல்வது உசிதமாக இருக்காது. தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் பத்து நாள் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டிப்பாக எங்கள் தலைமை எந்தெந்த கட்சிகள் அதிமுகவுடன் இருக்கிறது என அறிவிப்பார்கள்''என்றார். 

Next Story

குறிவைக்கப்படும் அரசியல் பிரமுகர்கள்; ஒரே பாணியில் நடக்கும் கொலைகள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Targeted political figures! incident in the same style at chengalpet district
                                                         அன்பரசு

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் வேங்கடமங்கலம் முன்னாள் அ.தி.மு.க ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மகன் அன்பரசு (28). இவர் வேங்கடமங்கலம் 9வது வார்டு ஊராட்சி மன்றக் கவுன்சிலராகவும், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க இளைஞர் பாசறை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். 

அன்பரசு, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி கீரப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அன்பரசு வந்த காரை மறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை கார் மீது வீசினர். இதில் காயமடைந்த அன்பரசு மற்றும் அவரது நண்பர்கள் காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது, அந்த கும்பல் அன்பரசுவை மட்டும் விடாமல் துரத்திச் சென்று அரிவாளை கொண்டு அவரை சரமாரியாக வெட்டினர். இதில் அன்பரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி, அந்த மர்ம கும்பலை தேடி பிடித்து கைது செய்தனர். அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரின் மகனும், வேங்கடமங்கலம் 9வது வார்டு ஊராட்சி மன்ற கவுன்சிலருமான அன்பரசுவை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

Targeted political figures! incident in the same style at chengalpet district

இந்த நிலையில், வேங்கடமங்கலம் அ.தி.மு.க ஊராட்சி மன்ற கவுன்சிலர் அன்பரசுவை கொலை செய்ததைப் போலவே, காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் ஒருவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Targeted political figures! incident in the same style at chengalpet district
                                                             ஆராமுதன்

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக ஆராமுதன் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். இவர், வண்டலூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வந்தார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (01-03-24) வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட இருந்தது. இந்த பேருந்து நிலையப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நேற்று (29-02-24) ஆராமுதன் தனது காரில் அப்பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென ஆராமுதன் வந்த கார் மீது வெடிகுண்டை வீசினர். இதில், காரின் முன் பக்கம் கண்ணாடி முழுவதுமாக உடைந்தது.

Targeted political figures! incident in the same style at chengalpet district

இதனால், அதிர்ச்சியடைந்த ஆராமுதன், தனது காரில் இருந்து இறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, அந்த மர்ம கும்பல், தாங்கள் வைத்திருந்த அரிவாளை கொண்டு, ஆராமுதனை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில், அவரது இரு கைகளும் துண்டாகியும், உடலில் உள்ள பல்வேறு இடங்களில் படுகாயமடைந்தும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. 

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள், ஆராமுதனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆராமுதனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், ஆராமுதன் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆராமுதனை கொலை செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, இதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் இதே போன்று கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், திமுக பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.