பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நக்கீரன் இணையதளத்திடம் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
பணமதிப்பிழப்பு, தவறான சரக்கு மற்றும் சேவை வரிக் கொள்கை, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை தவறாக பயன்படுத்தியது என நாட்டின் பொருளாதாரம் மூன்று செயல்களால் அழிக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறாரே...
ராகுல்காந்தி இப்படி விமர்சனம் செய்வது ஒன்றும் வியப்பில்லை. ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியது ராகுல்காந்திதான். ஊரடங்கை அமல்படுத்திய உடனேயே ஏன் ஊரடங்கை அமல்படுத்தினீர்கள் என்று கேட்டதும் ராகுல்காந்திதான். ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து மிக தகுந்த முறையில் இதுவரை நாங்கள் கூறியிருக்கிறோம். பொருளாதார சீர்திருத்தம் மிகச் சிறப்பான முறையில் எதிர்கால சந்ததியினருக்காக, அடுத்த தலைமுறையினருக்காக உருவாக்கப்பட்ட விஷயங்கள் அக்கட்சியினருக்கு புரியவில்லை என்பதுதான் உண்மை.
மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ஜி.எஸ்.டி. பகிர்வு தமிழகத்திற்கு வரவில்லை என்கிறார்களே...
ஜி.எஸ்.டி. பகிர்வை மத்திய அரசு எப்போதும் முறையாக கொடுத்திருக்கிறது. இந்தியா முழுவதும் தற்போது முடங்கி கிடக்கும் காரணத்தினால் அகில இந்திய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது இழப்பீடு வழங்க முடியாது என்பதினால் நிதி நிலையை சரி செய்து கொள்வதற்கு கடன் பெறுமாறு மத்திய அரசு கூறியிருக்கிறது.
ஜிஎஸ்டியினால் மாநிலங்களின் வருவாய் இழப்புக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் கடன் பெறுவது உள்ளிட்ட மாநிலங்களுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இது முழு துரோகம் எனத் தெரிவித்துள்ளாரே ப.சிதம்பரம்...
இதை சொல்பவர்கள் வேறு என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களிலும் வரி வருவாயை சீராக விதித்து அதன் மூலமாக வரும் வருவாயை வைத்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்து, அதன் பிறகு மத்திய அரசினுடைய நிதி திட்டங்களுக்கு மாநிலங்கள் மூலமாகவே பணம் அளிப்பதுதான் முறை. மத்திய அரசு வசூலிக்கும் வரிகள் மாநிலங்களுக்குத்தான் செலவிடப்படுகிறது. தற்போது வருவாயே இல்லாத நிலையில் எப்படி செலவிட முடியும். இன்று வருவாய் இல்லாத நிலையில் நீங்கள் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்பதில் என்ன தவறு இருக்கிறது.
தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் சிரமத்தை கொடுப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே...
தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதியும், மீதியுள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதத்திலேயும் கட்டணம் வருடா வருடம் விலை உயரும். இதற்கு காரணம், மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்தான். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி இருந்தபோது அரசே என்பது சதவீத சாலைகளை போட்டது. அதன்பிறகு வந்த காங்கிரஸ் அரசு, தனியாரிடம் சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அதற்கான தொகையை 20 வருடம், 25 வருடத்தில் எடுத்துக்கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டது. அவர்கள் போட்ட ஒப்பந்தத்தின்படிதான் இன்று நடக்கிறது. கட்டண உயர்வு என்று யார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அன்று இந்த ஒப்பந்தங்களை வாரி வழங்கியவர்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்புகிறார்கள்.
கரோனா முடிந்து இயல்பு நிலை திரும்புகிற வரை அனைத்து வகையான கடன் வசூலையும் ஒத்திவைக்க வேண்டும். மேலும் இக்காலத்திற்கான வட்டித்தொகையினையும் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறதே...
இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. ரிசர்வ் வங்கி இரண்டு வருடங்கள் வரை கொடுக்கலாம் என்று விதிகளில் இருப்பதாக சொல்லியிருக்கிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுதொடர்பாக வங்கி இயக்குநர்களிடம் விரைவில் பேச இருக்கிறார். உறுதியாக இந்த விஷயத்தில் முடிவு எட்டப்படும்.
பல வருடங்களாக கட்சியில் இருப்பவர்களுக்கு, மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உயரிய பொறுப்புகள் கிடைக்கவில்லை. கட்சியில் சேர்ந்த உடனேயே அண்ணாமலைக்கு துணை தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே...
இது முழுக்க முழுக்க எங்கள் கட்சி சார்ந்த விவகாரம். அண்ணாமலை நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தவர். இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார். தமிழகத்தில் 40 விழுக்காடுக்கு மேல் எங்கள் கட்சியில் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்துவதற்கு அவர் ஒரு சரியான நபராக இருப்பார் என்பதால் அவருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது. எங்கள் கட்சியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பணிகள் இருக்கிறது. அந்த வகையில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் கட்சிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.