தமிழகத்திற்கு சில தினங்களுக்கு முன்பு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் வெற்றிடம் நிலவுகிறது. அதனை பாஜக பயன்படுத்தி வரும் தேர்தலில் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்" என்ற தொனியில் பேசியதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம்.
நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " பாஜக தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது. நான்கு ஐந்து பேரை வைத்து அவர்கள் கட்சி நடத்துகிறார்கள். ஏதோ அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அவர்களுக்குத் தேவையான ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. அவர்களும் அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து வருகிறார்கள். அதிமுகவும் தற்போது பிரிந்து கிடப்பதால் இவர்களுக்கு ரொம்ப வசதியாகப் போய்விடுகிறது. ஏனென்றால் அரசியல் ஆட்டங்களைப் பல மாநிலங்களில் பாஜக இதே போன்றே செய்து வருகிறது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளக்கூட எடப்பாடி தரப்பு தயாராக இருக்கவில்லை. பொதுக்கூட்டத்தில் பேசுகின்றபோது நாங்கள் தான் அதிமுக, இங்குப் பிளவு என்பதே இல்லை என்ற தொனியில் அவர் பேசி இருக்கிறார். மேலும் இங்கே வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்தீர்களா என்று கேட்கிறார். 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள் என்கிறார். ஒரு பொதுக்கூட்டத்தில் வந்தவர்களை இவ்வளவு துல்லியமாக எப்படி எடப்பாடி கணக்கெடுத்தார். ஏனென்றால் அவ்வளவு பணம் செலவு செய்துள்ளார். அதனால் இவ்வளவு கூட்டம் வந்திருக்கும் என்ற அடிப்படையில் அவர் கூறியதாகவே இதனைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
அஇஅதிமுக ஐந்து பிரிவாகத் தமிழகத்தில் பிரிந்து கிடக்கிறது. எடப்பாடி, பன்னீர், சசிகலா, தினகரன், அண்ணாமலை என்ற ஐந்து இடங்களில் அதிமுக அலுவலகம் இருக்கிறது. இவர்கள் அனைவரையும் நான் ஏற்கனவே கூறியவாறு மத்திய பாஜக வரும் ஜனவரி மாதம் இணைத்துவிடும். இவர்கள் பிரிந்து கிடப்பதால் பாஜகவுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் கிடைக்கப் போவதில்லை. எனவே இருக்கிற இடைவெளியில் முடிந்த அளவுக்கு பாஜக அரசியல் செய்யப் பார்க்கும், தங்கள் கட்சிக்கு யாரையெல்லாம் இழுக்க முடியும் என்பதையும் பார்க்கும். அதில் நோக்கம் நிறைவேறிவிட்டால் அதிமுகவை இணைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும். அவ்வாறு சந்திப்பதைத் தவிர பாஜகவுக்கு வேறு வழியே இல்லை.
இவர்கள் கூறும் வெற்றிடத்தை இந்த வழியில்தான் அவர்களால் நிரப்ப முடியும். ஆனால் அவர்களும் வெத்துவேட்டாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. இருவரும் நாமத்தைப் போட்டுக்கொண்டு செல்ல வேண்டியதுதான். அமித்ஷா என்ன சொல்கிறார், உங்களை மக்கள் அங்கீகரிக்கவில்லை, அதனால் திமுகவுக்கு பிறகான வெற்றிடத்தை நாம் நிரப்பிட வேண்டும் என்கிறார். இதை எப்படி அதிமுக எதிர்கொள்ளப்போகிறது என்று பார்க்க வேண்டும். நீங்கள் தலைவர் என்று நீங்களாகவே தான் சொல்கிறீர்கள். மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லையே என்று பட்டவர்த்தனமாக அதிமுக தலைமையைப் பார்த்து அமித்ஷா அன்றைக்குக் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.
எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் செல்வாக்கு என்பது இருக்காது. மோடிக்கு என்ன செல்வாக்கு இருக்கிறதா? அடிப்பட்டுத்தானே எழுந்து வந்துகொண்டிருக்கிறார். ஸ்டாலினுக்குச் செல்வாக்கு இல்லை என்று அமித்ஷா கூறுவது உண்மை என்றால் ஏன் ஐந்து வருடம் கழித்து வருவோம் என்கிறார். உடனடியாக வெற்றிபெறுவோம், வரும் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று கூற வேண்டியதுதானே, இவர்கள் வாயை வைத்துக்கொண்டும், அதிகாரத்தைக் காட்டி மிரட்டிக்கொண்டும் அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது நீண்ட காலத்துக்கு நடக்காது என்பது அவர்களுக்கு லேட்டாகத்தான் புரியும்.