Skip to main content

பாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

சாமியார்கள் என்ற முகமூடி இருந்தால் போதும். சர்வசாதாரணமாக குண்டுவெடிப்புகளை நிகழ்த்தலாம். உயிர்களைப் பறித்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நிலை இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று சட்டத்துறை அறிஞர்களே பதற்றம் அடையும் நிலையை பாஜக ஏற்கெனவே செய்துகாட்டியது.
 

N I A BJP


ஏற்கெனவே, நீதித்துறையை பாஜக கைப்பற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் நிலையில், புதிதாக அச்சப்படும் நிலையில் அப்படி என்ன செய்தது என்றுதானே கேட்கிறீர்கள்? அதைப்பற்றி பிறகு பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து அந்த தாக்குதலை விசாரிக்க சிறப்பு அதிகாரங்களுடன் என்ஐஏ என்ற புதிய அமைப்பை அன்றைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு உருவாக்கியது. அந்த அமைப்பு மும்பைத் தாக்குதலை மட்டுமின்றி, இந்தியாவுக்குள் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலையும் விசாரிக்கத் தொடங்கியது.

இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் என்று கருதி விசாரணை நடத்தப்பட்ட பல வழக்குகளில் இந்துச் சாமியார்கள்தான் சிக்கினார்கள். இதையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்களை பிறகு பார்க்கலாம். அதற்கு முன் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரங்களை விரிவுபடுத்தி மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருக்கும் செய்தியை அறிந்து கொள்வோம்.

ஏற்கெனவே என்ஐஏ விசாரித்து முடித்த வழக்குகளில் இருந்து பல சாமியார்களை பாஜக அரசு விடுவித்திருக்கிறது. விடுதலையாகாத பிரக்யா என்ற பெண் சாமியாரை மக்களவை உறுப்பினராகவே ஆக்கியிருக்கிறது பாஜக. இப்படிப்பட்ட நிலையில் என்ஐஏவிற்கு ஏன் கூடுதல் அதிகாரம் கொடுக்கிறது பாஜக?
 

N I A BJP


பாஜகவின் நோக்கத்தை சந்தேகம் எழுப்பி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்ப்பை மீறி பாஜக இந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீதும், இந்திய சொத்துக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள், சைபர் தீவிரவாதம், ஆயுதம் மற்றும் மனிதர்களை கடத்தும் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்கும் வகையில் இந்தச் சட்டத்திருத்தம் வகை செய்திருக்கிறது.

இந்தச் சட்டத்திருத்தம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மிரட்டும் வகையிலும் அரசுக்கு எதிரானவர்களை மிரட்டும் வகையிலும் செய்யப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கூறியிருக்கிறது. இந்தியா முழுவதும் போலீஸ் ராஜ்ஜியம் நடத்தவும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் இந்தச் சட்டத்திருத்தம் பாஜகவுக்கு உதவியாக அமைந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்த மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். அவருடைய உறுதியை எந்தளவுக்கு நம்பலாம் என்பதை ஏற்கெனவே நாட்டு மக்கள் நன்றாக அறிந்தே வைத்திருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆட்சிக் காலத்தில் என்ஐஏவை எப்படி பாஜக அரசு தனது இஷ்டத்துக்கு ஆட்டிப்படைத்தது என்பதற்கு சில உதாரணங்களை பார்க்கலாமா?

2007ம் ஆண்டு மே 18 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட, சாமியார் அசிமானந்தா உள்ளிட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்த இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்து 9 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர்.
  N I A BJP


இந்த நிகழ்வை விசாரித்த சிபிஐ, இஸ்லாமியர்கள் பலரை கைது செய்து பல மாதங்கள் காவலில் வைத்தது. முடிவில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகுதான் முந்தைய பல குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அசிமானந்தா என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்தவர் நப குமார் சர்க்கார். பாட்டனி படித்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சிபெற்றவர். தனது பெயரை அசிமானந்தா என்று மாற்றிக்கொண்டு, தன்னை ஒரு சாமியார் என்றும் அறிவித்துக் கொண்டார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் மலேகான் தர்கா, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்கா, பாகிஸ்தான் செல்லும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் இவர் முக்கியமானவர் என்று கருதப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை பல இடங்களில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

குண்டுவெடிப்புகள் என்றாலே இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது எழும் சந்தேகத்தின் அடிப்படையில் அதிரடிப்படையினர் இஸ்லாமியர்கள் சிலரை கைது செய்து விசாரணை நடத்தியது.
 

NIA BJP


2006 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, மகாராஸ்டிரா மாநிலம் மாலேகானில் பள்ளிவாசல் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.

2007 பிப்ரவரி 18 ஆம் தேதி நள்ளிரவு டில்லியிலிருந்து லாகூர் செல்லும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 64 பேர் பலியாகினர்.

2007ம் ஆண்டு மே 18 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்து 9 பேர் உயிரிழந்தனர்.

2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அஜ்மீரில் உள்ள தர்காவில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பிரசாரக் சுனில் ஜோஷி மத்தியப்பிரதேசத்தில் கொல்லப்பட்டார். மாலேகான், சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான பெண் சாமியார் பிரக்யாவுக்கு வேண்டியவரான இவர், அவரிடம் தகாதமுறையில் நடக்க முயன்றதால் கொல்லப்பட்டதாக கண்டறியப்பட்டது.

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் மாலேகானில் 3 குண்டுகள் வெடித்து 7 பேர் பலியாகினர்.

2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய இரவு கோவா மாநிலத்தில் உள்ள பானாஜியில் குண்டுவெடித்து ஒருவர் பலியானார். நரகாசுரன் விழாவில் கூடியிருந்த மக்களை குறிவைத்து இது நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இஸ்லாமிய பயங்கவாதிகளை சந்தேகித்த போலீஸ், பின்னர், சனாதன் சன்ஸதா என்ற இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தது.
  NIA BJP


2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் அரசு அமைத்த பின்னர், என்ஐஏ இணையதளத்தில் இந்துப் பயங்கரவாதம் என்ற தலைப்பில் இருந்த வழக்குகள், இதர குழுக்கள் என்ற தலைப்புக்கு மாற்றப்பட்டன.

இதையடுத்து, இந்துப் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மென்மையான போக்கை கையாளுமாறு தான் மிரட்டப்படுவதாக, சிறப்பு மத்திய அரசு வழக்கறிஞரான ரோஹினி சாலியன் பகிரங்கமாக தெரிவித்தார். இந்நிலையில்தான், பாஜக அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக என்ஐஏவை பயன்படுத்தி வழக்குகளை சீர்குலைக்கும் என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தார்.

அவர் இப்படிக் கருத்துக் கூறி இரண்டே வாரங்களில், சுனில் ஜோஷி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்சாமியார் பிரக்யாவை தேவாஸ் நீதிமன்றம் விடுவித்தது. அதைத்தொடர்ந்து மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்தும் பிரக்யா மற்றும் 5 இந்து பயங்கரவாதிகளை என்ஐஏ விடுவித்தது. அதுபோல, அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளிலும் பல சாட்சிகள் மிரட்டப்பட்டு பிறழ்சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

அதாவது 9 வழக்குகளில் 4 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு, மூவர் தவிர அனைத்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர். ஒரு வழக்கில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் முடித்து வைக்கப்பட்டது. நிலுவையில் உள்ள 4 வழக்குகளின் கதி என்னவென்று யூகிக்க முடியாதா என்ன?