பொருளாதாரத்தில் இந்தியா பெரும் சரிவை சந்திப்பதை திசை திருப்பவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, ப.சி. கைது என பா.ஜ.க. சீன் போடுகிறது' என விமர்சனம் எழுந்த நிலையில், கடந்தவாரம் திடீரென மீடியாக்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளுக்கு எழுபதாயிரம் கோடி ரூபாய் மறுமுதலீடாக அளிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தோடு மற்ற வங்கிகளின் வட்டி விகிதம் இணைக்கப்படும். கார்களை உற்பத்தி செய்யும் ஆட்டோமொபைல் துறைக்கு உதவிகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் பழைய கார்களை மாற்றி புதிய கார்கள் வாங்க அனுமதி அளிக்கப்படும். கார்களுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நீக்கப்படும். புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் நீக்கப்படும். மூலதன ஆதாயத்தின் வரிகளுக்கு மேலான சர்சார்ஜ் நீக்கப்படும். சமூக பொறுப்புகளில் சமூக நிறுவனங்கள் நடத்தும் விதிமீறல்கள் தண்டிக்கப்பட மாட்டாது'' என அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் "பொதுத்துறை வங்கிகளுக்கு மறு முதலீடாக அளிக்கப்படும் 70,000 கோடி ரூபாய் என்பதைத் தவிர வேறெதுவும் ஆரோக்கியமாக இல்லை' என்ற விமர்சனம் எழுந்தது. ""இல்லவே இல்லை. மற்றவர்கள் சொல்வது போல இந்திய பொருளாதாரம் பலவீனமாக இல்லை. அமெரிக்காவை விட, சீனாவை விட இந்திய பொருளாதாரம் ஆரோக்கிய மானதாகவே உள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய அறி விப்புகள் பழைய பணப் புழக்கத்தை அதிகரிக்கும்'' என பதிலளித்தார் நிர்மலா.
இந்திய பொருளாதாரத்தை மிகவும் பலவீனப்படுத்திக் கொண் டிருக்கும் கிராமப்புற பொருளா தாரத்தை மேம்படுத்த எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரவில்லை. ரியல் எஸ்டேட் துறையில் பல கோடி மக்கள் வேலை செய்கிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அதில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்திருந்த ஒக & எந என்கிற கம்பெனியும் தேவான் ஹவுசிங் & பைனான்ஸ் நிறுவனம் ஆகியவை 60,000 கோடி பணப்புழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த நிறுவனங்களின் சரிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதைப் பற்றி நிர்மலாவின் அறிவிப்பில் எதுவுமில்லை.
சரிவை ஈடுகட்ட இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார்கள். அதனால் தங்கம் விலை ஒரு சவரன் 32,000 என உயரும் என்கிற எதிர்பார்ப்பு வந்துள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். பா.ஜ.க. ஆட்சியில் ஏற்பட்டுள்ள சரிவுகளை சரி செய்யாமல், மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இந்தியா 10.08 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது என அரசு வெளியிட்ட பதிவுகளை அழிக்கும் வேலையை செய்வதில் கவனம் திரும்பியுள்ளதாம்.